ஆண்ட்ராய்டு போனில் வாட்ஸ்-அப் பயன்படுத்துகிறீர்களா? கவனம் தேவை.... எச்சரிக்கும் வாட்ஸ் அப் சிஇஓ
புதுடெல்லி: வாட்ஸ் அப் செயலியை அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் பிளேஸ்டோரில் மட்டுமே தரவிறக்கம் செய்யுமாறு பயனர்களுக்கு அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகார் வில் கேத்கார்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி, புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்தல் உள்பட ஏரளாமன வசதிகளை உள்ளடக்கிய வாட்ஸ் அப்பை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
குறிப்பாக இந்தியாவில் இதனை பயன்படுத்துவர்கள் எண்ணிக்கை மட்டும் 30 கோடியை தாண்டும் என்று சொல்லப்படுகிறது. பிரபலமான எந்த ஒருபொருளுக்கும் அதே போன்றதொரு போலியான ஒன்றும் உடனடியாக சந்தையில் கிடைக்கும்.

பாதுகாப்பு இல்லை
இணைய உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. ஏனெனில், வாட்ஸ் அப்-க்கு நிகரான அம்சங்களுடன் போலியான பல செயலிகளும் இணையத்தில் கிடைக்கிறது. வாட்ஸ் அப்-பை விட பல கூடுதல் அம்சங்கள் கிடைப்பதாக பலரும் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது.
ஆனால், இத்தகைய செயலிகளில் எந்த பாதுகாப்பும் இல்லை. இதை பயன்படுத்தினால், உங்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடு போகலாம் என்று எச்சரித்து இருக்கிறது வாட்ஸ் அப்.

முறைகேடுகளில் ஈடுபடுகிறது
இது குறித்து வாட்ஸ்-அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ( சிஇஓ) வில் கேத்கார்ட் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
வாட்ஸ் அப்-க்கு நிகரான பல சேவைகளை அளிப்பதாக போலி செயலிகள் இணையத்தில் உலவுவதை எங்களின் பாதுகாப்பு ஆய்வு குழு கண்டறிந்துள்ளது. குறிப்பாக 'ஹே மோட்ஸ்' என்ற டெவலப்பர் குழுவால் வெளியிடப்பட்டு இருக்கும் 'ஹே வாட்ஸ் அப்' செயலியை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது.
எனவே இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பயனர்களுக்கு பல புதிய அம்சங்களை அளிப்பதாக இத்தகைய செயலிகள், பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை திருடி முறைகேடுகளில் ஈடுபடுகிறது.

என்கிரிப்ஷன் வசதி கிடையாது
கிட்டத்தட்ட வாட்ஸ் அப் போன்றே காணப்படும் இந்த செயலிகளில் தனிநபர்களின் தரவுகளை பாதுகாக்கும் என்கிரிப்ஷன் வசதி கிடையாது. இதுபோன்ற போலி செயலிகளை கண்டறிந்து முடக்கும் முயற்சிகளில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். 'ஹேமோட்ஸ்' நிறுவனத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.
வாட்ஸ்-அப் போன்று காணப்படும் இத்தகைய போலி செயலிகள் பிளே ஸ்டோரில் இல்லை. எனினும், பயனர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அதாவது நேரடியாக அந்த இணையதளங்களுக்கே சென்று தரவிறக்கம் செய்யும் போது கவனத்துடன் தரவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்து
அதேபோல், வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை தரவிறக்கம் செய்யும் போது பிளே ஸ்டோரை தவிர்த்து மூன்றாம் தரப்பு இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்யக்கூடாது என்பதே தொழில்நுட்ப வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.
ஏனெனில் இன்றைய இணைய உலகில் தனிப்பட்ட நபர்களின் தரவுகள் ஒவ்வொன்றும் மிகவும் முக்கியத்துவம், மதிப்பு மிக்கதாக உள்ளது. எனவே இத்தகைய இணைய திருட்டுக்களில் இருந்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே இணைய முறைகேடுகளில் இருந்து தப்ப முடியும்.












Click it and Unblock the Notifications