வெறிகொண்ட ஆந்திர கும்பல்.. தமிழக மாணவர்கள் மீது ஓடஓட தாக்குதல்! எல்லையில் பதற்றம் -திருமா ட்வீட்
சென்னை: தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்து இருக்கும் சுங்கச்சாவடியில் தமிழக மாணவர்களை குறிவைத்து தெலுங்கு கும்பல் கம்பு கட்டைகளை கொண்டு தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருப்பதி அருகே தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைந்து இருக்கிறது புத்தூர் எஸ்.பி.புரம் சுங்கச்சாவடி. இந்த சுங்கச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இரு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்தும், பொது போக்குவரத்தும் இவ்வழியே நடைபெற்று வருகிறது. ஏராளமாக ஆந்திர வாகனங்கள் தமிழ்நாட்டிற்கும் தமிழக வாகனங்கள் ஆந்திராவுக்கும் சென்று வருகின்றன.

தமிழக மாணவர்கள்
திருப்பதியில் உள்ள சட்டக்கல்லூரியில் ஏராளமான தமிழக மாணவர்கள் சட்டம் பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இந்த கல்லூரியில் தேர்வு நடைபெற்று உள்ளது. இதற்காக தமிழக மாணவர்களுக்கு கல்லூரிக்கு சென்று இருக்கின்றனர். தேர்வு எழுதிவிட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் தமிழகம் திரும்பிக் கொண்டிருந்தனர்.

சுங்கக்கட்டணம்
அப்போது புத்தூர் அருகே எஸ்.பி.புரம் சுங்கச்சாவடி வழியாக வந்துகொண்டிருந்த மாணவர்களின் காரில் பாஸ்ட் டேக் இல்லாத காரணத்தால் சுங்கச்சாவடி ஊழியர்கள் இரு மடங்கு கட்டணம் செலுத்த கூறி இருக்கிறார்கள். இதற்கு மறுப்பு தெரிவித்த தமிழக மாணவர்கள் சுங்கச்சாவடி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

தாக்குதல்
இதனை கண்ட அங்கிருந்த மக்கள் தமிழக மாணவர்களை சுங்கச்சாவடி ஊழியர்களுடன் சேர்ந்துகொண்டு ஓட ஓட விரட்டி தாக்கி இருக்கிறார்கள். அப்போது தமிழக மாணவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களுடன் வந்த பெண்கள் மற்றும் உறவினர்கள் காயமடைந்து உள்ளார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமாவளவன் கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், "ஆந்திர எல்லை புத்தூர் சுங்கச்சாவடியில் கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறினையடுத்து தமிழ்நாட்டைச் சார்ந்த கல்லூரி மாணவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான வண்டிகள் உடைத்து நொறுக்கப்பட்டுள்ளன. தாக்கப்பட்டவர்களின் நிலை தெரியவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications