மோசடி பதிவு? - ரத்து செய்ய பதிவுத்துறைக்கே அதிகாரம்.. ஜனாதிபதி ஒப்புதல் - வருகிறது அதிரடி சட்டம்!
சென்னை : மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் தீர்வு கிடைக்க காலதாமதம் ஆவதால், மோசடி பதிவுகளை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது.
இந்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகச் சென்றது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்நிலையில், அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்தை மீட்டு உரியவர்களுக்கே அளிக்க வகை செய்யும் இந்த சட்டம் கொண்டுவர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

மோசடி பத்திரப் பதிவு
தமிழகத்தில் மோசடி பத்திரப் பதிவுகளை ரத்து செய்வதற்கான அதிகாரத்தை பதிவு அலுவலர்களுக்கு வழங்கும் வகையிலான சட்டத்திலிருத்த மசோதா கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா, ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், நில அபகரிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்டு உரியவர்களுக்கு பெற்றுத்தர உரிய வழிவகை செய்யும் வகையிலான பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து, இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.

சட்டம் என்ன?
இந்தச் சட்டத்தின்படி, சட்டத்தால் தடை செய்யப்பட்ட பத்திரங்களை குறிப்பாக, பொய்யான பத்திரத்தை பதிவு செய்ய, பதிவு அலுவலர் மறுக்கவேண்டும். பதிவுச்சட்ட விதிகளில் 22ஏ மற்றும் பி ஆகிய பிரிவுகளுக்கு முரணாக பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளது என்று பதிவாளர் கருதினால், அந்த பதிவை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று நோட்டீஸ் வழங்க வேண்டும். அதற்காக பதில் பெறப்பட்டால், அதை கருத்தில் கொண்டு பதிவாளர் பதிவை ரத்து செய்யலாம். பதிவுத்துறை தலைவருக்கும் இந்த அதிகாரம் உண்டு.

குடியரசுத் தலைவர் ஒப்புதல்
பதிவு அலுவலர் முறைகேடான பதிவுகளை செய்தால், பதிவு அலுவலருக்கு மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். இதனால் பொதுமக்கள் மோசடி பதிவுகளால் தங்கள் சொத்துகளை இழந்தும், ஏமாற்றப்பட்டும் வரும் நிலை தடுக்கப்படும். இந்த மசோதாவுக்குத் தான் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், இந்தச் சட்டம் அமலுக்கு வருகிறது.

அமைச்சர் மூர்த்தி
இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகம் மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, 'பதிவுத்துறையில் புதிய சீர்திருத்தம்.. மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட திருத்த மசோதாவிற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார்' என அறிவித்துள்ளார்.

முதல்வருக்கு நன்றி
மேலும், நில அபகரிப்பாளர்களிடமிருந்து மீட்டு சொத்துக்களை உரியவர்களுக்கு பெற்றுத்தரும் வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சட்ட திருத்தம் கொண்டு வர வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications