அய்யோ வலிக்குமே பிள்ளைகளுக்கு! யானை கூட்டத்திற்காக பரிதவித்து பதறிய கிராமமக்கள்! கோவை மனமே தனிதான்.!
கோவை : கோவை நரசிபுரம் அருகே மின்வேலியை குட்டியுடன் யானை கூட்டம் கடந்த போது , அய்யோ வலிக்குமே பிள்ளைகளுக்கு என யானை கூட்டத்திற்காக பரிதவித்து பதறிய கிராமமக்கள் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதிகள் ஏரளமான காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக அதிக அளவில் வசித்து வருகின்றன.
குறிப்பாக நரசிபுரம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள தொண்டாமுத்தூர், இருட்டுப்பள்ளம், செம்மேடு, ஆலந்துறை ஆகிய பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.

கோவை வனப்பகுதி
வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி ஊருக்குள் வரும் யானைகள் அங்குள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளனர். சில நேரங்களில் அவற்றைக் கடக்கும் யானைகள் மின்சாரத்தை சிக்கி பலியாகி சம்பவங்களும் நடைபெற்று வருகிறது

காட்டு யானைகள்
மேலும் தற்போது கோடை காலம் என்பதால் கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் யானைகள் வனப்பகுதிகளை விட்டு வெளியேறி தண்ணீர் தேடி அடிக்கடி விவசாய பகுதிகளுக்கு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் தேவராயபுரம் பகுதியில் மிகச் சிறிய இரண்டு மாதமே ஆன சிறிய குட்டியுடன் மொத்தம் ஐந்து யானைகள் இன்று காலை விவசாய நிலப் பகுதியில் இருந்து மணபதி நோக்கி சென்றன.

விவசாய நிலத்தில் மின்வேலி
தண்ணீர் தேடி வந்த யானை கூட்டம் அங்குள்ள மின் வேலியை கடக்க முயன்ற நிலையில் அதிலிருந்த குட்டியானை மின் வேலியை கடக்க முடியாமல் பின்னோக்கிச் சென்றது. இதையடுத்து அங்கிருந்த கிராம மக்கள் கம்பியை மிதித்துச் செல்லுமாறு யானைகளிடம் சிறு பிள்ளைகளிடம் பேசுவது போல் உரையாடினர்.

கிராம மக்கள் உருக்கம்
இதையடுத்து கூட்டத்தில் உள்ள பெரிய யானை ஒன்று மின்வேலியை மிதித்து தரையில் பதிக்க குட்டி யானை பத்திரமாக வேலியை கடந்து சென்றது. அப்போது அங்கிருந்த மக்கள் அய்யோ பிள்ளைகளுக்கு வலிக்குமே என பேசிய வீடியோவனது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோவை மக்களின் பாசமே தனிதான் என சமூக வலைதளங்களில் பலரும் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications