மாண்டஸ் புயல்.. 14 அடி உயரும் மெரினா அலைகள்.. மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதமாகிப்போன சோகம்
சென்னை: மாண்டஸ் புயலின் தாக்கம் காரணமாக கடல் அலைகள் ஆக்ரோஷமாக உள்ளதால் மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதையும் சேதமடைந்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் மாண்டஸ் புயல் ஆக்ரோஷமாக நிலை கொண்டுள்ளது. இது இன்று சூறாவளி புயலாக மாறுகிறது. இன்று நள்ளிரவு முதல் நாளை காலைக்குள் புதுவை- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கிறது.
இந்த சூறாவளி புயல் புயலாக வலுவிழந்து கரையை கடக்கிறது. இதனால் காற்றின் வேகம் 100 கிமீ. வேகத்திற்கு வீசும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது.
மாண்டஸ் புயல் எங்கே? கரையை கடக்கும் இடம் எங்கே? கடற்கரைகளின் நிலை என்ன?

பழவேற்காடு
பழவேற்காடு, மெரினா, காசிமேடு, பட்டினப்பாக்கம், மகாபலிபுரம், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் 14 அடி உயரத்துக்கு எழுகின்றன. இதனால் மெரினா கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்கரைக்கு செல்ல தடை
எனினும் அதையும் மீறி சிலர் அந்த கடற்கரைக்கு சென்ற வண்ணம் இருக்கிறார்கள். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி அங்கிருந்து வெளியேற்றி வருகிறார்கள். கடல் சீற்றத்துடன் காணப்படும் போது செல்பி எடுப்பது, கடல் அலைகளில் விளையாடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் போலீஸார் அவர்களை வெளியேற்றி வருகிறார்கள்.

மெரினா கடற்கரை
மேலும் மெரினா கடற்கரைக்கு நாளை காலை வரை யாரும் வர வேண்டாம் என்வும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் மெரினாவுக்கு சென்று கடல் அலைகளில் விளையாட முடியாத நிலை இருந்தது. என்னதான் சக்கர நாற்காலிகள் இருந்தாலும் மணல் திட்டுக்களில் அவர்களை அழைத்து வர முடியாத சூழல் இருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை
இந்த நிலையில் மாற்றுத்திறனாளிகளும் கடல் அன்னையின் அன்பை பெற வேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மரப்பாதை ரூ 1.14 கோடியில் அமைக்கப்பட்டது. இது பயனாளிகளுக்காக கடந்த மாதம் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. இந்த பாதையில் பொதுமக்களும் சென்று வருவதால் அங்கு ஒரு போலீஸ்காரர் நிறுத்தப்பட்டு அவர்களை தடுத்து வருகிறார்.

ஒரு வாரத்தில் சேதம்
இந்த பாதை வழியாக எத்தனையோ மாற்றுதிறனாளிகள், நடக்க முடியாத முதியவர்கள், கடற்கரை நீரில் விளையாடி மகிழ்ந்தனர். ஆனால் இந்த மரப்பாதை தற்போது மாண்டஸ் புயலின் தாக்கத்தால் சேதமடைந்துவிட்டது. கடல் சீற்றம் காரணமாகவும் அதன் வேகம் காரணமாகவும் மணலில் நடப்பட்டிருந்த கட்டைகள் சேதமடைந்து உடைந்துவிட்டன. பயனாளிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு ஒரு வாரத்திற்குள் மரப்பாதை சேதமடைந்துவிட்டது.
அனைவரின் பாராட்டையும் பெற்ற இந்த மரப்பாதை மற்ற கடற்கரைகளிலும் கொண்டு வர அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில் மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதமடைந்த நிலையில் அது விரைவில் சீரமைக்கப்படும் என சென்னை மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.