"தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம்!" ஆயுத பூஜையை மட்டும் கொண்டாடிவிட்டு புஸ்ஸி ஆனந்த் அறிவுரை!
சென்னை: தவெக நிர்வாகிகள் யாரும் தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கான உத்தரவை தவெக தலைவர் விஜய் பிறப்பித்துள்ளாராம்.
இதுகுறித்து புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பதாவது: "இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை தவெக நிர்வாகிகள் யாரும் கொண்டாட வேண்டாம். கரூரில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபாவளி கொண்டாட்டங்களை தவிர்த்துவிடலாம். தவெக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்பேரில் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களை தவிருங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சென்னை நீலாங்கரை வீட்டிற்கு வந்த விஜய், 3 நாட்கள் கழித்து கரூரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த கரூர் சம்பவம் நடந்து முடிந்த 4 நாட்களில் ஆயுத பூஜை வந்தது.
அப்போது விஜய்யின் பிரச்சார வாகனம், கார்கள் உள்ளிட்டவைகளுக்கு பனையூர் அலுவலகத்தில் பூஜை போடப்பட்டிருந்தது. 41 உயிர்களை காவு வாங்க காரணமாக இருந்த அந்த வாகனத்திற்கு பூஜை போட்டிருப்பதை பலர் விமர்சித்தனர். அந்த பெரிய வாகனம் கூட்ட நெரிசலில் நுழைந்ததால்தான் அதற்கு வழிவிட முண்டியடித்த போது பலர் கீழே விழுந்து உடல் நசுங்கி பலியாகிவிட்டனர்.
ஆயுத பூஜையை கொண்டாடிவிட்டு தற்போது தீபாவளி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என புஸ்ஸி ஆனந்த் கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கேதார கவுரி நோன்பு இருப்போர் 21 ஆம் தேதி அதிரசம் செய்து நோன்பிருப்பது அவசியம். இது தங்கள் கணவனுக்கு தீர்க்காயுளை கொடுக்க வேண்டியும் திருமாங்கல்யம் நிலைத்து நிற்பதற்காகவும் கணவன்- மனைவி இடையே ஒற்றுமை ஓங்கவும் அனுசரிக்கப்படும் ஒரு விரதமாகும்.
இதை திருமணமான பெண்கள் கடைப்பிடிப்பார்கள். இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணித்து வருகிறார்கள். கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் பயணித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications
