Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை- எஸ்சி எஸ்டி-க்கு இடஒதுக்கீடு தேவை-ரவிக்குமார் எம்.பி வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் சட்ட மேலவையை மீண்டும் கொண்டு வந்தால் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் ரவிக்குமார் எழுதியுள்ளதாவது: தமிழகத்தில் மீண்டும் மேலவை கொண்டு வரப்படும் என்று தற்போதைய அரசு அறிவித்துள்ளது. அரசு விரும்பினால் இதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றுவது சிரமமல்ல. இதற்கு முன்னர் தி.மு.க. ஆட்சி நடந்த மூன்று சந்தர்ப்பங்களில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மோடி அரசு அதற்கு ஒப்புதல் அளிக்குமா எனத் தெரியவில்லை.

தமிழகத்தின் சட்டமன்ற வரலாற்றில் சட்ட மேலவைக்கு முக்கியமான பங்கு உண்டு. இந்திய அரசு சட்டம் 1935-இன் கீழ்தான் முதன் முதலில் சட்டமேலவை உருவாக்கப்பட்டது. 1937-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமைக்கப்பட்ட மேலவையானது சட்டப் பேரவையைப் போல ஐந்தாண்டுக்கு ஒரு முறை கலைந்துவிடக்கூடியதாக இல்லாமல் நிலைத்திருக்கக் கூடியதாக அமைக்கப்பட்டது. மேலவையின் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை பதவி இழந்து, வேறு உறுப்பினர்கள் பதவி ஏற்பார்கள் என்ற நடைமுறை அப்போதுதான் உருவாக்கப்பட்டது.

உறுப்பினர்களும் தேர்வுகளும்

உறுப்பினர்களும் தேர்வுகளும்

முதன் முதலாக கொண்டு வரப்பட்ட மேலவையில் குறைந்த பட்சம் 54 உறுப்பினர்கள் இருப்பார்கள் என வரையறுக்கப்பட்டது. அந்த நடைமுறை 1952-ம் ஆண்டு வரை நீடித்தது. 1952-ம் ஆண்டுக்குப் பிறகு மேலவையில் 72 உறுப்பினர்கள் என எண்ணிக்கை உயர்த்தப்பட்டது. அதனுடைய உறுப்பினர்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுவது என்ற நடைமுறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும், சட்டப்பேரவை உறுப்பினர்களால் 24 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர் எனவும் வரையறுக்கப்பட்டது. பட்டதாரிகளுக்கென 6 பிரதிநிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகமெங்கும் உள்ள ஆசிரியர்கள் வாக்களித்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மீதமுள்ள 12 உறுப்பினர்களை ஆளுநர் நியமிப்பார் என தீர்மானிக்கப்பட்டது. அது மட்டுமின்றி, மேலவையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சுழற்சி மூலம் பதவி இழப்பார்கள் என்றும் திருத்தம் செய்யப்பட்டது. தமிழகத்தின் முக்கியமான தலைவர்கள் பலரும் சட்டமேலவையில் உறுப்பினர்களாக இருந்துள் ளனர்.

மேலவை உறுப்பினராக அண்ணா

மேலவை உறுப்பினராக அண்ணா

மேலவையின் விதிகளின்படி அதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என வரையறுக்கப்பட்டிருந்ததால், மூதறிஞர் ராஜாஜியும், பேரறிஞர் அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டுதான் முதலமைச்சர்களாக பதவி வகித்தனர். 1952-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது மூதறிஞர் ராஜாஜி மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அதுபோலவே, 1967-ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை அரியணையில் ஏற்றிய பேரறிஞர் அண்ணாவும் மேலவையின் உறுப்பினராக நியமனம் பெற்றே முதல்வராகப் பொறுப்பேற்றார். பிற்காலத்தில் முதல்வராகப் பொறுப்பேற்ற எம்.ஜி.ஆரும் தொடக்க காலத்தில் மேலவை உறுப்பினராக இருந்தவர்தான். இந்தியா முழுவதும் ஒரு சில மாநிலங்கள் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் மேலவை என்பது நடைமுறையில் உள்ளது.

மேலவை என்பது என்ன?

மேலவை என்பது என்ன?

நாடாளுமன்றத்திலும்கூட மாநிலங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மாநிலங்களவை இருப்பதை நாம் அறிவோம். அதுவும் ஒரு மேலவைதான். நமது நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு நாடுகளிலும் இப்படியான இரு அவைகள் நடைமுறையில் இருக்கின்றன. நேரடியாக உறுப்பினர்களை மக்கள் தேர்வு செய்து அனுப்புகின்ற அவை ஒன்று. பல்வேறு தரப்பினரைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டு அமைக்கப்படுகிற மேலவை மற்றொன்று. அமெரிக்காவில் இப்படி இரு அவைகள் இருந்தபோதிலும், அந்த இரு அவைகளின் உறுப்பினர்களும் நேரடியாக தேர்தல் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகிற நிலை உள்ளது. அத்தகைய நடைமுறை உள்ள நாடுகள் மிகக் குறைவுதான். தமிழகத்தில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வந்த சட்டமேலவையானது பல்வேறு சிறப்பு வாய்ந்த விவாதங்கள் நடைபெற்ற பெருமைக்கு உரியதாகும். பேரவையில் நடைபெற்ற விவாதங்களை விடவும், மேலான தரத்தில் சட்டமேலவை விவாதங்கள் அமைந்திருந்ததை நாம் அறிய முடிகிறது. கட்சிகள் காரசாரமாக மோதிக்கொள்ளும் சட்டப்பேரவையை போலல்லாது நயத்தக்க நாகரிகத்தைப் பேணுகிற அறிவார்ந்த விவாதங்களை நடத்துகிற மன்றமாக மேலவை விளங்கியது.

அண்ணாவின் உதாரணம்

அண்ணாவின் உதாரணம்

இதை சுட்டிக்காட்டுவதற்குத்தான் பேரவையையும், மேலவையையும் 'கப் அண்டு சாசர்' என்ற உதாரணத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் பயன்படுத்தினார். 'கப்பிலே இருக்கும் தேனீர் சூடாக இருந்தால் அதை ஆற்றிக் குடிப்பதற்கு எப்படி சாசரை பயன்படுத்துகிறோமோ... அப்படி சூடு பறக்கும் விவாதங்கள் நடைபெறும் பேரவையில் பரிமாறிக் கொள்ளப்பட்ட கருத்துகளை ஆற, அமர விவாதிக்கும் இடமாக மேலவை விளங்குகிறது' என்ற பொருளில்தான் அவர் அப்படிக் கூறினார். எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில், 1986-ம் ஆண்டில் மேலவை திடீரென கலைக்கப்பட்டது. அதற்கான காரணத்தை அறியும்போது அதை மீண்டும் கொண்டுவர வேண்டிய அவசியத்தை நாம் உணரலாம்.

மேலவையில் கருணாநிதி

மேலவையில் கருணாநிதி

1984-ம் ஆண்டு ஈழப் பிரச்னையை முன்வைத்து அன்று எதிர்க்கட்சியில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கலைஞரும், பொதுச்செயலாளர் பேராசிரியரும் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு கலைஞர் அவர்கள் மேலவைக்கு முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவர் மேலவை உறுப்பினராகப் பதவி ஏற்றார். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான் மேலவையையே கலைக்கிற முடிவுக்கு எம்.ஜி.ஆர். அரசு வந்தது. அன்று சமூகத்தின் பல தரப்பினரும் வேண்டாம் என்று சொல்லியும்கூட கேட்காமல் எம்.ஜி.ஆர். விடாப்பிடியாக மேலவையை கலைக்கிற தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். 1986-ம் ஆண்டு மே மாதத்தில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட அந்தத் தீர்மானத்துக்கு அதே ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்தார். அப்போது, மத்திய அரசோடு இணக்கமான உறவைக் கொண்டிருந்த காரணத்தால் மிக விரைவாக அந்த சட்டத்துக்கான ஒப்புதலை எம்.ஜி.ஆரால் பெறமுடிந்தது. 1986-ம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி தமிழக சட்டமேலவை கலைக்கப்பட்டது.

