'எய்ம்ஸ்' மருத்துவமனையைக் கொண்டுவருவோம்.. - மணிப்பூர் பிரசாரத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு!
டெல்லி: மணிப்பூரில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியும், விளையாட்டுப் பல்கலைக்கழகமும் கொண்டு வரப்படும் என டிஜிட்டல் பிரசாரத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் நேற்று முதற்கட்ட சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மணிப்பூரின் ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.
முதற்கட்ட தேர்தலில் 78.03 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவின் போது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மணிப்பூர்
இந்நிலையில், மணிப்பூரில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்காக பிரதமர் மோடி மணிப்பூர் மக்களுடன் டிஜிட்டல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, '' மணிப்பூர் மக்கள் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளீர்கள். மிகப்பெரிய வாக்குப்பதிவை கொடுத்துள்ளீர்கள். அடுத்து வரும் இரண்டாம் கட்ட தேர்தலிலும் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்'' என்றார்.

பிரதமர் மோடி
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ''மலைகளுக்கு செல்லுங்கள், கிராமங்களுக்கு செல்லுங்கள் என பாஜக தொடர்ந்து பிரசாரம் செய்து வருகிறது. வடகிழக்கு மாநிலத்துக்கு பாஜக நிறைய செய்துள்ளது. குறிப்பாக மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிறைய செய்துள்ளது. எங்கள் பிரசாரம் மணிப்பூரில் காங்கிரஸை தோற்கடிக்கும்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி மணிப்பூரை ஆட்சி செய்த போது, எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. ஆனால் மொத்த மணிப்பூரையும் கொள்ளையடித்தது. வளர்ச்சிப் பணிகளை முடக்கியது. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு எல்லாமே வளர்ச்சி தான். மணிப்பூர் மிகப்பெரிய மாற்றத்தை செய்தது.

எய்ம்ஸ்
மணிப்பூரில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையைக் கொண்டுவருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம். அதேபோல், மணிப்பூர் இளைஞர்கள் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்களை ஊக்குவிக்க, மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகம் கொண்டுவரப்படும். வரும்காலத்தில் சுயதொழிலை ஊக்குவிக்க 100 கோடி அளவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்'' என்று பேசினார்.












Click it and Unblock the Notifications