கூவத்தூர் பார்முலாவைக் கையிலெடுக்கும் கோவா, உத்தரகாண்ட் - MLA -க்களைப் பாதுகாக்க போராடும் கட்சிகள்
டெல்லி: நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலில், உத்தரகாண்ட் மற்றும் கோவாவில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்பிருப்பதால், அங்கு வெற்றி பெறும் எம்.எல்.ஏ-க்கள் கட்சித் தாவாமல் இருக்க கூவத்தூர் பார்முலாவைக் கையிலெடுத்திருக்கிறார்கள் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர்.
கூவத்தூர் பார்முலாவா.. எங்கேயோ கேட்டதுபோல் இருக்கிறதா?. தமிழக அரசியல் தெரிந்தவர்களும், தெரியாதவர்களும் இந்த பெயரை மறக்க முடியாது. வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்களை தொகுதியில் பார்த்தோமோ இல்லையோ, கூவத்தூர் ரிசார்ட்டில் எடுக்கப்பட்ட போட்டோவிலும் வீடியோவிலும் பார்த்தோம்.
2016 டிசம்பர் மாதம் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். இதையடுத்து அன்று இரவே தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதையடுத்து சசிகலா - ஒ.பி.எஸ் இடையே பிரிவு ஏற்பட்டது. ஓ.பி.எஸ் ஜெயலலிதா சமாதி முன்பு தர்மயுத்தம் நடத்தினார்.

கூவத்தூர்
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு முன்னர் ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின் பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள கோல்டன் பே என்ற ரிசார்டில் தங்க வைக்க சசிகலா தரப்பு ஏற்பாடு செய்தது. கூவத்தூர் ரிசார்டுக்கு அழைத்து செல்லப்படும் போது சில எம்எல்ஏ-க்கள் தப்பி ஓபிஎஸ் அணிக்கு தாவினர். இதனால் சில நாள்கள் சசிகலாவும் அந்த ரிசார்டில் தங்கியிருந்தார். சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்ல, எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானார். இப்படித்தான் கூவத்தூர் உலக பேமஸ் ஆனது.

கூவத்தூர் பாணி
சசிகலா தொடங்கிவைத்த இந்த பாணியை அடுத்தடுத்து பல கட்சிகள் செயல்படுத்தியது. தமிழகத்தில் நடந்துமுடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும், திமுக தரப்பும் பல கவுன்சிலர்களை இதுபோன்று ஹோட்டல்களிலும், ரிசார்ட்டுகளிலும் தங்க வைத்தனர். தலைமை தலையிட்ட பிறகு தான், கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் வீடு திரும்பினர். ஒரு கவுன்சிலரின் கணவர், மனைவி கடத்தப்பட்டதாகவே புகார் கொடுத்தார். இந்த கூவத்தூர் பார்முலா இந்தியா முழுவதும் பரவி இருக்கிறது. ஆனால் என்ன வேறு வேறு பெயர்களில்

ஆபரேஷன் லோட்டஸ்
மணிப்பூரில்ல் கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்க தேவையான இடங்களைப் பெறவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி தேவையான இடங்களைப் பெற்றிருந்தது. ஆனாலும், தேர்தலுக்குப் பிறகு, மாநில கட்சிகளை சேர்த்துக்கொண்டு ஆட்சி அமைத்தது பாஜக. இன்னும் சில இடத்தில் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்ய வைப்பது; எம்.எல்.ஏக்களை கட்சி தாவ வைத்து ஆட்சியைக் கவிழ்த்துள்ளது பாஜக. இதை மீண்டும் செய்யவும் வாய்ப்பிருப்பதால் காங்கிரஸ் கட்சி ஜாக்கிரதையாக இருக்கிறது.

கோவா - உத்தரகாண்ட்
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் 65.37% வாக்குகள் பதிவாகின. 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்கள் தேவை. 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. கோவாவில் 79.61% வாக்குகள் பதிவாகின. 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை.

கருத்து கணிப்பு
உத்தரகாண்ட், கோவா, மணிப்பூரில் குழப்பமான சூழ்நிலை அல்லது தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு என்கின்றன கருத்து கணிப்பு முடிவுகள். உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களில் வெல்லும் என்பது எக்ஸிட் போல் முடிவுகளின் கணிப்பு. காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு சமமான போட்டி கொடுக்கும் என தெரிகிறது. இதனால் பாஜக எளிதாக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதே நிலைதான் கோவாவிலும் உள்ளது.

காங்கிரஸ்
கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்ததுமே, கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கட்சியை விழிப்புடன் இருக்க சொல்லி உத்தரவிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை. வெளி மாநிலங்களில் இருந்தும் இந்த இரு மாநிலத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் சென்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ஒருவருக்கு பிறந்தநாள் என்று சொல்லி கோவாவின் முக்கிய ஹோட்டல்களில் தங்கி இருக்கிறார்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள். வெற்றி பெற்ற பின் கட்சி மாறக்கூடாது என்ற காரணத்தால், கூவத்தூர் பார்முலாவை கையிலெடுத்துள்ளனர்.

ரிசார்ட் - ஹோட்டல்
கோவா மற்றும் உத்தரகாண்டில் உள்ள பெரிய ஹோட்டல்கள் மற்றும் ரிசார்ட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் தவிர இந்த இரு கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்கும் சிறு சிறு கட்சிகளின் வேட்பாளர்களும் இந்த ரிசார்ட்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து, ஆட்சி அமைப்பது குறித்து முடிவானதும் தான் இவர்கள் வெளியே வர முடியும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்தும் அங்கேயே கிடைக்கும்படி பார்த்துவருகிறார்கள் கட்சித் தலைமைகள். வாழ்க ஜனநாயகம் என்ற கோஷம் காற்றில் மிதந்துவருகிறது.












Click it and Unblock the Notifications