திமுகவின் மேலவை முயற்சிகள்

திமுகவின் மேலவை முயற்சிகள்

எம்.ஜி.ஆர். எடுத்த முடிவை மாற்றுவதில் உறுதியாக இருந்த தி.மு.க. 1989-ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழக சட்டப்பேரவையில் அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. மீண்டும் சட்டமேலவையை உருவாக்க வேண்டும் என்ற அந்தத் தீர்மானம் மத்திய அரசின் ஒப்புதலுக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அரசு நிலையற்றதாக இருந்த காரணத்தினால் தமிழக அரசின் தீர்மானத்துக்கு உடனடியாக ஒப்புதல் பெறமுடியவில்லை. 1990-ம் ஆண்டு மே மாதத்தில் மாநிலங்களவை அதற்கான ஒப்புதலை வழங்கியது. அதன்பிறகு நாடாளுமன்றத்துக்கு அந்தத் தீர்மானம் அனுப்பப்பட்டது. அதனிடையில், தி.மு.க. ஆட்சியை கலைக்க வேண்டுமென்று இங்கிருந்த எதிர்க்கட்சியினர் நெருக்குதல் கொடுத்த காரணத்தாலும், அவர்களுக்கு ஏற்ப ஆட்சியாளர்கள் அங்கே பொறுப்பேற்ற காரணத்தாலும் அந்தத் தீர்மானம் நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. மாறாக, தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.அதன் பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. சட்டமேலவையைக்கொண்டுவரவேண்டும் என்கிற தீர்மானத் தை ரத்துசெய்துஒரு தீர்மானத்தை சட்டப் பேரவையில்நிறைவேற்றியது. அ.தி.மு.க. ஆட்சியை இழந்து 1996 இல் தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போது இருந்த மத்திய அமைச்சரவை இந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்துவது என்று முடிவெடுத்தும்கூட அதில் காலதாமதம் நேர்ந்து வந்தது. தி.மு.க. ஆட்சியிலிருந்த ஐந்தாண்டுகளில் மத்திய அரசு அதுபற்றி சாதகமான முடிவெதையும் எடுக்கவில்லை. 2001-ல் தி.மு.க. ஆட்சி முடிவுற்று அ.தி.மு.க. மீண்டும் பதவிக்கு வந்த பிறகுவழக்கம் போல மேலவை தேவையில்லை என்று தீர்மானம் ஒன்றை அது சட்டப்பேரவையில் நிறைவேற்றி யது. 2006-11 ஆட்சிக் காலத்தில் மீண்டும் மேலவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது அதிமுகவோடு இடதுசாரிக் கட்சிகளும் மேலவை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது திமுக இடம்பெற்றிருந்த காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்தது என்றாலும் மேலவை அமைக்க அது ஒப்புதல் தரவில்லை. இப்படி திமுகவும் அதிமுகவும் மாறி, மாறி தீர்மானங்கள்போட்டதில் சட்டமேலவை வராமலேயே போய் விட்டது. இப்போது மேலவை மீண்டும் கொண்டுவரப்படுவது வரவேற்கத்தக்கதுதான்.

சட்ட மேலவையில் சமூக நீதி?

சட்ட மேலவையில் சமூக நீதி?

அதில் சமூகநீதி நிலைநாட்டப்படுமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி. இந்தியாவெங்கும் இருக்கின்ற சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு உள்ளது. ஆனால், இத்தகைய இடஒதுக்கீடு சட்டமேலவையிலோ, மாநிலங்களவையிலோ கிடையாது. அதன்காரணமாக அவர்களது பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கிடைக்கவேண்டியதில் மூன்றில் ஒரு பங்கு அளவுகூட இல்லை. தற்போது, மேலவை மீண்டும் கொண்டுவரப்பட்டால் அதில் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவர வேண்டியது மிகமிக அவசியமாகும். சமூக நீதிக்கொள்கையில் எப்போதுமே முன்னிலை வகித்துவரும் தமிழகம் இந்த விஷயத்திலும் இந்தியாவுக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+