கொரோனா பரவல் அதிகரிப்பு...பண்டிகையில் கூட்டம் கூட வேண்டாம் - டாக்டர் ராதாகிருஷ்ணன்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்ததாகவும் அதில் ஒருவர் மரணம் அடைந்து விட்டதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை: கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார். பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமால் தனிமையிலேயே கொண்டாடுங்கள் என்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவிய போது தினசரி பாதிப்பு 20ஆயிரத்தைக் கடந்தது. கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதால் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
தமிழக அரசு கொரோனா தொற்று அதிகரிக்காமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. என்றாலும் சில மாவட்டங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கிறது.
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நோய் பரவல் கடந்த 2 வாரங்களாக அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, ஈரோடு, செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை, அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு
தமிழகத்தை பொறுத்தளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா தீவிரம்
தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தற்போது சில மாவட்டங்களில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4 மாவட்டங்களில் நாள்தோறும் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள்.

கோவை, திருப்பூர்
சென்னை, கோவை, செங்கல்பட்டு மற்றும் ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் தினசரி பாதிப்பு 100 ஐ கடந்துள்ளது. கொங்கு மண்டல பகுதிதிகளான கோவை, திருப்பூர், சேலம், ஈரோட்டில் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஈரோட்டில் தொற்று அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் பரவும் கொரோனா
சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் கூடிய கூட்டத்தில் 24 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது. அதில் ஒருவர் மரணம் அடைந்தார். பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தெரு தெருவாக சென்று விழிப்புணர்வு பிரசாரம் ஏற்படுத்தப்படுகிறது. என்றாலும் சிலர் முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

கூட்டம் கூட வேண்டாம்
வீட்டை விட்டு வெளியே செல்லும் போது பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் 38 சதவிகிதம் பேர் மட்டுமே முகக்கவசம் அணிகின்றனர். வரும் பண்டிகை காலங்களில் கூட்டம் சேராமல் தனிமையிலேயே கொண்டாடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

அலட்சியம் வேண்டாம்
தமிழகத்தில் மாவட்டங்களில் கடந்தசில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 4 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா இல்லை என்ற பூஜ்ஜியம் இலக்கை எட்ட பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. பொதுமக்கள் அலட்சியமாக செயல்பட்டால் கொத்து கொத்தாக கொரோனா பரவும் ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

குணமடைபவர் விகிதம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பால் நேற்றைய தினம் 27 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கோவையில் அதிகபட்சமாக கொரோனாவுக்கு 5 பேர் இறந்துள்ளனர். சேலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டில் தலா 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 34,367 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து மேலும் 1,930 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 25,24,400 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் விகிதம் அதிகமாக இருக்கிறது.

எந்த மாவட்டத்தில் அதிகம்
கோவையில் மட்டும் 224 பேருக்கு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 105 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 169 பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 35 பேருக்கும், மதுரையில் 20 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 29 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், திருச்சியில் 68 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. திருப்பூரில் 71 பேருக்கும்,நாமக்கல்லில் 45 பேருக்கும், தஞ்சாவூரில் 97 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Recommended Video

பண்டிகை காலத்தில் கவனம்
ஆடி மாதம் பண்டிகை நாட்களில் கோவில்களில் கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆவணி மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை வரிசையாக பண்டிகைகள் உள்ளன. மகாளய அமாவாசை, நவராத்திரி, தீபாவளி, பண்டிகைகள் வர உள்ளதால் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications