உனக்கு இந்தி தெரியாது.. எனக்கு இங்கிலீஷ் தெரியாது! ட்விட்டரில் தமிழர்கள் சம்பவம் - ஹேஷ்டேக் டிரெண்ட்
சென்னை: மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெறும் சூழலில் இந்தி திணிப்புக்கு எதிராக ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அலுவல் மொழிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்றது.
இதில் 112 பரிந்துரைகள் செய்யப்பட்டு, அவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பரிந்துரைகளில் பெரும்பாலானவை இந்தி மொழியை திணிக்கும் முயற்சியாகவே இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

திமுக போராட்டம்
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து திமுக போராட்டம் அறிவித்து இருக்கிறது. அக்டோபர் 15 ஆம் தேதி திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ட்விட்டர் டிரெண்ட்
இந்த நிலையில் இந்தி திணிப்பை எதிர்த்து ட்விட்டரில் #StopHindiImposition என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஹேஷ்டேக்குடன் பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா, கருணாநிதி, முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களின் கருத்துக்களையும், இந்தி திணிப்பு எதிரான தங்களின் சொந்த கருத்துக்களையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்தி தெரியாது
நடிகையும், பிக் பாஸ் போட்டியாளருமான காஜல் பசுபதி ட்விட்டரில் இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஒரு இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுமி ஒருவரிடம் நடுவர் பெயர் என்ன என்று இந்தியில் கேட்க தனக்கு இந்தி தெரியாது என்று அவர் சொன்னதை கேட்டு நடுவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ஒரு நடுவர் "உங்களுக்கு இந்தி தெரியாது எங்களுக்கு ஆங்கிலம் தெரியாது." என்று சொல்ல அரங்கே சிரிக்கிறது.

திணிப்பு
மானசா சங்கீத் என்ற பெண், இந்திய அரசியலமைப்பு சட்டம் 343 இன் இந்தியாவுக்கு தேசிய மொழி கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளார். அத்துடன் அவர் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் சாமியார் ஒருவர் இந்தி கற்பதில் என்ன தவறு என்று சொல்ல, ராஜ்மோகன் "ஊட்டிவிடுவது வேறு, திணிப்பது வேறு" என்று சொல்கிறார்.

இந்திக்காரர்கள்
அருண் குமார் என்ற திமுக ஆதரவாளர், "இந்தி திணிப்புக்கு எதிராக 1938-ஆம் ஆண்டே தமிழ்நாடு தமிழருக்கே என்று முழங்கியவர் தந்தைப் பெரியார்." என்று குறிப்பிட்டு இருந்தார். காளிதாஸ் பாரதி என்ற நபர், "இந்திக்காரர்கள் மட்டுமே இந்தியக் குடிமக்கள் என்றும் பிற மொழி பேசுபவர்களை இரண்டாந்தர குடிமக்களாக நடத்துவதை தமிழ்நாடு ஏற்காது." என்று குறிப்பிட்டுள்ளார்.

இன அழிப்பு
"ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்ற சர்வாதிகார கொள்கையை கடைபிடிக்கிறது பாஜக அரசு." என்று நவீன் என்ற நபர் குறிப்பிட்டுள்ளார். டேனியல் சந்துரு என்ற நபர், "உலகிலேயே மொழியை பாதுகாக்க நடைபெற்ற ஒரே போராட்டம் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம்." என்றார்.

வெறுப்பரசியல்
இதுகுறித்து வெங்கடேசன் என்ற நபர், "இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியாவா? இந்தியாவை "ஹிந்தி-யா"வாக மாற்றத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகாரம் கண்டிக்கத்தக்கது." என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications