சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசி - ரமா ஏகாதசி விரதம் இருந்தால் இத்தனை நன்மைகளா?

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்று பெயர். ரமா ஏகாதசி விரதத்தால் சர்வ பாபங்களும் நஷ்டமடைகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: கார்த்திகை மாதத்தின் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. ரமா ஏகாதசி விரதத்தால் சர்வ பாபங்களும் நஷ்டமடைகின்றன. இந்த ஏகாதசியின் பெருமையை தருமருக்கு ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துக்கூறியுள்ளார். இந்த ஏகாதசியின் மகிமையை கூறும் புராண கதையை பார்க்கலாம்.

கார்த்திகை மாத தேய்பிறை ஏகாதசிக்கு ரமா ஏகாதசி என்றும் வளர்பிறை ஏகாதசிக்கு பிரபோதின ஏகாதசி என்றும் பெயர். இந்த இரண்டு ஏகாதசி நாட்களிலும் விரதம் இருப்பவர்களுக்கு, பெருமாளுக்கு பழங்களைக் கொண்டு நைவேத்தியம் செய்வதால் கிடைக்கும் மங்கல வாழ்வும், இருபத்தியோரு தானம் செய்ததற்கான பலனும் புண்ணியமும் கிடைக்கப்பெறுவார்கள்.

Rama Ekadashi viratham Karthigai month Krishna paksha

ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் சந்தேகமின்றி ஒரு அந்தணரைக் கொல்லும் பாவத்திலிருந்து விடுபடுவார் கருப்பு நிற பசுக்களும் வெண்ணிற பசுக்களும் வெண்ணிற பாலையே கொடுப்பது போல் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் தோன்றும் இரு ஏகாதசிகளும் அதை அனுஷ்டிப்பவர்களுக்கு முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.

புராண காலத்தில் முசுகுந்தன் என்னும் பெயர் கொண்ட அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் இந்திரன், வருணன், குபேரன், விபீஷ ணன் ஆகியோரிடம் மிகுந்த நட்பு கொண்டிரு ந்தான். சத்தியவானாகவும், பகவான் மஹாவி ஷ்ணுவின் அத்யந்த பக்தனாகவும் விளங்கினான். அவனுடைய ராஜ்ஜியத்தில் எவ்வித மான இடர்பாடுகளும், தொந்தரவுகளும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தனர்.

முசுகுந்தனுக்கு சந்த்ரபாகா என்னும் மகள் இருந்தாள். முசுகுந்த ராஜன் தன் மகளை, ராஜா சந்திரசேனனின் மகனான சோபனுக்கு திருமணம் செய்து தந்தான். முசுகுந்தன் ஏகாதசி விரதத்தை மிகவும் நியமத்துடன், ஸ்ரத்தையுடனும் கடைப்பிடித்து வந்ததுடன் அல்லாமல்,அவன் ராஜ்ஜியத்தின் பிரஜைக ளும் இவ்விரதத்தை மிகவும் நியம, நிஷ்டைக ளுடன் அனுஷ்டித்து வந்தனர்.
ஒரு தடவை சோபன் தன்னுடைய மனைவியின் இல்லமான முசுகுந்தனின் ராஜ்ஜியத்திற்கு கார்த்திகை மாதத்தில் வந்திருந்தான். கார்த்தி கை மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் மிகுந்த புண்ணியத்தை அளிக்கும் ரமா ஏகாதசி திதி யும் வந்தது. அன்று நாட்டில் அனைவரும் விரதம் இருப்பர்.

ராஜாவின் மகள் சந்திரபாகா " என் கணவர் மிகவும் பலவீனமான இருதயம் கொண்டவர். அவரால் இந்த ஏகாதசி விரதத்தை எப்படி கடைபிடிக்க முடியும் ? தந்தையின் ராஜ்ஜியத்திலோ அனைவரும் ஏகாதசி விரதம் கடைபிடிக்க வேண்டும் என்று ஆக்ஞை உள்ளது. என் கணவர் ராஜாங்க ஆக்ஞையை ஏற்று விரதத்தை மேற்கொண்டால் கஷ்டங்களை நேர்கொள்ள வேண்டி வருமே என்று வித விதமாக யோசித்து கவலையில் ஆழ்ந்தாள்.

சந்திரபாகா எதைக் குறித்து பயப்பட்டாளோ, அதையே எதிர்கொள்ள நேர்ந்தது. முசுகுந்த ராஜா தன் மருமகன் சோபன் தன் ராஜ்ஜியத் திற்கு வந்திருந்த நேரத்தில், ஏகாதசி திதி விரதத்தை பிரஜைகள் அனைவரும் நியம நிஷ்டையுடன் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தான்.

