• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மோடி பதவியேற்று 7 ஆண்டு நிறைவு- மே 26 கறுப்பு நாள்- விவசாயிகள் போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு: வைகோ

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்று 7-ம் ஆண்டு நிறைவடையும் மே 26-ந் தேதியை கறுப்பு நாளாக கடைபிடிக்குமாறு டெல்லியில் போராடும் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள போராட்டத்துக்கு மதிமுக ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: 2014 மே மாதம் 26 ஆம் தேதி, பா.ஜ.க. அரசு பொறுப்பு ஏற்று. நரேந்திர மோடி இந்தியாவின் 14 ஆவது பிரதமராகப் பதவி ஏற்றார். மே 26 ஆம் தேதி ஏழு ஆண்டுகளை நிறைவு செய்கின்றார். அதற்குள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஆட்சியே கேள்விக்குறி ஆகிவிட்டது. நாடாளுமன்ற ஜனநாயகம் ஆழக் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டது. மக்கள் ஆட்சியின் மாண்புகள் சீர்குலைக்கப்பட்டன.

ஜனநாயகத்தின் தூண்களான நீதித்துறையும், பத்திரிகை, ஊடகத் துறையும் மிரட்டப்படுகின்றன. நிர்வாகத்துறையில் முழுக்க முழுக்க 'காவி பாசி' படர்ந்து வருகின்றது. நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே கல்வி என்று ஒற்றைத் தன்மையைத் திணித்து, இந்து - இந்தி - இந்துராஷ்டிரா எனும் இந்துத்துவ சனாதன சக்திகளின் நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்திட, ஆட்சி அதிகாரத்தை மோடி அரசு பயன்படுத்தி வருகின்றது.

ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்- பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிப்பால் பதற்றம் ஹரியானாவில் இன்று விவசாயிகள் போராட்டம்- பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிப்பால் பதற்றம்

பாஜக அரசின் ஒடுக்குமுறை

பாஜக அரசின் ஒடுக்குமுறை

தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்து ஆடுகின்றன. பா.ஜ.க. அரசு, மதத்தின் அடிப்படையில் குடி உரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி, மக்களைப் பிளவுபடுத்தி வருகின்றது. ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ சனாதனக் கருத்தியலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள், சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குப் புனைந்து ஆண்டுக் கணக்கில் சிறையில் தள்ளப்படும் கொடுமைகள் தொடர்கின்றன.

நீர்த்து போகும் இடஒதுக்கீடு கோட்பாடு

நீர்த்து போகும் இடஒதுக்கீடு கோட்பாடு

பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மற்றும் பழங்குடியினரின் சமூக நீதி உரிமை பறிக்கப்பட்டு, இடஒதுக்கீடுக் கோட்பாட்டையே நீர்த்துப் போகச் செய்து விட்டது. பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைகளால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதலபாதாளத்திற்குப் போய்க்கொண்டு இருக்கின்றது. ஜி.எஸ்.டி., பண மதிப்பு இழப்பு போன்றவைகளால் ஏற்பட்ட வீழ்ச்சிகளில் இருந்து இன்னும் உற்பத்தி தொழில்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மீள முடியவில்லை. பல்லாண்டுக் காலம் போராடிப் பெற்ற தொழிலாளர்களின் சட்டப்படியான உரிமைகள் பறிபோய்விட்டன. கோடிக்கணக்கான அமைப்புச் சாரா தொழிலாளர்கள் வேலை இழந்து வாடுகின்றனர்.

டெல்லியில் ஒற்றையாட்சி

டெல்லியில் ஒற்றையாட்சி

நாட்டின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டு, உள்நாட்டு பெருமுதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன. அதற்காகவே சுற்றுச் சூழல் விதிகள் திருத்தப்பட்டு, இயற்கையின் சமநிலை அழிக்கப்படுகின்றது. மாநிலங்களின் உரிமைகள் அனைத்தையும் தட்டிப்பறித்து, அதிகாரம் முழுவதையும் டெல்லியில் குவித்து வைத்துக்கொண்டு ‘ஒற்றையாட்சி' ஆதிக்கம் செலுத்தும் மோடி அரசுக்கு எதிராக மாநிலங்களில் குமுறல் வெடித்துக் கிளம்பி உள்ளன. கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொடிய கொரோனா பெருந்தொற்றால் இலட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய்விட்டன. கொரோனா பெருந்தொற்றைத் தடுக்கவும், மக்களின் உயிர் காக்கவும், தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மோடி அரசு அலட்சியமாக செயல்பட்டத்தின் விளைவாக தற்போது கொரோனா இரண்டாவது அலையில் சிக்கி நாட்டு மக்கள் உயிருக்குப் போராடுகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறை, வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை, போதிய அளவு படுக்கைகள் இல்லாமை, தடுப்பு ஊசி பற்றாக்குறை போன்றவற்றால் எங்கு நோக்கினாலும் மக்கள் அச்சமும், பீதியும் பீடிக்கப்பட்டு, அவர்களின் மரண ஓலம் கேட்கின்றது.

மக்கள் விரோத விவசாய சட்டங்கள்

மக்கள் விரோத விவசாய சட்டங்கள்

இந்நிலையில்தான், மோடி அரசு, தனியார் பெரு நிறுவனங்களுக்கு ஆதரவான ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம், தனியார் பெரு நிறுவன உணவுப் பொருள் விற்பனை சந்தைக்கு ஆதரவான அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், அரசின் விவசாய விளைபொருட்கள் கொள்முதல் நிறுவனங்களை ஒழித்துவிட்டு, தனியாரிடம் நேரடியாக விற்பனை செய்வதற்கு நிர்பந்திக்கும் சட்டம் போன்ற மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது. மோடி அரசின் வேளாண் பகைச் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 26 முதல் டெல்லியில் இலட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு அறவழியில் கடந்த ஆறு மாதங்களாகப் போராடி வருகின்றனர். மோடி அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் பகைச் சட்டங்கள் திரும்பப் பெறும்வரை போராட்டம் நீடிக்கும் என்று பிரகடனம் செய்து வெயில், மழை, கடுங்குளிர் எதையும் பொருட்படுத்தாமல் உறுதி குன்றாமல் போராடும் விவசாயிகள் போராட்டம் உலகம் முழுவதும் பேராதரவைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டக் களத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்கள் உயிரை தாரைவார்த்து உள்ளனர்.

விவசாயிகளின் கறுப்பு தின போராட்டம்

விவசாயிகளின் கறுப்பு தின போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா' எனும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர்கள் நரேந்திர மோடி பிரதமர் பதவி ஏற்று, 7 ஆண்டுகள் நிறைவு அடையும் நாளான மே - 26 ஆம் தேதியை ‘கருப்பு நாளாக' கடைபிடிக்க வேண்டும் என்று பிரகடனம் செய்துள்ளனர். அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவும், மே 26 ஆம் நாள் ‘கருப்பு நாள்' போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்து இருக்கின்றது. பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் மே -26 இல் ஒன்றிணைந்து கருப்பு நாள் கடைப்பிடிப்போம்! இப்போராட்டத்திற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், ஆதரவை வழங்குகின்றது. இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி ஆதரவு

ஆம் ஆத்மி ஆதரவு

இதேபோல் மே 26-ந் தேதி கறுப்பு தின போராட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தருவதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக ஏற்கனவே திமுக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
MDMK declared its support to the Farmer's May 26 nationwide protest call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X