டாஸ்மாக் முறைகேடு:செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் இருக்கு.. உயர்நீதிமன்றத்தில் பாஜக நிர்வாகி பதில்
சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் இருக்கிறது. முறைகேடுகளை மறைக்கவே தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவருக்கு பாஜகவினருக்கும் இடையே கருத்து மோதல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமைலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் இடையே அடிக்கடி வார்த்தை போர் ஏற்பட்டு வருகிறது. இதனால் சமீப காலமாக பாஜக தலைவர் அண்ணாமலை, செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என விமர்சனம் செய்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்! கபடி போட்டியால் களைகட்டிய கரூர்! கொண்டாட்டத்தை தொடங்கிய செந்தில்பாலாஜி!

ஐடி விங்க் தலைவர்
இதேபோல் தமிழக பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் சிடிஆர் நிர்மல் குமார் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து வந்தார். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டு ஆதாரங்கள் இன்றி சுமர்த்தப்படுவதாகவும், அவதூறு பரப்பும் வகையில் போலியான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார்.

நீதிமன்றம் போட்ட தடை
மேலும் சிடிஆர் நிர்மல் குமாரிடம் ரூ.10 கோடி நஷ்டஈடு கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. அதோடு தன்னை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட நிர்மல் குமாருக்கு தடை விதிக்கக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

பதில் மனுத்தாக்கல்
அதோடு வழக்கு தொடர்பாக நிர்மல் குமார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. பாஜகவின் நிர்மல் குமார் சார்பில் பதில் மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல்வேறு அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பதில் மனுவில் இருப்பது என்ன?
இந்த பதில் மனுவில் ‛‛டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் இருக்கிறது. முறைகேடுகளை மறைக்கவே தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழக நிதி அமைச்சர் அளித்த ஒரு பேட்டியிலும் முறைகேடு நடந்திருப்பதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் தான் குற்றச்சாட்டு வைத்தேன். எனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என செந்தில் பாலாஜி கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. என்னிடம் ஆதாரம் உள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு
அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றி பேசுவதற்கு விதிக்கப்பட்ட தடை என்பது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது. இதனால் நீதிமன்றம் அதனை ரத்து செய்ய வேண்டும். அதோடு இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணை டிசம்பர் 6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.