பொறுத்தது போதும்.. பொங்கியெழும் முத்தரையர் சமூகம்.. திணறும் பட்டுக்கோட்டை
சென்னை: பட்டுக்கோட்டையில் இம்முறையும் தங்கள் சமூகத்தைச் சார்ந்தவருக்கு சீட் கொடுக்காததால், முத்தரையர்கள் சமூகம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டு. ஆங்காங்கே சில குளறுபடிகள் இருந்தாலும், 'வண்டிய விடு சின்ராசு' மோடில் பம்பரமாய் அடுத்தக் கட்ட பணிகளை துவங்கிவிட்டன.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் 2021: அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சி 4 தொகுதிகளில் போட்டி
இன்னும் வெகுசில காட்சிகள் மட்டும் வேட்பாளர்களை அறிவிக்க மீதமுள்ளன. இந்நிலையில், பட்டுக்கோட்டையில் நிலவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பல நாள் ஆதங்கத்தை இங்கு காணலாம்.

களம் இறங்கும் கட்டாயம்
தமிழகத்தில் ஓட்டு அரசியல் என்பது ஜாதியை மையப்படுத்தியே இன்று வரை சுழன்று வருகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் அந்தந்த சமூகங்களை குறி வைத்தே வேட்பாளர்கள் களம் இறக்கும் கட்டாயம் இங்கு உள்ளது. குறிப்பாக, டெல்டா பகுதிகளில் ஜாதி ரீதியிலான வேட்பாளர்களை களமிறக்கவில்லை எனில், கட்சிகளும் மிகவும் கஷ்டபட வேண்டியிருக்கும்.

வாய்ப்பு மறுப்பு
அந்த வகையில் பட்டுக்கோட்டை மிக முக்கியமான தொகுதி. இங்கு மிக முக்கிய சமூகமாக முத்தரையர்கள் உள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட சமூகம் இது. அதேபோல், வேளாளர், முக்குலத்தோர் சமூகத்தினர் உள்ளனர். முஸ்லீம், செட்டியார்கள் பரவலாக உள்ளனர். ஆனால், இங்கு முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மாற்று சமூகம்
திராவிட காட்சிகள் மாறி மாறி ஆண்டாலும், பட்டுக்கோட்டையைப் பொறுத்தவரை முத்தரையர் சமூகத்துக்கு தேர்தல் வாய்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை என்பது அவர்களது பல வருட ஆதங்கமாக உள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலிலும், திமுக சார்பில் அங்கு நிறுத்தப்பட்டுள்ள அண்ணாதுரை வேளாளர் சமூங்கத்தைச் சேர்ந்தவர். அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸின் வேட்பாளர் என்.ஆர்.ரங்கராஜன் முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்தவர்.

சமூகநீதி கூட்டமைப்பு
இந்நிலையில், தேர்தல் நேரத்தில் தான் தங்கள் சமூக பலத்தை நிரூபிக்க முடியும் என்பதால், பட்டுக்கோட்டையில் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சமூகநீதி கூட்டமைப்பு என்ற அமைப்பை ஏற்படுத்தி களம் காணவிருக்கிறார்கள். இதற்காக வேட்பாளரையும் அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்தியுள்ளனர்.
மாற்றத்தை ஏற்படுத்துவர்களா? பொறுத்திருந்து பார்ப்போம்!.