'பாதுகாப்பான இடம் தாயின் கருவறை மட்டுமே..' மாங்காட்டில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை
சென்னை: சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடைசி கடிதமும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது..
Recommended Video
தமிழகத்தில் பள்ளிகளில் பாலியல் தொல்லை காரணமாக மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது விஸ்வரும் எடுத்துள்ளது,
இது தொடர்பாகத் தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் பெரியளவில் பலன் அளிப்பதாகத் தெரியவில்லை.

மாணவி தற்கொலை
இந்தச் சூழலில் சென்னை அடுத்துள்ள மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்து விட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன் மாணவி எழுதிய கடைசி கடிதமும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்து கொண்ட அந்த மாணவியின் தந்தை ராமாபுரத்தில் உள்ள தனியார் வங்கியில் புரிந்து வருகிறார். இன்று காலை அவரது தந்தை வேலைக்குச் சென்று விட்டார். பிற்பகல் நேரத்தில் தாய் அருகிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பியுள்ளார். அப்போது அறைக்குச் சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. கதவைத் தட்டியும் திறக்காததால் பதற்றமடைந்த தாய், அருகிலிருந்தவர்களின் உதவியுடன் கதவை உடைத்துள்ளனர். அப்போது மாணவி புடவையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

கடிதம்
தாயார் வெளியே சென்றிருந்த போது, தனியாக இருந்த நேரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலை கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அந்த மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்யும் முன் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

பாலியல் தொல்லை
பாலியல் துன்புறுத்தலை நிறுத்துங்கள் என்று தொடங்கும் அந்த கடிதத்தில், பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறை மட்டுமே என்று அந்த மாணவி உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இதுக்கு மேல என்னால வாழ முடியாது. ரொம்ப வலிக்கிது. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை. நிம்மதியாகத் தூங்கக் கூட முடியவில்லை. .அந்த கனவு வந்து போவுது. படிக்க முடியல. இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்ல. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் மட்டுமே" என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், School is Not Safety என்றும் மாணவி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடும் அதிர்ச்சி
அந்த மாணவி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தவர் என்று முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொல்லை காரணமாகப் பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் மிகப் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்தச் சம்பவத்திற்குப் பலரும் கண்டம் தெரிவித்து வருகின்றனர். பெண் குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறிய சமூகம் அதற்காக வெட்கித் தலைகுனிய வேண்டும் என்று சாடியுள்ள பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் உட்பட எந்த பெண் குழந்தைகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாகக்கூடாது; தற்கொலைகள் கூடாது என்ற நிலையை உருவாக்கத் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

உதவி எண்கள்
தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications