என்னா ஆட்டம்.. ஒரு வழியா ஓய்ஞ்சுருச்சுப்பா! ‘ஃபியூஸ் போன’ மாண்டஸ் புயல் -இப்ப எங்க இருக்கு தெரியுமா?
சென்னை: மாமல்லபுரம் அருகே கரையை கடந்த மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்து மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே நள்ளிரவு அதிவேக காற்றுடன் கரையைக் கடந்தது. இதனால் கடல் நீர் வீடுகளுக்குள் புகுந்தன.
பலத்த காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விசைப்படகுகள் கடலில் மூழ்கி சேதமடைந்தன. சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மரங்களில் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

பலத்த மழை
அதேபோல் தமிழ்நாடு முழுவதும் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இருப்பினும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், ஊழியர்கள் நேரில் சென்று பார்வையிட்டு உடனுக்குடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

கரையை கடந்த புயல்
நள்ளிரவு கரையை கடந்த மாண்டஸ் புயல் சென்னையின் உள்பகுதிகள், வட மாவட்டங்களுக்கு நகரத் தொடங்கியதால் அப்பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த நிலையில் நேற்று கரையை கடந்த மாண்டஸ் புயல், தற்போது வலுவிழந்துவிட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

வலுவிழந்த புயல்
ஏற்கனவே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக வலுவிழந்த மாண்டஸ் புயல், தற்போது மண்டலத்தில் இருந்து காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழந்து உள்ளது. இதனை தொடர்ந்து இந்த புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் இந்த புயல், காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

3 மணி நேரம்
இந்த நிலையில் கடந்த 6:45 மணியளவில் வெளியான வானிலை அறிக்கையில், "வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நள்ளிரவு கரையை கடந்த நிலையில் அடுத்த 3 மணி நேரம் சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும்
மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது." தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாளை எங்கு மழை பெய்யும்?
நாளை (11.12.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

எத்தனை நாள் மழை?
12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.












Click it and Unblock the Notifications