அரசியலே எனக்கு பிடிக்கவில்லை.. தமிழகத்தில் இனி அதிமுகவே இருக்காது.. போயஸ் கார்டனில் ஜெ தீபா பேட்டி
சென்னை: அதிமுக என்ற ஒரு கட்சியே இனி தமிழ்நாட்டில் இருக்காது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவையொட்டி ஜெயலலிதாவின் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அது போல் ஆண்டுதோறும் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ தீபாவும் அவரது கணவர் மாதவனும் அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த முறை ஜெ தீபாவுக்கு 11 ஆண்டுகள் கழித்து பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதிமுக அவைத்தலைவரின் ஆன்மிக பயணம்! எடப்பாடிக்காக தர்ஹா.. தர்ஹாவாக செல்லும் தமிழ் மகன் உசேன்!

தீபாவின் ஆதரவாளர்கள்
இந்த குழந்தையை தீபாவின் ஆதரவாளர்கள் ஜெயலலிதாவின் மறுபிறவி என்றே அழைக்கிறார்கள். இந்த நிலையில் தனது குழந்தையுடன் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கிறார் ஜெ தீபா. போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டிற்கு தனது கணவர் மாதவன், ஆதரவாளர்களுடன் சென்ற ஜெ தீபா அங்கு வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நூறாண்டுகள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தீபா கூறுகையில் "என்னுடைய மறைவுக்குப் பின்னால் நூறாண்டுகள் இந்த கட்சி இருக்கும்" என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார் ஆனால் நூறு நாட்கள் கூட இவர்கள் கட்சியை முறையாக வழிநடத்தவில்லை. ஜெயலலிதா மர்ம மரணம் விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்தது போல சசிகலாவின் மீது சட்டபூர்வமான நடவடிக்கை தேவை.

அரசியலுக்கு வர வாய்ப்பில்லை
எடப்பாடி, ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகிய இவர்கள் யாருமே அதிமுகவை வழிநடத்த தகுதியற்ற தலைமைகள். நான் மீண்டும் அரசியல் வர வாய்ப்பே இல்லை. எனக்கு ஒட்டுமொத்தமாக அரசியலை பிடிக்கவில்லை. தனித்தனி பிரிவுகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக இனி கால போக்கில் சிதைந்து தமிழ்நாட்டில் அதிமுக என்ற கட்சியே இல்லாத நிலை ஏற்படும்.

சுயநலம்
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொருவரும் தங்களுடைய சுயநலத்திற்காக பாடுபட்டு வருகின்றனர். கட்சியின் நலனுக்காக யாரும் பாடுபடவில்லை. ஜெயலலிதாவை போல் அதிமுகவை வழிநடத்த தலைவர்கள் யாரும் இல்லை என ஜெ தீபா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மறைந்தவுடன் அவரது முக அமைப்பு போல் உள்ள அவருடைய அண்ணன் மகள் தீபா வீட்டிற்கு அதிமுக தொண்டர்கள் குவிந்தனர்.

ஜெயலலிதா பிறந்தநாள்
ஜெ.தீபாவும் முதலில் ஓபிஎஸ்ஸுடன் இணைந்து அதிமுகவை வழிநடத்துவதாக அறிவித்தார். பின்னர் அந்த முடிவிலிருந்து பின் வாங்கினார். இதையடுத்து ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அரசியல் அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பில் தமிழகம் முழுவதும் உறுப்பினர்கள் சேர்ந்த நிலையில் அந்த அமைப்பும் கூண்டோடு கலைக்கப்பட்டது. ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த போது அந்த வேட்புமனுவில் ஏதோ தவறு இருந்ததாக கூறி தேர்தல் அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். இதன் பின்னர் அரசியல் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

போயஸ் தோட்டம்
பின்னர், போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்குவது குறித்த பிரச்சினையை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இறுதியில் வென்றார். ஆறுமுகசாமி ஆணையத்தில் பல்வேறு தகவல்களை அளித்துள்ள ஜெ தீபா, சசிகலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சசிகலா ஆணையத்தில் கூறிய தகவல்கள் பொய் என்றும் கூறியிருந்தார். தன்னை கண்டாலே அத்தைக்கு பிடிக்காது என சசிகலா கூறுவது சிறுபிள்ளைத்தனம் என்றும் கூறியிருந்தார்.