‘பேக் டூ பேக்’ மீட்டிங்.. ஆளுநருக்கு ஸ்கெட்ச்? டெல்லி இருக்கட்டும்.. பக்கா பிளானோடு இறங்கும் திமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான திமுக அரசின் மோதல் போக்கு, சட்டப்பேரவையில் நேருக்கு நேராகவே வெடித்துக் கிளம்பிய நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றி மூத்த நிர்வாகிகளுடனும், முக்கிய அமைச்சர்களுடனும் ஆலோசித்துள்ளார் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஸ்டாலின். நேற்று எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் ஆலோசித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அதன் அடிப்படையில், சில முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறது திமுக.

ஆளுநர் உரையில் ஆளுநர் ரவி பல்வேறு முக்கிய அம்சங்களை தவிர்த்தது, பாதியிலேயே அவையில் இருந்து வெளியேறியது ஆகியவை குறித்து அன்று மாலையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நேற்று, திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆளுநரின் நடவடிக்கைகள் பற்றி பிரதானமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், கூட்டணி கட்சித் தலைவர்களுடனும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

பின்னர், சட்டப்பூர்வமாக ஆளுநர் விவகாரத்தில் என்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்தெல்லாம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்துள்ளதாகத் தெரிகிறது. அதன்படியே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து ஆளுநருக்கு எதிராக முறையிட திமுக எம்.பிக்கள் டெல்லி சென்றுள்ளனர்.

ஆளுநர் vs அரசு

ஆளுநர் vs அரசு

தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. நீட் விலக்கு மசோதாவில் தொடங்கிய பிரச்சனை தற்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா வரை நீடித்து வருகிறது. 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருகிறார் ஆளுநர் ரவி. இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் அரசு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் ஆளுநர் ரவி, ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை பரப்பி வருவதும், ஆளுங்கட்சியான திமுகவை கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. திமுகவை சீண்டும் வகையில் திராவிடம் பற்றி விமர்சித்தும் ஆளுநர் ரவி பேசி வருகிறார்.

பாதியில் வாக் அவுட்

பாதியில் வாக் அவுட்

இந்தநிலையில் கடந்த 9ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாகப் படிக்காமல் ஒரு சில பகுதிகளை தவிர்த்தும், தானே கூடுதலாக சில வார்த்தைகளைச் சேர்த்தும், பேசியிருந்தார். இந்தச் சம்பவம் ஆளும் கட்சியான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதனையடுத்து ஆளுநரின் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து முதலமைச்சர் பதிலடி கொடுத்தார். இதனையடுத்து சட்டப்பேரவையில் இருந்து பாதியிலேயே ஆளுநர் வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இலட்சினை

இலட்சினை

சட்டப்பேரவைக்குள்ளேயே மோதலாக வெடித்த இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்ததாக ஆளுநர் மாளிகை சார்பாக அச்சடிக்கப்பட்டுள்ள தைப் பொங்கல் விழா அழைப்பிதழ் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருநாள் விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி என அச்சடிக்கப்பட்டிருந்தது. தற்போது பொங்கல் பண்டிகை அழைப்பிதழில் தமிழக ஆளுநர் என அச்சடிக்கப்பட்டு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதுவரை தமிழ்நாடு அரசின் முத்திரையை பதிவு செய்து வந்த நிலையில், இந்த அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலட்சினை புறக்கணிக்கப்பட்டு இந்திய அரசின் முத்திரை இடம்பெற்றுள்ளது.

மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை

மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழ்நாடு அரசு முத்திரையில் தமிழ்நாடு என இருப்பதால் அதனை ஆளுநர் ரவி தவிர்த்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையே, ஜனவரி 9ஆம் தேதி மாலையே, ஆளுநர் உரையில் ஆளுநர் பல்வேறு அம்சங்களை தவிர்த்தது, பாதியிலேயே வெளியேறியது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா?

சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமா?

அப்போது, ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு தயாரித்து வழங்கிய உரையை முழுமையாக வாசிக்காமல் தவிர்த்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாமா என்பது பற்றியும் ஆலோசித்துள்ளனர். ஆளுநர் வாசித்த உரையை அவை நடவடிக்கையின்படி, முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டோம். இப்போது நாம் உச்ச நீதிமன்றம் செல்வது சரியாக இருக்காது. ஆளுநர் ரவி வாசித்த உரையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை எதிர்த்து பாஜகவினர் யாராவது நீதிமன்றம் சென்றால் அங்கு பார்த்துக் கொள்ளலாம், நாமாகச் செல்ல வேண்டாம், ஆனால், சட்ட நடவடிக்கைகளுக்குத் தயாராகவே இருக்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி பறந்த முக்கிய நிர்வாகிகள்

டெல்லி பறந்த முக்கிய நிர்வாகிகள்

மேலும், ஆளுநருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஆளுநருக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம் முறையிடலாம் என திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக நேற்று பிற்பகலிலேயே திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டிஆர் பாலு, துணைத் தலைவர் கனிமொழி, மக்களவை கொறடா ஆ.ராசா உள்ளிட்ட எம்.பிக்கள் டெல்லி சென்றனர். குடியரசு தலைவர், திமுக எம்.பிக்களைச் சந்திக்க நேரம் ஒதுக்கும் பட்சத்தில் ஆளுநருக்கு எதிராக புகார்களை பட்டியலிட்டு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எப்படியாவது

எப்படியாவது

ஏற்கனவே, ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதால் அவரை திரும்பப் பெறக் கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனுவை குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் அளித்தனர். அப்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்திக்க நேரம் கேட்டும் கிடைக்காததால், அலுவலகத்தில் மனுவை அளித்தனர். இந்நிலையில், தற்போது எப்படியாவது குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து ஆளுநர் ரவி பற்றி முறையிடுவது எனத் தீர்மானித்துள்ளனர்.

 கூட்டணி கட்சிகள்

கூட்டணி கட்சிகள்

இதுஒருபுறம் இருக்க, கூட்டணி கட்சிகள் மூலம் ஆளுநருக்கு எதிராக போராட்ட வடிவில் நெருக்கடி கொடுக்கவும் திமுக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. திமுக எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் யாரும் ஆளுநருக்கு எதிராக பேனர்கள் வைப்பது, போஸ்டர்கள் ஒட்டுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ட்விட்டரில் ட்ரெண்டான "கெட் அவுட் ரவி" என்ற வாசகத்தை வைத்து ஆளுநருக்கு எதிராக திமுகவினர் போஸ்டர் ஒட்டியிருந்த நிலையில் முதல்வர் இவ்வாறு அறிவுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநருக்கு எதிராக

ஆளுநருக்கு எதிராக

திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நிறைவடைந்ததும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆளுங்கட்சியான திமுக, ஆளுநருக்கு எதிராக போராட்டங்களில் நடத்துவது சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், கூட்டணி கட்சிகள் போராட்டங்களை முன்னெடுக்க திமுக மறைமுக ஆதரவு தரும் எனக் கூறப்படுகிறது. ஆளுநரின் செயல்களைக் கண்டித்து ஜனவரி 20ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஐஎம் அறிவித்துள்ளது. விசிக சார்பாக ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் கல்லூரிகளில் ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+