"சரசரவென சரியும் தங்கம் விலை.." இப்போ வாங்கலாமா இன்னும் குறையுமா. ஆனந்த் சீனிவாசன் என்ன சொல்கிறார்
சென்னை: தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது குறித்து ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும்? இன்னும் விலை குறையுமா? என்ற கேள்விகளுக்கான பதிலை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பொருளாதாரம் குறித்தும் சேமிப்பு குறித்தும் எளிய மக்களுக்குப் புரியும்படி தொடர்ந்து பேசி வருபவர்களில் முக்கியமானவர் ஆனந்த் சீனிவாசன். இவரது பல பேச்சுகளை நாம் இணையத்தில் பார்த்து இருப்போம்.

பெரும்பாலும் சேமிப்பு குறித்த இவரது பேச்சுகள் தடாலடியாகவே இருக்கும். முதலில் "இதெல்லாம் சாத்தியமா.. வாய்ப்பே இல்லை.." எனத் தோன்றினாலும் அதன் பின்னர் மெல்ல யோசித்துப் பார்த்தால் அவர் சொல்வது சரிதானே என்றே உணர்வோம்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட் குறித்த வீடியோ மூலமே இணையத்தில் டிரெண்ட் ஆனவர். அதில் சென்னையில் ஒரு குடும்பத்திற்கு ஆகும் செலவுகளைப் பட்டியலிட்டவர், ஒரு குடும்பத்திற்கு 40 ஆயிரம் சம்பளம் இல்லையென்றால் திருமணமே செய்து கொள்ள வேண்டாம் என்றவர். ஏற்கனவே 90ஸ் கிட்ஸ் திருமணத்திற்குப் பெண் தேடிச் சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் பயங்கர டிரெண்ட் ஆனது.
இது சொல்லி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது விலைவாசி உயர்ந்துவிட்ட நிலையில், மீண்டும் திருமணம் செய்து கொள்ள எத்தனை வருமானம் தேவை என வீடியோ பகிர்ந்திருந்தார். அதில் இப்போது சென்னையில் குடும்பம் நடத்த 55,000 முதல் 60 ஆயிரம் தேவை என்று குறிப்பிட்டிருந்தார். அந்த சம்பளம் இல்லை என்றால் திருமணத்தைப் பற்றி யோசிக்கவே வேண்டாம் எனக் கூறியிருப்பார்.

இது சென்னையில் குடும்பத்தை நடத்த ஆகும் செலவு தான். திருச்சி, கோவை என இரண்டாம் கட்ட நகரங்களில் செலவு கணிசமாகக் குறையும். அதேபோல இது ஒரு நபருக்கான வருமானம் இல்லை. குடும்பத்திற்கான வருமானம். அதாவது கணவர் மனைவி என இருவரும் வேலைக்குச் சென்று இந்தச் சம்பளத்தை எட்ட வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருந்தது. எதை அவர் எப்போது விமர்சித்தாலும் தங்கத்தை மட்டும் எப்போதும் வாங்க வேண்டும் என்றே அவர் கூறி வருகிறார்.
ஏனென்றால், மிடில் கிளாஸ் மக்களுக்கு ஆபத்து நேரத்தில் தங்கம் மட்டுமே உதவும் என்பது அவரது வாதம். பங்குகள், நிலம் ஆகியவற்றை காட்டிலும் தங்கத்தை எளிதாகப் பணமாக மாற்றலாம். நொடிகளில் தங்கத்திற்கு லோன் தர வங்கிகள் காத்துக்கிடக்கிறது. அதேபோல போர் உள்ளிட்ட நேரங்களிலும் கூட தங்கத்தை எடுத்துச் சென்றால் வேறொரு நாட்டில் கூட சென்று பிழைத்துக் கொள்ளலாம் என்பது அவரது வாதமாக இருக்கிறது.
இதனால் ஒவ்வொரு குடும்பமும் குறைந்தது 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என்றே அவர் தொடர்ந்து கூறி வருகிறார். இதற்கிடையே சில மாதங்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 200 ரூபாய் வரை தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை வரும் காலத்தில் எப்படி இருக்கும். இன்னும் விலை குறையுமா. தங்கத்தை வாங்க இதுதான் பெஸ்ட் டைமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதற்கிடையே இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது புதிய வீடியோவில் விளக்கியுள்ளார். அதில் அவர் தங்கத்தின் விலை 5,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார். அடுத்த 18 மாதங்களுக்குத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறையாகவே இருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த ஆனந்த் சீனிவாசன், இதனால் முடிந்தவரைத் தங்கத்தை வாங்க இது சிறந்த நேரம் எனக் குறிப்பிட்டார்.
துல்லியமாகத் தங்கம் இந்த அளவுக்குக் குறையும் எனக் கணிப்பது கடினம் எனக் குறையக் குறையத் தங்கத்தை வாங்குவதே சரியானதாக இருக்கும். தங்கம் குறுகிய காலத்தில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் கூட நீண்ட கால நோக்கில் தொடர்ந்து அதிகரித்தே வந்துள்ளது. எனவே, தங்கத்தில் முதலீடு செய்வது என்பது நமது எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக மாற்றும்.












Click it and Unblock the Notifications