டெல்லியில் நடுங்கும் குளிர்.. 3 மாநிலங்களில் மழைக்கு 18 பேர் பலி-மும்பையில் கனமழை எச்சரிக்கை
டெல்லி : டெல்லியில் இன்று காலை கடும் குளிர் நிலவிய நிலையில், 3 வட மாநிலங்களில் கனமழையால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மும்பையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பருவ மழை வடமாநிலங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தலைநகர் டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மற்றும் அசாம் மாநிலங்களில் கனமழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தானில், மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகியுள்ளது.
இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, தானே மற்றும் ராய்காட் மற்றும் பால்கரின் சில பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் அங்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை தொடரும் என கணிப்பட்டுள்ளதால், மும்பைவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
அடுத்த மூன்று மணி நேரத்தில் பண்டாரா, நாக்பூர், கோண்டியா மற்றும் வார்தாவின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும். பண்டாராவில் பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோண்டியா, நாக்பூர், அமராவதி மற்றும் வார்தாவில் சில இடங்களிலும், விதர்பாவின் அகோலா, சந்திரபூர், கட்சிரோலி, யவத்மால், வாஷிம் மற்றும் புல்தானா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விதர்பாவின் நாக்பூர், வார்தா, பண்டாரா மற்றும் கோண்டியா மாவட்டங்களில் சில இடங்களில் கடுமையான காற்றழுத்த தாழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாக்பூர் மாவட்டத்தில், வெள்ளத்தில் மூழ்கிய பாலத்தை மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் சொகு காரில் கடக்கும்போது கார் அடித்துச் செல்லப்பட்டது. காரில் பயணம் செய்த 8 பேரில், 3 பேர் பலியாகினர். அவர்களில் இருவர் பாதுகாப்பாக நீந்தி சென்றனர். மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
உஸ்மானாபாத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், மஞ்சாரா, டெர்னா மற்றும் தவர்ஜா நதிகளை ஒட்டிய கிராமங்களில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.. இந்த ஆறுகளில் உள்ள அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் மழை குறைந்த போதிலும், நகரின் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை 26.2 டிகிரி செல்சியஸாக இருக்கும் என்றும், இது இயல்பை விட குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை 8:30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த ஒரு மணி நேரத்தில் என்சிஆர் (காசியாபாத், சப்ராவுலா, தாத்ரி, நொய்டா, கிரேட்டர் நொய்டா) சில இடங்கள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மிதமான மற்றும் கனத்த மழையுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .
குஜராத் மாநிலத்தின் வல்சாத், நவ்சாரி, சூரத், தபி, டாங், நர்மதா, சோட்டா உதேபூர் மாவட்டங்களிலும், சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர், தேவபூமி துவாரகா மற்றும் மோர்பி ஆகிய மாவட்டங்களிலும் இன்றுவரை கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தெற்கு குஜராத்தில் பலத்த மழை பெய்து வரும் நிலையில், சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கட்ச் மற்றும் ராஜ்கோட் பகுதிகளிலும் திங்கள்கிழமை இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
குஜராத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மழை தொடர்பான சம்பவங்களில் 6 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஜூன் 1 முதல் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மொத்தம் 27,896 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர், அவர்களில் 18,225 பேர் முகாம்களில் தங்கியுள்ளனர். மற்றவர்கள் வீடு திரும்பியயுள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை அமைச்சர் ராஜேந்திர திரிவேதி தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில், அடுத்த மூன்று நாட்களுக்கு பல இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. தென் மாநிலங்களில் கடந்த 5 நாட்களாக நிலவி வரும் வெள்ளப்பெருக்கால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. அடிலாபாத், வாரங்கல் மற்றும் பிற மாவட்டங்களில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், கிராமப்புறங்களில் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஜகிதாயல், கரீம்நகர், பெத்தப்பள்ளி, ஜெயசங்கர் பூபாலபள்ளி, முலுகு, பத்ராத்ரி கொத்தகுடேம், வாரங்கல் ஊரக மற்றும் நகர்ப்புற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால், நகரின் மையப்பகுதியில் உள்ள ஹுசைன் சாகர் ஏரி நிரம்பியுள்ளதால், தலைநகர் ஐதராபாத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், முன்னெச்சரிக்யைக கடந்த இரண்டு நாட்களாக நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அடிலாபாத் மாவட்டத்தில், கனமழையால் சுமார் 10 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, தற்காலிக அமைக்கப்பட்ட பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
நேரடிங்கோண்டா மண்டலத்தில் உள்ள தர்பதண்டாவைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஆற்றைக் கடக்கும்போது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். எனினும், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில், இடைவிடாத மழையால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல இடங்களில் சாலை இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மழை சேதங்களை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று ஆய்வு செய்தார். கடல் அரிப்பால் மாநிலத்தின் கடலோரப் பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வடக்கு கர்நாடகாவின் பல பகுதிகளில் ஆற்றங்கரையோரங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதல்வர் பொம்மை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications