கண்முன்னே பறிபோன குழந்தையின் உயிர்.. காப்பாற்ற கதறிய தாய்! 1 மணி நேரம் யாரும் வரல! குஜராத்தில் ஷாக்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் தனது குழந்தையையும், கணவரையும் காப்பாற்றக்கோரி கதறிய காட்சிகள் நெஞ்சை உலுக்கியுள்ளன. இது தொடர்பான வீடியோ பரவலாக ஷேராகி வருகிறது.
வதோதரா மாவட்டத்தின் பத்ரா எனும் பகுதியில் உள்ள பாலத்தின் ஒரு பகுதி நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பாலத்தின் மேல் சென்றுக்கொண்டிருந்த வாகனங்கள் மஹிசாகர் ஆற்றில் விழுந்தன.
இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "பயங்கர சத்தத்துடன் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. அடுத்த சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இரண்டு லாரி, ஒரு கார் சில பைக்குகள் பாலத்தில் இருந்து கீழே விழுந்தன" என்று கூறியுள்ளனர்.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் சிலர், ஆற்றில் உயிருக்கு போராடியவர்களை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் மக்களால் முழு வேகத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சம்பவம் குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், மீட்பு படையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதில், ஒரு பெண் நீரில் மூழ்கிய வாகனத்தின் மீது அமர்ந்தவாறு, தனது குழந்தை மற்றும் கணவரை காப்பாற்றுங்கள் என்று கதறியுள்ளார்.
இந்த வீடியோவை பாலத்தின் மேல் இருந்த மக்கள் எடுத்திருக்கிறார்கள். கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள் உங்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் வந்துக்கொண்டிருக்கிறார்கள் என்று அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள்.
नदी में गिरी एक मां अपने बेटे और पति को बचाने की गुहार लगा रही है!
— Sadaf Afreen صدف (@s_afreen7) July 9, 2025
मोदी जी के गुजरात में ब्रिज गिर गया, कई गाड़ियां नदी में बह गई, कई लोगों की जान चली गई!#bridgecollapse pic.twitter.com/Vi1ZZn93gT
ஆனால், மீட்பு படையினர் வருவதற்குள் அப்பெண்ணின் குழந்தையும், கணவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர். முதலில் அப்பெண்ணை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள், பின்னர் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, அவரது குழந்தை மற்றும் கணவரை சடலமாக மீட்டிருக்கின்றனர். உயிருக்கு போராடிய குழந்தையையும், கணவரையும் காப்பாற்ற கதறிய பெண்ணின் வீடியோ பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த விபத்தில் உயிர் தப்பிய பெண்மணி, 'சோனல்பென்' என அடையாளம் காணப்பட்டிருக்கிறார். 35 வயதான இவர் தனது குடும்பத்தினர் 7 பேருடன் காரில் பாவ்நகரில் பிரார்த்தனைக்கு சென்றுக்கொண்டிருந்ததாகவும் வழியில் இந்த விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில்,
"நாங்கள் பிரார்த்தனைக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்தது. அப்போது அதிகாலை 6.30 மணி இருக்கும். நான் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்தேன். கார் ஆற்றில் விழுந்த போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. நான் எப்படியோ வாகனத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன்.
ஆனால், எங்கள் காரின் மீது பின்னால் வந்த லாரி விழுந்துவிட்டது. எனவே காரில் இருந்தவர்களால் வெளியே வர முடியவில்லை. ஒரு மணி நேரமாக நான் உதவிக்கு போராடினேன். யாரும் வரவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications