கள்ளக்குறிச்சி மாணவி உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு.. கதறி அழுது கண்ணீருடன் பெற்று கொண்ட பெற்றோர்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி மர்மமரணம் அடைந்த நிலையில் அவரது உடல் இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மகளின் உடலை பார்த்து பெற்றோர், குடும்பத்தினர் கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
Recommended Video
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்தார்.
கடந்த 13ம் தேதி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக பள்ளி நிர்வாகம் கூறியது. ஆனால் மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் கூறினார். இதையடுத்து நீதிகேட்டு போராட்டம் நடைபெற்றது.

மறு பிரேத பரிசோதனை
கடந்த 17ம் தேதி நடந்த போராட்டம் வன்முறையானது. வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. பதற்றமான சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரதே பரிசோதனை முடிவடைந்த பிறகும் மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுத்து வந்தனர். மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மறுபிரதேச பரிசோதனைக்கு உத்தரவிட்டது. இருப்பினும் மனுததார் தரப்பில் டாக்டர் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை ஏற்கப்படவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு செய்தும் பலன் கிடைக்காததால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே மாணவியின் உடல் மறுபிரேத பரிசோதனை நடந்தது.

நீதிமன்றத்தில் வழக்கு
ஆயினும் மாணவியின் உடலை வாங்கவில்லை. இதையடுத்து மாணவியின் உடலை வாங்கி கொள்ள உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீது நேற்றும், நேற்று முன்தினமும் விசாரணை நடந்தது. அப்போது, மாணவியின் மறு பிரேத பரிசோதனையில் புதிதாக ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால் சரிபார்த்துக்கொள்ளலாம் என பிரேத பரிசோதனைக்கு நியமிக்கப்பட்ட குழு கூறியது.

உடலை பெற்று கொள்ளும் பெற்றோர்
இதையடுத்து அப்போது நீதிமன்றத்தின் மீது பெற்றோருக்கு நம்பிக்கை இருக்கிறதா? எனக்கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பப்பெறவதில்லை என கூறியது. மேலும், மாணவியின் உடலை வைத்து பெற்றோர் பந்தயம் கட்ட வேண்டாம். அமைதியாக தீர்வு காண வேண்டும். மாணவியின் பெற்றோர் மீது நீதிமன்றம் அனுதாபம் கொள்கிறது. மாணவியின் உடலை பெற்று கொள்ள கூறியது. இதற்கு மாணவியின் பெற்றோர் ஒப்புக்கொண்டனர். இன்று காலை 7 மணிக்கு உடலை பெற்று கொள்வதாக கூறினர்.

மருத்துவமனையில் உடல்
இதையடுத்து இன்று காலை 7 மணிக்கு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மாணவியின் உடலை அவரது குடும்பத்தினர் பெற்று கொள்ள உள்ளனர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட உள்ளது. இதையடுத்து மாணவியின் உடலை பெற்று கொள்ள இன்று காலை மாணவியின் பெற்றோர் புறப்பட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர்.

கதறி அழுது உடலை பெற்ற பெற்றோர்
இதையடுத்து மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.மருத்துவமனையின் பிணவறையில் இருந்த மாணவியின் உடல் இன்று காலை அமைச்சர் கணேசன், மாவட்ட ஆட்சியர், ஐஜிக்கள், எஸ்பிக்கள் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கதறி அழுது கண்ணீருடன் மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்று கொண்டனர். மாணவியின் பெற்றோர் குடும்பத்தினர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

உடலுக்கு அஞ்சலி
இதையடுத்து மாணவியின் உடலுக்கு அமைச்சர் கணேசன், அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஆம்புலன்ஸில் மாணவியின் உடல் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் செல்கின்றனர்.

போலீஸ் பாதுகாப்பு
இதையொட்டி கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் இறுதி சடங்குகள் நடைபெற உள்ள பெரியநெசலூர் கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவர்கள் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் மாணவியின் இறுதிசடங்கில் வெளியூர் மக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications