இலங்கை: இன்று கொழும்பு சென்றடைகிறது தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின்-99!
கொழும்பு: தமிழ்நாடு அரசின் நிவாரணப் பொருட்களுடனான கப்பல் டான் பின் 99 இன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றடைகிறது.
இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. இலங்கையில் அடுத்த சில மாதங்கள் நிலைமை மிக மோசமாகும்; உணவுப் பஞ்சம் ஏற்படும் என்கிறார் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே.

இலங்கையின் இந்த பரிதாப நிலையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அனைத்து இலங்கை மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்தது. தமிழக அரசு சார்பில் இலங்கையின் அனைத்து இன மக்களுக்கு உதவும் வகையில் 40,000 டன் அரிசி, உயிர் காக்கும் மருந்து பொருட்கள், குழந்தைகளுக்கு வழங்க 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்புவது என கடந்த மாதம் 29-ந் தேதி தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், தமிழ்நாடு அரசு மருந்து பொருட்கள் நிறுவனம், ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடனான குழு ஒன்றையும் தமிழ்நாடு அரசு அமைத்தது.
தமிழகத்தில் அறிமுகமாகும் சொகுசு கப்பல் சுற்றுலா! ஆழ்கடலுக்கு சென்று வரும் 2 நாள் டூர்! ஹைய்யா ஜாலி!
இது தொடர்பாக மத்திய அரசின் அனுமதியையும் தமிழக அரசு பெற்றது. இதையடுத்து இலங்கைக்கு நிவாரணப் பொருட்களுடன் டான் பின் 99 என்ற கப்பல் சென்னையில் இருந்து புறப்பட்டது. 9000 மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால்மா, 55 வகையான அத்தியாவசிய மருந்துகள் என மொத்தம் ரூ40.55 கோடி நிவாரணப் பொருட்கள் இந்த கப்பலில் கொண்டு செல்லப்பட்டன.
சென்னை துறைமுகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த புதன்கிழமையன்று இந்த கப்பலை கொடி அசைத்து அனுப்பி வைத்தார். இக்கப்பல் இன்று இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளது. இதனிடையே இந்திய கடனுதவியின்கீழ் மற்றொரு 40,000 மெட்ரிக்தொன் டீசல் கொழும்பை வந்தடைந்துள்ளது என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.