"பாஜகவில் சேர்கிறார் மு.க.அழகிரி.." கட்சிக் கூட்டத்தில் சொன்ன ராதாகிருஷ்ணன்! ஒரே கரகோசம்.. என்னவாம்?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி, தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருந்தாலும் பாஜக அவரை விடுவதாக இல்லை.
பாஜக கட்சியில் அழகிரி சேர உள்ளார் என்ற தகவல் மீண்டும் கிளம்பியுள்ளது. அல்ல.. அல்ல.. கிளப்பப்பட்டுள்ளது. அதுவும், அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் இவ்வாறு பொது வெளியில் பேசியுள்ளார்.
'மக்கள் ஆசி யாத்திரை' என்ற பெயரில் பாஜக சார்பில் தமிழகத்தில் யாத்திரை நடைபெற்று வருகிறது.

மக்கள் ஆசி யாத்திரை
மத்திய அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் நேரடியாக கொண்டு செல்லும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், மக்கள் ஆசி யாத்திரையை கடந்த 16ம் தேதி கோவையில் தொடங்கி வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார் முருகன்.

திருச்செங்கோட்டில் நிகழ்ச்சி
மக்கள் ஆசி யாத்திரையின் ஒரு பகுதியாக, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பலர் நேற்று கலந்து கொண்டனர்.

தாமரை மலரப்போகிறது
இந்த நிகழ்ச்சியில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் தாமரை மலரப்போகும் நாள் உருவாக போகிறது என்று ஒரே போடாக போட்டார். அந்த நாள் வரப்போகிறது என்பதற்கு உதாரணமாகத்தான் வி.பி.துரைசாமி, ராமலிங்கம் ஆகியோர் வந்து பறைசாற்றுகிறார்கள்.

அழகிரி வருகிறார்
விரைவில் மதுரையில் இருந்து அழகிரியும் பாஜகவில் இணைகின்ற நாளை நாம் உருவாக்குவோம். இப்போது தமிழகத்தில் 4 இடங்களை பெற்றுள்ள நாம் 140 இடங்கள் பெறும் வரை அயராது உழைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் கரகோசம் அடங்க சில நிமிடங்கள் பிடித்தது.

அழகிரி அதிரடி பேட்டி
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அழகிரி பாஜகவில் சேரப்போகிறார் என்ற யூகங்கள் பரவலாக றெக்கை கட்டி பறந்து கொண்டு இருந்தன. 2021ம் ஆண்டு ஜனவரி மாதம், தனது ஆதரவாளர்களை சந்தித்தார் அழகிரி. அப்போது, ஸ்டாலின் திமுகவின் வாரிசாக மாற தன்னை புறக்கணித்துவிட்டதாக குற்றம்சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தீவிர அரசியலுக்கு அழகிரி வரப்போகிறார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த பேட்டிக்கு பிறகு, அப்படியே அமைதியாகிவிட்டார் அழகிரி.

என் அண்ணன்
அழகிரி இப்படி ஒரு கூட்டத்தை நடத்தி ஆவேசமாக பேசிய அடுத்த மாதம்.. அதாவது பிப்ரவரி மாதம்.. தந்தி டிவியில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் பேட்டி கண்டனர். அப்போது ஒவ்வொரு தலைவர்கள் பற்றியும் ஒரு வரியில் பதில் அளிக்க வேண்டும் என்று ஸ்டாலினிடம் நெறியாளர் கேட்டுக் கொண்டார். ராகுல்காந்தி, சசிகலா, ஜெயலலிதா உள்ளிட்டோர் பற்றி எல்லாம் நெறியாளர் கேட்டபோது ஸ்டாலின் அதற்கு ஒரு வரியில் பதில் சொன்னார். அழகிரி என்று கேட்டதும் "என் அண்ணன்" என்று அழுத்தமாக சொன்னார் ஸ்டாலின். முரசொலி பத்திரிக்கையிலும் இந்த பேட்டி வெளியானது. அப்போதே மாற்றம் நடந்தது.
சிலர் எவ்வளவோ முயற்சி செய்தும் அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக திரும்பாமல் போனதற்கு குடும்ப உறவுகள் நடத்திய பேச்சுவார்த்தை முக்கிய காரணமாக இருந்துள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தயா அழகிரி
தேர்தலுக்கு பின்னர் ஸ்டாலின் மற்றும் அழகிரி தொலைபேசியில் பேசிக்கொண்டனர். பதவியேற்பு விழாவுக்கும் அழகிரிக்கு ஸ்டாலின் அழைப்புவிடுத்தார். இதில், அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி குடும்பத்தோடு கலந்துகொண்டார். ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின், தயா அழகிரியை கட்டியணைத்து விழாவிற்கு வரவேற்றார். இப்படி எல்லாமே சுமூகமாக போகும் நிலையில், அழகிரி பாஜகவிற்கு வருவார் என்று கூறியுள்ளார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

இதுதான் காரணமா
ஓஹோ.. உள்ளாட்சித் தேர்தல் விரைவில் வரப்போகுது இல்லையா.. அதனால்தான் பாஜக பழைய பல்லவியை பாடத் தொடங்கிவிட்டது போல என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள், இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அரசியல் விமர்சகர்கள்.












Click it and Unblock the Notifications