அந்த 2 பேர் அதிமுகவை விட்டு போக இதான் காரணம்.. எடப்பாடியை தூக்க ‘ஒரு ஐடியா’.. ஓபிஎஸ் ஆதரவாளர் பரபர!
சென்னை : அதிமுகவுக்கு பலமாக இருந்த ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜி ஆகியோரை அதிமுகவில் இருந்து விட்டிருக்கக் கூடாது, அவர்கள் போனதற்கு காரணம் அதிமுகவில் 10 பேர் மட்டுமே செல்வாக்காக இருக்க நினைத்தது தான் என ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி விமர்சித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதல் போக்கால், இரு தரப்பினரும் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சட்டமன்ற இருக்கை, தேவர் தங்கக் கவசம் என இரு தரப்பிற்கும் இடையேயான மோதல் முற்றியுள்ள சூழலில் ஓபிஎஸ் ஆதரவாளரான கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக ஒன்று சேர்ந்தால் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுவது ஜெயக்குமார் தான் என கடுமையாக சாடியுள்ளார்.

சபாநாயகர் முடிவு
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்கவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக யார் இருப்பார் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "ஓபிஎஸ் தரப்பில் சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளோம். சபாநாயகர் அது பரிசீலனையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். சபாநாயகரின் முடிவு என்ன என்பது நாளைக்கு தெரியவரும்" என்று கூறினார்.

கோமாளிக்கு
ஓ.பன்னீர்செல்வத்திடம் கட்சியும் இல்லை, அவர் கட்சியிலும் இல்லை. ஓபிஎஸ் எப்படி அதிமுக வரிசையில் உட்கார முடியும்? வேறு எங்காவது அவருக்கு இடம் ஒதுக்கட்டும் என்ற ஜெயக்குமாரின் கருத்துக்கு பதில் அளித்த அவர், "அதற்கு உயர் நீதிமன்றம் பதில் சொல்லட்டும். இந்த கோமாளிக்கு பதில் சொல்ல முடியாது. ராயபுரத்தில் ஜெயக்குமாரால் ஜெயிக்க முடியவில்லை. பன்னீர்செல்வத்தை பற்றி பேசும் ஜெயக்குமாருக்கு சட்டமன்றத்தில் முதலில் இடம் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பினார்.

எடப்பாடிக்கு கிடைக்காது
தேவர் ஜெயந்தி குறித்து பேசிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "11 முறை தங்க கவசத்தை பேங்க் லாக்கரில் இருந்து எடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். அது குறித்து மாவட்ட ஆட்சியர் தான் இறுதி முடிவை எடுப்பார். எடப்பாடி பழனிசாமிக்கு தங்கக் கவசம் கிடைக்க வாய்ப்பில்லை. தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் பண்ணை வீட்டில் நேற்று நடந்த கொள்ளை சம்பவத்தில் ஒரு டிவியை மட்டுமே கொள்ளையர்கள் எடுத்து சென்று உள்ளனர்" எனத் தெரிவித்தார்.

ஓபிஎஸ் சட்டசபை செல்வார்
மேலும் பேசிய அவர், அதிமுகவின் 51 வது தொடக்க நாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் நாளை காலை 9 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக கூறிய அவர், நாளை உறுதியாக ஓ.பன்னீர்செல்வம் சட்டசபை செல்வார் என்றும் தெரிவித்தார்.

அவர் பதவியையே பறித்துக் கொள்வார்
அதிமுகவில் ஓபிஎஸ் தரப்பினரிடம் பேசினால் கூட கட்சியை விட்டு நீக்குகிறார் எடப்பாடி பழனிசாமி என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, "எடப்பாடி பழனிசாமிக்கு மனநிலை சரியில்லை. யாரை ஓபிஎஸ் பதவியில் போட்டாலும், எடப்பாடி பழனிசாமி உடனடியாக பறித்து விடுகிறார். எடப்பாடிக்கு ஒரு பதவியை போட்டால் அவரே அவரது பதவியை பறித்துக் கொள்வார். அதனால் ஓபிஎஸ், எடப்பாடிக்கு ஒரு பதவி கொடுக்க வேண்டும்" என்றும் கிண்டல் செய்தார்.

முதலில் காலில் விழுவது
மேலும், "அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்கள் எங்களுடன் தான் உள்ளனர். எடப்பாடியை நாங்கள் தான் கட்சியை விட்டு நீக்கி வைத்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி, சி.வி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் தான் வந்து அதிமுகவில் சேர வேண்டும். நாங்கள் அங்கு செல்ல வேண்டிய வேலை இல்லை. ஈபிஎஸ் இல்லாத அதிமுக ஓபிஎஸ் தலைமையில் தான் அமையும். அதிமுக ஒன்று சேர்ந்தால் முதலில் ஓ.பன்னீர்செல்வத்தின் காலில் விழுவது ஜெயக்குமார் தான்.

ராஜகண்ணப்பன், செந்தில்பாலாஜி
எடப்பாடி பழனிசாமி பதவிக்காக தொண்டர்களை அழிக்கிறார். அதிமுகவுக்கு பெரிய பலமாக இருந்த ராஜகண்ணப்பன், செந்தில் பாலாஜியை விட்டிருக்கக் கூடாது. அவர்கள் எல்லாம் அதிமுகவின் பலமானவர்கள். இவர்கள் அனைவரும் போனதற்கு காரணம் அதிமுகவில் 10 பேர் மட்டுமே செல்வாக்காக இருக்க நினைத்தது தான்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications