மோடியின் தமிழக வருகை ரத்து - கொரோனா அதிகரிப்பால் காணொலியில் மருத்துவக்கல்லூரிகள் திறப்பு
மோடியின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
டெல்லி: தமிழகத்தில் ஜனவரி 12ம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை காணொலியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காணொலி காட்சி மூலம் மருத்துவக்கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஜனவரி 12ஆம் தேதி பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவ கல்லூரிகள் 37 உள்ளன. இதில் 5,125 மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. மருத்துவ கட்டமைப்பை விரிவுபடுத்தவும், கூடுதலான மருத்துவ மாணவர்களை சேர்க்கவும் வசதியாக புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்துக்கு 11 மருத்துவ கல்லூரிகள் ஒதுக்கப்பட்டன.
மருத்துவ கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களை தேர்வு செய்து அந்த மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்து திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் தலா ஒரு மருத்துவ கல்லூரி வீதம் 11 மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கான பணிகள் நடைப்பெற்று முடிந்துள்ளது.
ஒவ்வொரு கல்லூரியிலும் தலா 150 மாணவர்கள் வீதம் 1,650 மாணவர்களை சேர்ப்பதற்கு அகில இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியதோடு அனைத்து கல்லூரிகளையும் மத்திய குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது. அந்த ஆய்வின்போது சில குறைகள் சுட்டிக்காட்டப்பட்டது. அவற்றையும் தமிழக அரசு சீர் செய்ததை அடுத்து கல்லூரிகளை தொடங்க மருத்துவ கவுன்சில் அனுமதியளித்து உத்தரவிட்டது.
இதையடுத்து வரும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திரமோடி விருதுநகர் மாவட்டத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை நேரடியாக வந்து தொடங்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் நேரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு காணொலி காட்சி மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வரும் 12ஆம் தேதி மாலை 4 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
ஜனவரி 12ஆம் தேதி பிரதமர் மோடி மதுரையில் பொங்கல் விழாவில் பங்கேற்க இருந்தாக கூறப்பட்ட நிலையில் கொரோனா பரவல் காரணமாக தமிழக பாஜக அந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது. இதே போல மோடியின் புதுச்சேரி பயணமும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications