சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்க… மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு சீமான் அழைப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கால் நூற்றாண்டுக்கு மேலாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் ஏழு தமிழர்களின் விடுதலைக்கான மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று, தமிழக வீதிகளில் நீதிகேட்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 28 ஆண்டுகளாகச் சிறைக்கொட்டடிக்குள் வாடிக்கொண்டிருக்கும் தம்பிகள் பேரறிவாளன், சாந்தன், முருகன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அக்கா நளினி ஆகியோரை விடுதலை செய்யக்கோரி 161வது சட்டப்பிரிவின்படி, தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஏறக்குறைய 6 மாதங்களை நிறைவுசெய்ய இருக்கிற நிலையில் அத்தீர்மானத்திற்கு ஒப்புதல் தராது காலதாமதம் செய்து வரும் தமிழக ஆளுநரின் செயல் வன்மையானக் கண்டனத்திற்குரியது.

Release the seven Tamilans; Seeman calls for the human chain struggle

இது சனநாயக நெறிமுறைகளைப் புறந்தள்ளி அதிகாரத்தைத் தவறுதலாக பயன்படுத்தும் அத்துமீறலாகும். தமிழக ஆளுநருக்கு உரிய அரசியல் அழுத்தம் தந்து எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டியத் தமிழக அரசு அதனைச் செய்ய மறுத்து, தீர்மானம் நிறைவேற்றியதோடு தனது கடமை முடிந்துவிட்டதாய் எண்ணி ஒதுங்கிக் கொள்வது ஒருபோதும் ஏற்புடையதல்ல! தருமபுரியில் பேருந்துக்குள் வைத்து மூன்று மாணவிகளை எரித்துக் கொலை செய்த வழக்கில் 12 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அதிமுகவினர் மூவரையும் விடுவிக்கக் கோரியத் தீர்மானத்தில் ஆளுநரின் ஒப்புதலைப் பெற முடிந்தத் தமிழக அரசால், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையிலிருக்கும் எழுவரையும் விடுவிக்கக்கோரும் தீர்மானத்தில் ஒப்புதல் பெறப்படாததன் மர்மம் புரியாதப் புதிராகவே இருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்பது பயங்கரவாத நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்டச் சதிச்செயல் அல்ல! அது வெறுமனே பழிவாங்குதல் போக்குடன் கூடிய கொலைதான் எனத் தெளிவுப்படுத்தி, தடா சட்டம் இவ்வழக்கிற்குப் பொருந்தாது என அறிவித்துவிட்டது உச்ச நீதிமன்றம். ஆகவே, இக்கொலை வழக்கினைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனைக் கைதிகளாக இருக்கிற எழுவரையும் விடுதலை செய்வதில் எவ்விதச் சட்டச்சிக்கலுமில்லை. பொதுவாக ஆயுள் தண்டனைக் கைதிகளை 14 ஆண்டு காலத்திலேயே நன்னடத்தையின் கீழ் விடுதலைசெய்யச் சட்டத்தில் இடமுண்டு.

ஆனால், இவ்வழக்கில் இருக்கிற எழுவரும் இரட்டை ஆயுள் தண்டனையையே முழுவதுமாக அனுபவித்துவிட்டப் பிறகும் அவர்களை விடுதலை செய்ய மறுப்பது மிக மோசமான மனிதவதை; விடுதலைக்குரியத் தகுதிகளைக் கொண்டிருக்கிற எழுவரையும் அதிகாரம் கொண்டு தனிமனிதக் காழ்ப்புணர்ச்சிக்கும், அரசியல் பழிவாங்குதல் போக்குக்கும் இரையாக்க முனைவது மனிதத்தன்மையேயற்ற கொடுஞ்செயல். மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டச் சட்டப்பேரவையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்குவதுதான் ஆளுநரின் அதிகாரமேயன்றி தனிப்பட்ட அதிகாரம் எதுவும் அவருக்கென்று வரையறை செய்யப்படவில்லை.

ஆகவே, எட்டுக்கோடி மக்களின் பிரதிநிதித்துவத்தைப் பெற்ற ஓர் அரசின் முடிவை, மக்களால் தேர்வுசெய்யப்படாத ஆளுநர் அலட்சியப்படுத்திக் கிடப்பில் போடுவது என்பது மக்களாட்சித் தத்துவத்தின் மகத்துவத்தையே குலைக்கும் படுபாதகச்செயல். இதற்கெதிராகச் சனநாயகப் பேராற்றல்களும், இன உணர்வாளர்களும், மனிதவுரிமை ஆர்வலர்களும், சமூகப் போராளிகளும், இனமானத் தமிழர்களும் ஓரணியில் திரண்டு எழுவரின் விடுதலையைச் சாத்தியப்படுத்த வேண்டியது வரலாற்றுப் பெருங்கடமை என்பதை உணர்ந்து வீதிக்கு வந்து போராட அறைகூவல் விடுக்கிறேன்.

எழுவரின் விடுதலை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் நெடுநாள் கனவு. 12 கோடி தமிழர்கள் மீதும் சுமத்தப்பட்டக் களங்கத்தைத் துடைப்பதற்கான வரலாற்று பெரும் வாய்ப்பு. அதற்காக நாம் கொடுத்த விலையும், பட்டத் துயரும் மிக மிக அதிகம். கால் நூற்றாண்டு காலமாகக் கால்கடுக்க இந்நிலமெங்கும் சென்று தன் மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய் களத்தில் நிற்கும் நமது தாய் அற்புதம்மாள் சிந்தியக் கண்ணீரையும், வலியினையும் வெறுமனே வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக இம்மண்ணில் நடந்தப் பல்வேறு போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், கருத்துப் பரப்புரைகள், அரசியல் அழுத்தங்கள், சட்டப்போராட்டங்கள், செங்கொடியின் உயிரீகம் எனப் பல அசாத்தியப் போர்க்களங்களைக் கண்டே இன்றைக்கு எழுவரின் விடுதலையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்.

ஆகவே, எழுவரின் விடுதலைக்குத் தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கக்கோரியும், அதனைப் பெறத் தமிழக அரசு உரிய அரசியல் அழுத்தம் தரக்கோரியும் வருகிற மார்ச் 09 அன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், புதுச்சேரி ஆகியப் பெருநகரங்களில் மாலை 04 மணி முதல் 06 மணிவரை மாபெரும் மனிதச்சங்கிலிப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. அதுசமயம், அதற்கான முன்னெடுப்புகளிலும், ஒருங்கிணைப்புகளிலும் தங்களை இணைத்துக் கொண்டு களப்பணியினை செய்யுமாறு நாம் தமிழர் தம்பிமார்களுக்கு அறிவுறுத்துகிறேன்.

கால் நூற்றாண்டுக்கு மேலாகக் கண்ணீர் வடிக்கும் நமது வீரத்தாய் அற்புதம் அம்மாளின் கண்ணீரைத் துடைக்கவும், ஏழு தமிழர்களையும் சிறைமீட்கவும் மானத்தமிழரெல்லாம் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மாபெரும் மக்கள் திரளாக அணிதிரள வேண்டுமெனத் தமிழ் மக்களுக்கு பேரழைப்பு விடுக்கிறேன். இனமானத்தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இலட்சக்கணக்கில் பங்கேற்று தமிழக வீதிகளில் நீதிகேட்போம்! நம் உடன்பிறந்தார்கள் எழுவரையும் சிறைமீட்போம்! என்று தெரிவித்துள்ளார்.

English summary
Immediately release seven Tamilans; Seeman calls for human chain struggle
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X