சசிகலாவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் திடீர் வாழ்த்து- அதிமுகவில் பரபரப்பு!
சென்னை: பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவுக்கு துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் திடீர் என வாழ்த்து சொல்லி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முதல்வராக ஓபிஎஸ் பதவியேற்றார். ஆனால் ஓபிஎஸ் பதவியை பறித்துவிட்டு முதல்வராக சசிகலா வியூகம் வகுத்தார்.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த ஓபிஎஸ், ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து தியானம் செய்து தர்மயுத்தம் தொடங்கினார். சசிகலாவுக்கு எதிரான இந்த தர்ம யுத்தத்தில் ஓபிஎஸ்- உடன் 11 எம்.எல்.ஏக்கள் இணைந்தனர்.
இதனையடுத்து தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்க வைத்தார் சசிகலா. ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சசிகலாவின் சிறை தண்டனை உறுதியானதால் கூவத்தூரிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வராக தேர்வு செய்தனர்.
பின்னர் சசிகலா சிறைக்கு செல்லும் போது ஓபிஎஸ்-க்கு எதிராக ஜெயலலிதா சமாதியில் சபதம் போட்டுவிட்டு சென்றார். பின்னர் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைந்து துணை முதல்வராகிவிட்டார். இந்த நிலையில் சசிகலாவின் 4 ஆண்டுகால சிறைவாசம் முடிவடைந்து விடுதலையாகி விட்டார். தற்போது பெங்களூருவில் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலா மீண்டும் அதிமுகவுக்கு வருவாரா? என்கிற கேள்விக்கு சேர்க்கவே மாட்டோம் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பின் திட்டவட்டமான கருத்து. ஆனால் ஓபிஎஸ் தரப்பு இதுவரை அமைதியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்- மகன் ஜெயபிரதீப் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் சசிகலா குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சசிகலா நல்ல உடல்நலத்துடன் அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜெயபிரதீப் அந்த அறிக்கையில் கூறியுள்ளார். அத்துடன் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல; மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு எனவும் ஜெயபிரதீப் அதில் குறிப்பிட்டுள்ளார். ஓபிஎஸ் மகனின் இந்த அறிக்கை அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.