ஏகாதசிக்கு முந்தைய நாளான தசமி திதியன் று ராஜ்ஜியம் முழுவதும் ஏகாதசி விரதத்தை விதி முறைப்படி கடைப்பிடிக்க வேண்டும் என்று முரசு அறைந்து அறிவித்தான். முரசு அறிவிப்பை அறிந்து, முசுகுந்த ராஜாவின் மருமகன் சோபன் தன் மனைவி சந்திரபாகா விடம், " ஹே ப்ரியே! விரதம் மேற்கொள்ளா மல் இருக்க, ஏதாவது ஒரு உபாயத்தை கூறு, என்னால் விரதம் இருக்க இயலாது, அதை மீறி இருக்க நேர்ந்தால், நான் இறந்து விடுவேன்" என்று கூறினான்.

அதைக் கேட்டு சந்திரபாகா," ஹே ப்ராண நாதா என் தந்தையின் ராஜ்ஜியத்தில் ஏகாதசி யன்று யாரும் உணவு உட்கொள்வதில்லை. பிராணிகளான யானை, குதிரை, ஒட்டகம், பசுக்கள் கூட அன்று நீர், உணவு உண்ணாமல் விரதத்தை அனுஷ்டிக்கும் போது, மனிதர்கள் நாம் எப்படி உணவு உட்கொள்ள முடியும்? உங்களால் விரதம் இருக்க இயலாவிடில், தயவு செய்து அன்று மட்டும் வேறொரு இடம் சென்று தங்கி விட்டு வாருங்கள். ஏனென்றால் அன்று இங்கு இருந்தால், நீங்கள் அவசியம் விரதத்தை மேற்கொள்ள நேரிடும்" என்று கூறினாள்.

அதைக் கேட்ட சோபன், " ப்ரியமானவளே!, நீ கூறிய யோசனை மிகவும் உசிதமானது. ஆனால் விரதத்தின் காரணமாக பயந்து கொண்டு, மற்றொரு இடத்திற்கு நான் செல்ல விரும்பவில்லை. அது சரியானதாகவும் எனக்குப் படவில்லை. ஆகையால் உங்கள் அனைவருடன் சேர்ந்து விரதத்தை அவசியம் மேற்கொள்வேன். அதன் விளைவு எப்படி இருந்தாலும் எனக்கு அதைப் பற்றி கவலையில்லை. பாக்கியத்தில் எழுதி இருக்கும் விதியை யாரால் மாற்ற இயலும்?." என்றான்.

சோபன் ஏகாதசி விரதத்தை அனைவருடன் சேர்ந்து அனுஷ்டித்தான். பசியும், தாகமும் அவனை மிகவும் வருத்தி எடுத்தது. சூர்யன் அஸ்தமிக்க, கண்விழிக்கும் நேரமான இரவு நெருங்கியது. அன்றைய இரவு சோபனுக்கு மிகவும் வேதனையளிப்பதாக இருந்தது. மறு நாள் காலை சூர்யோதயத்திற்கு முன்னரே, பசியாலும், தாகத்தாலும் தவித்த சோபனின் உயிர் பிரிந்திருந்தது.

ராஜா முசுகுந்தன், சோபனின் உடலை ஜல பிரவாகத்தில் விட்டு விட்டு, தன் மகளிடம் கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டாம் என்றும், பகவான் விஷ்ணுவின் கிருபாகடா க்ஷத்தின் மீது நம்பிக்கை வைத்து பிரார்த்திக்குமாறும் அறிவுரை கூறினான்.
சந்திரபாகாவும் உடன் கட்டை ஏறாமல், தந்தை கூறிய வழியில், தந்தையின் இல்லத்தில் இருந்து ஏகாதசி விரதத்தை மிகுந்த நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வந்தாள்.

அங்கு, ரமா ஏகாதசி விரதத்தின் மகிமையால், சோபனின் உடலானது ஜலத்தில் விடுவிக்கப்பட்டது. சோபன், திவ்ய தேகமடைந்து, பகவான் விஷ்ணுவின் கிருபையால் மந்த்ராசல பர்வதத்தின் மேல் தனம், தான்யம் என்று அனைத்து ஐஸ்வர்யங்களும் நிறைந்த, எதிரிகளும் வியக்கும்படியான தேவபுரம் என்னும் உத்தம மான நகரத்தின் அதிபதியானான்.

அந்நாட்டின் முந்தைய அரசன், அந்நகரத்தை மிகவும் கலாரசனையுடன் நிர்மாணித்திருந்தான். அரண்மனை எங்கும் ரத்னங்கள் பதிக்க பெற்ற தங்க தூண்கள் நிரம்பி வழிந்தது. ராஜா சோபன் தங்கம் மற்றும் விலையுயர்ந்த மணிகள் பதிக்கப்பெற்ற சிம்மாசனத்தில், அழகிய ஆடை, ஆபரணங்களுடன் அமர்ந்து அதனை அலங்கரித்தான். கந்தர்வர்கள் மற்றும் அப்சரஸ்கள் நாட்டியத்துடன் சோபனின் புகழ் பாடினர். அச்சமயம் ராஜா சோபன் மற்றொரு இந்திரனைப் போன்று காட்சியளித்தான்.

அதே சமயம், முசுகுந்த ராஜாவின் ராஜ்ஜியத் தில் வசிக்கும் சோமசர்மா என்னும் பெயர் கொண்ட பிராமணன், தீர்த்த யாத்திரை செய்ய கிளம்பினான். தீர்த்த யாத்திரையில் அங்கும் இங்கும் அலைந்து தேவபுரம் ராஜ்ஜி யத்தை அடைந்தான். அது தன் ராஜா முசுகுந்த னின் மருமகன் சோபன் ஆட்சி செய்யும் ராஜ்ஜியம் என்று அறிந்து உடனடியாக அரண்மனைக்கு சென்று ராஜா சோபனை சந்தித்தான். ராஜா சோபன் பிராம்மணனை கண்டதும் ஆசனத்தில் இருந்து எழுந்து நின்று, தன் மாமனார் முசுகுந்த ராஜா, மனைவி சந்திரபாகா அனைவரின் க்ஷேம நலத்தை விசாரித்தான்.

பிராம்மணன் சோமசர்மா பதிலளிக்கையில், "ஹே ராஜன் ! தங்கள் மாமனார் மற்றும் மனைவி மிகவும் நலமுடன் உள்ளனர். நீங்கள் உங்களுடைய கதையை கூறுங்கள். நீங்கள் ரமா ஏகாதசியன்று அன்னம், நீர் உட்கொள்ளாமல் விரதம் இருந்ததால் உயிர் தியாகம் செய்தீர்கள். மிகுந்த ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், விசித்திரமான மற்றும் மிகவும் அழகான இந்த நகரைப் பற்றி நான் கேள்விப்பட்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. அப்படி இருக்க நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள்?, உங்களுக்கு எப்படி கிடைத்தது?" என்று வினவினான்.

அதற்கு ராஜா சோபன் " ஹே பிராமண தேவா.. இது அனைத்தும் கார்த்திகை மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ரமா ஏகாதசி விரதத்தின் பலனாகும். ரமா ஏகாதசி விரதம் அனுஷ்டித் தால் எனக்கு இந்த அற்புதமான நகர் கிடைக்க பெற்றது. ஆனால் இது நிலையானது அல்ல என்றான். அதைக் கேட்டு சோமசர்மா, " ராஜன், ஏன் இது நிலையானது அல்ல என்பதற்கான காரணத்தை கூறுங்கள். நகரம் ஸ்திரப்படுவதற்கான உபாயம் என்ன என்பதை சொல்லுங்கள். என்னால் முடிந்தால் கட்டாயம் செய்கிறேன்." என்றான்.

ராஜா சோபன், சோமசர்மாவிடம் தேவரீர், நான் ரமா ஏகாதசி விரதத்தை, என் மனைவியின் சொல்லுக்காக, அத்தனை ஈடுபாடில்லாமல் செய்தேன். ஆனால் நான் அவ்வாறு விரதம் இருந்ததற்கே, எனக்கு இந்த நிலையற்ற நகரம் கிட்டியது. ஆனால் நீங்கள் இந்த விருத்தாந்தத்தை முசுகுந்த ராஜாவின் மகள் சந்த்ரபாகாவிடம் சொன்னால், இந்த விரதத்தைத் தொடர்ந்து கடைபிடிக்கும் மஹா பக்தையான‌ அவளால், இந்த நகரம் நிலை பெறலாம் என்று கூறினான்.

பிராமணன் சோமசர்மா தன் நகரத்திற்கு திரு ம்பியதும், முசுகுந்த ராஜாவின் மகள் சந்திரபாகாவை கண்டு அனைத்தையும் விவரித்தான். அதற்கு சந்திரபாகா, நீங்கள் கூறுவது நிஜமா அல்லது கனவா என்று கேட்டாள். அதற்கு சோமசர்மாவோ, உன் கணவன் சோபன் மற்றும் அவனிருக்கும் நகரை ப்ரத்யட்சமாக நேரில் கண்டேன். அந்நகரம் நிலையானது அல்ல. அந்நகரம் நிலை பெற உன்னால் முடிந்தால் ஏதாவது உபாயம் செய்யவும்." என்றான்.

அதற்கு சந்திரபாகா, நீங்கள் என்னை அந்நகரத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நான் என் கணவனை காண விரும்புகிறேன். நான் இதுநாள் வரை கடைப் பிடித்து வரும் ஏகாதசி விரத மஹிமையால் நகரத்தை ஸ்திரப்படுத்த முடியும்." என்றாள்.

சந்திரபாகாவின் வார்த்தைகளைக் கேட்டு சோமசர்மா மிகுந்த சந்தோஷத்துடன் சந்திர பாகாவை மந்த்ராசல் பர்வதத்தின் அருகே உள்ள வாமதேவரின் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றான். வாமதேவர் சந்திரபாகாவின் கதையைக் கேட்டு, சந்திரபாகாவை மந்திரங்க ளால் அபிஷேகம் செய்தார்.

அம்மந்திரங்களின் சக்தியாலும் மற்றும் ஏகாதசி விரதத்தின் பலனாலும், சந்திரபாகா திவ்ய தேக சொரூபத்துடன் தன் கணவனின் இருப்பிடம் சென்றடைந்தாள். ராஜா சோபன் தன் மனைவி சந்திரபாகாவை கண்டு மிகுந்த ஆனந்தத்துடன் சிம்மாசனத்தில் தன் பக்கம் இருத்திக் கொண்டான்.

சந்திரபாகா கணவன் சோபனிடம்," ப்ராண நாதா, நான் விரதத்தால் பெற்ற புண்ணிய த்தை அறிந்து கொள்ளுங்கள். நான் என் தந்தையின் இல்லத்தில் எட்டு வயது முதல் ஏகாதசி விரதத்தை விதிமுறைப்படி அனுஷ்டித்து வருகிறேன். அவ்விரதத்தின் புண்ணியத்தால், உங்களுடைய இந்த நகரம் நிலைபெற்று விடும். கர்மங்களினால் விளைந்த சர்வ பாபங்களும் அகன்று, பிரளயத்தின் முடிவு வரை நகரமானது நிலையாக இருக்கும்." என்றாள். சந்திரபாகா திவ்ய தேக சொரூபத்துடனும், திவ்ய வஸ்த்ரங்களுடன், தன் கணவனுடன் ஆனந்தமயமாக வசித்து வந்தாள்.

ஹே பார்த்தா! ரமா ஏகாதசியின் மகத்துவத்தை உனக்கு கூறியுள்ளேன். எவரொருவர் ரமா ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர்களின் அனைத்து பாபங்களும் அழிந்து விமோசனம் பெறுகின்றனர். எவரொருவர் ரமா ஏகாதசி மஹாத்மியத்தை கேட்கின்றனரோ, அவர் மரணத்திற்குப் பிறகு விஷ்ணுலோகத்தை அடைவர் என்று கூறினார் கிருஷ்ணர்.

பகவான் விஷ்ணு பரமதயாளர் மற்றும் மன்னிக்கும் குணமும் கொண்டவர். சிரத்தையுடனோ அல்லது வேறு வழியின்றி நிர்பந்தத்தினலோ, விஷ்ணு பூஜை அல்லது ஏகாதசி விரதம் கடை ப்பிடித்தால், அவ்வாறு செய்பவருக்கு உத்தமமான பலன்களை அள்ளித் தரும் வள்ளல். பிராணியோ அல்லது மனிதரோ, அவர் செய்ய வேண்டியது எல்லாம் சிரத்தையுடன் பக்தியுடன் விரதம் இருந்த விஷ்ணு பூஜை செய்வது மட்டும் தான்.

சோபன், தன் மனைவி சந்திரபாகா செய்த சிரத்தையான ஏகாதசி விரத பலனால், தன் தேவபுரம் நகரத்தை ஸ்திரப்படுத்த முடிந்தது. சந்திரபாகாவை போன்ற உத்தமமான நற் கர்ம மனைவி அமைவது விஷ்ணுவின் கிருபா கடாக்ஷத்தின் பலனாகும்.

English summary
Ekadasi which falls on the Krishna Patsa of the month of Karthika is called Rama Ekadasi All sins are lost by fasting Rama Ekadasi. Sri Krishna narrates the glory of this Ekadasi to Daruma in the Brahma Vaivatra Purana. Let’s look at the myth that tells the glory of this Ekadasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X