சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிமுக கலகங்கள்.. எஸ்.டி.எஸ். முதல் சசிகலா வரை.. அன்று எம்.ஜி.ஆர் இன்று எடப்பாடியார்!

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் மீள்வருகை அதிமுகவில் மீண்டும் கலகத்துக்கு விதை போட்டிருக்கிறது. கட்சிகள் என்றால் கலகங்கள் இல்லாமல் இருக்காது- அதுவும் கழகங்கள் கொண்ட தமிழகத்தில் வரலாறு நெடுகிலும் கலகங்கள் பயணித்து கொண்டுதான் இருக்கின்றன.

திமுகவின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர்., கணக்கு கேட்ட விவகாரத்துக்காக அக்கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். அந்த கலகத்தில் பிறந்ததுதான் அதிமுக. அதுவே பின்னாளில் அஇஅதிமுகவாகவும் உருமாறியது.

பொதுவெளியில் எம்.ஜி.ஆர். ஆகப் பெரும் ஆளுமையாக போற்றப்படுகிறார். திரை வாழ்வு தொடங்கி இன்று வரை எம்.ஜி.ஆர் பற்றிய சிலாகிப்புகள், கிசுகிசுக்கள், சர்ச்சைகள், புகழாரங்கள் அத்தனையும் கலந்து மிகப் பெரிய தலைவராக இந்த தலைமுறைக்கு எம்.ஜி.ஆர். உருவகப்படுத்தப்பட்டு இருக்கிறார். இன்று அரசியலுக்கு வந்திருக்கும் கமல்ஹாசன் கூட, எம்ஜிஆரின் நீட்சி என தன்னை பிரகடனம் செய்து கொள்கிறார்.

எஸ்.டி.எஸ்.- சசிகலா

எஸ்.டி.எஸ்.- சசிகலா

கழகங்களே இல்லாத தமிழகம் எனும் முழக்கத்தை தெருதெருவாக பேசிய பாஜக கூட எம்.ஜி.ஆரை தங்களது ஆதர்ச தலைவராக முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட எம்.ஜி.ஆருக்கு எதிராக முதல் கலகக் குரல் கொடுத்தவர் எஸ்.டி. சோமசுந்தரம். வரலாற்றின் விசித்திரம் என்னவெனில் காவிரி டெல்டாவான பட்டுக்கோட்டை எஸ்.டி.சோமசுந்தரம் அன்று அதிமுகவில் முதல் கலகக் குரல் எழுப்பினார். இன்று அதிமுகவின் எதிர்காலம் எது என்பதை தீர்மானிக்கும் கலகக் குரலோடு களத்துக்கு வருகிறார் அதே டெல்டாவின் சசிகலா.

எம்ஜிஆர்- எஸ்டிஎஸ்

எம்ஜிஆர்- எஸ்டிஎஸ்

எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் மூத்த தலைவராக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம். அன்று எஸ்.டி.எஸ்-க்கு அப்படியான ஒரு ஆதரவு டெல்டா மாவட்டத்தில் இருந்தது. அதிமுகவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் எஸ்டிஎஸ். அதிமுகவின் இணை நிறுவனரே எஸ்டிஎஸ் அய்யா என இன்றும் அவரது ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர். 1982-ல் ஜெயலலிதாவை அதிமுகவுக்குள் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அன்றே தொடங்கிவிட்டது அதிமுகவில் கலகக் குரல். அடுத்தடுத்து ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கூட கூட எதிர்ப்புகள் பேரலையாக எழுந்தது. இந்த எதிர்ப்புகளின் உச்சவடிவமாக எஸ்.டி.சோமசுந்தரம், எம்.ஜிஆருக்கு எதிராக வரிந்து கட்டி கொண்டு நின்றார். இதனால் எஸ்.டி.சோமசுந்தரத்தை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்தார் எம்.ஜிஆர்.

எஸ்டிஎஸ் தனி கட்சி

எஸ்டிஎஸ் தனி கட்சி

இதனைத் தொடர்ந்து நமது கழகம் என்கிற தனி கட்சியை தொடங்கி சில நிகழ்வுகள் மூலம் தமக்கும் மாஸ் இருக்கிறது என காட்டிக் கொண்டிருந்தார் எஸ்.டி.எஸ். ஆனால் சொல்லிக் கொள்ளும்படியான தேர்தல் வெற்றிகளை அவரால் பெற முடியாமல் போனது. பின்னர் 3 ஆண்டுகால தனி கட்சி வனவாசத்தை முடித்துக் கொண்டு எம்ஜிஆருடன் மீண்டும் இணைந்தார் எஸ்டிஎஸ். எந்த ஜெயலலிதாவை எதிர்த்து எம்ஜிஆருக்கு எதிராக கொடிபிடித்தாரோ அதே ஜெயலலிதாவின் வாகனத்தில் தாத்தாவாக தொங்கிக் கொண்டு போய் புதுசரித்திரத்தையும் எழுதிய பரிதாபத்துக்குரியவரும் எஸ்டிஎஸ்தான். எஸ்.டி.எஸ்.தான் என்று இல்லை...ஆர்.எம். வீ, காளிமுத்து என அன்று எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதாவை எதிர்த்து பலரும் மல்லுக்கட்டினார்கள். இவர்கள் அத்தனை பேரும் பின்னாளில் அதே ஜெயலலிதா தலைமையில் கீழ் பணியாற்றியதும் சரித்திரம்.

டெல்டா சசிகலா

டெல்டா சசிகலா

இப்போதும் அதே டெல்டாவில் இருந்து கலகக் குரலோடு அதிமுகவில் புயலை வீச வரப் போகிறார் சசிகலா. ஜெயலலிதா மறைந்த உடனேயே தம்மை அதிமுகவின் எதிர்காலமாக சித்தரித்துக் கொண்டு உருமாற்றி உடைமாற்றி வாழும் ஜெயலலிதாவாக வலம் வந்தவர் சசிகலா. எப்படியும் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிடுவது என கூவத்தூர் கூத்துகளை அரங்கேற்றிப் பார்த்தார். ஆனால் ஆடுகளம் சசிகலாவுக்கு எதிராக இருந்தது. இதனால் சிறைவாசத்தை சசிகலா அனுபவிக்க நேர்ந்தது. அப்போது சசிகலாவின் தளபதியாக, எடப்பாடி பழனிசாமிதான் தேர்வானார். எடப்பாடியாரே முதல்வராக்கப்பட்டார்.

சசிகலா- எடப்பாடியார்

சசிகலா- எடப்பாடியார்

சசிகலா சிறைக்குப் போக எடப்பாடியார் தமது கரத்தை அதிமுகவில் வலுவாக்கிக் கொண்டார். தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸை தம்முடன் இணைத்துக் கொண்டார். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரையும் தமது ஆதரவாளர்களாக்கினார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற சர்ச்சை வெடித்தபோது அதை சாதுரியமாக கையாண்டு சாதித்தேவிட்டவர் எடப்பாடியார். இப்போது சிறை மீண்டு வந்திருக்கிறார் சசிகலா. ஆனால் எடப்பாடியார் பிடியில் அதிமுக இருக்கிறது. இப்போது எடப்பாடியாரின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்போம் என சசிகலாவும் அவரது உறவுகளும் கோதாவில் குதித்திருக்கிறார்கள்.. சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி ஓபிஎஸ் இந்த ஆட்டத்தில் இப்போது ஆப்லைன் மோடுக்கு போய்விட்டார். இதனால் சசிகலா vs எடப்பாடியார் என களம் பரபரப்பாக காத்திருக்கிறது. இந்த புதிய கலகமானது அதிமுகவின் எதிர்காலம் என்னவாகும் என்பதை சொல்லப் போகிறது. வெல்லப் போவது சசிகலாவா? எடப்பாடியாரா? என்கிற வரலாறு அடுத்தடுத்த நாட்களில் எழுதப்பட்டுவிடும்.

எடப்பாடியார் வியூகம்

எடப்பாடியார் வியூகம்

அதிமுகவில் சாதாரண கிளைச்செயலராக இருந்து இன்று முதல்வராக விஸ்வரூபம் எடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. சசிகலாவால் முதல்வராக்கப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி. ஆனால் முதல்வர் நாற்காலியில் அமர்ந்த போது ஓபிஎஸ் ஒருபக்கம் எதிர்த்து கொண்டிருந்தார். தமது அரசுக்கு எதிராக வாக்களித்த அந்த ஓபிஎஸ், அவரது ஆதரவு 11 எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு தமது அரசியல் ஆட்டத்தை ஆடினார் எடப்பாடியார். பின்னர் தினகரனும் 18 எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கினர். அத்தனை பேரையும் ஒரேடியாக தகுதி நீக்கம் செய்து அசரவைத்தார் எடப்பாடியார்.

திமுகவை திணறவிட்டவர்..

திமுகவை திணறவிட்டவர்..

விரல் விட்டு எண்ணும் நாட்கள்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நீடிக்கும் என்று திமுக வாய்ப்பாடு போல பாடி வந்தது. ஆனால் இந்த வாய்ப்பாட்டையே 3 ஆண்டுகாலம் ஒப்புவிக்க வைத்து சாணக்கியத்தனத்தை நிரூபித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இப்போது ஆட்சிக் காலத்தில் இறுதியில் நின்று ஆளுநரே சொல்லிவிட்டார் ஆட்சியின் கடைசி பட்ஜெட் இதுதான் என புளகாங்கிதம் அடையும் பரிதாபத்துக்கு திமுகவை தள்ளிவிட்டவர் எடப்பாடியார்.

English summary
Here is a history of AIADMK's past rifts and revolts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X