டிச. 28ஆம் தேதி திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் கூட்டம்! துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
சென்னை: டிசம்பர் 28ஆம் தேதி திமுகவில் உள்ள அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூட்டம் நடைபெறும் என அவர் அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அணிகளை எவ்வாறு வலுப்படுத்த வேண்டும் என்பது பற்றி முதல்வர் அறிவுரை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திமுக அணிகள்
திமுகவை பொறுத்தவரை இளைஞரணி, மாணவரணி, மகளிரணி, வழக்கறிஞர் அணி, விவசாய அணி, மீனவர் அணி, தொண்டர் அணி, பொறியாளர் அணி, மருத்துவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி, தகவல் தொழில்நுட்ப அணி, அயலக அணி, சுற்றுச்சூழல் அணி, சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு, ஆதிதிராவிடர் நல உரிமை பிரிவு, அமைப்பு சாரா ஓட்டுநர் நல பிரிவு, சொத்து பாதுகாப்பு குழு, தணிக்கை குழு, என ஏராளமான சார்பு அணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் நிர்வாகிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

சார்பு அணிகள்
இந்நிலையில் அனைத்து அணிகள் மற்றும் குழுக்களின் நிர்வாகிகளை நேரில் அழைத்து கூட்டம் நடத்தும் ஸ்டாலின், அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவில் உள்ள சார்பு அணிகளிலேயே பிரதான அணியாக விளங்குவது அக்கட்சியின் இளைஞரணி. இதற்கு அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மகளிரணி, ஆகிய 3 அணிகளும் ஓரளவு ஆக்டிவாக இயங்கி வருகின்றன.

அணிகளின் செயல்பாடுகள்
மற்றபடி திமுகவில் உள்ள மற்ற அணிகளின் செயல்பாடுகளை பொறுத்தவரை மந்தகதியிலேயே இருந்து வருகின்றன. நமக்கு ஒரு பதவி கிடைத்துள்ளது, இது போதும் என அதனை பெருமையாக கருதி காலம் தள்ளுபவர்கள் பலர் உள்ளனர். இந்நிலையில் தான் இந்த அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் துரைமுருகன். தனது பரபரப்பான பணிகளுக்கும் மத்தியிலும் ஒவ்வொரு அணியின் செயல்பாடுகள் குறித்த ரிப்போர்ட்களையும் முதல்வர் அறிந்து வருகிறார்.

புதன்கிழமை கூட்டம்
ஆனால் அதனை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார். யார் யார் எப்படி செயல்படுகிறார்கள், எந்தெந்த அணி வலிமையாக ஒற்றுமையாக இயங்குகிறது என்பது குறித்த தகவல்கள் எல்லாம் முதல்வர் கைகளில் உள்ளது. இதனிடையே அடுத்த வாரம் புதன்கிழமை திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் என்ன பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications