சிக்கல் தரும் சித்தராமையா..காவிரி விவகாரத்தில் பிடிவாதம்! டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம்
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய அமைச்சரை தமிழ்நாடு எம்பிக்கள் சந்தித்த நிலையில், இன்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அனைத்து கட்சி குழு டெல்லியில் மத்திய அமைச்சரை சந்திக்க உள்ளது.
தமிழ்நாட்டுக்கு நீர் தராமல் கர்நாடகா அணைகளை கொண்டு தடுத்து வரும் நிலையில், காவிரியில் நீர் இன்றி குறுவைப் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்து உள்ளனர். விவசாயிகளை காக்க வினாடிக்கு 5000 கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு கர்நாடக அரசுக்கு ஆணையிட்டு இருந்தது.

அந்த நீரையும் தமிழ்நாட்டிற்கு திறந்து விட முடியாது என கர்நாடக அரசு பிடிவாதம் காட்டி வருகிறது. கர்நாடக அரசுக்கு காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு இன்று வரை 102.30 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடகம் அரசு இதுவரை 35 டி.எம்.சி தண்ணீரைக் கூட தமிழ்நாட்டிற்கு வழங்கவில்லை.
தமிழ்நாட்டுக்கு கர்நாடகத்திலிருந்து இதுவரை வந்த தண்ணீரில் பெருமளவு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வந்ததே. அதுவும் மழை காரணமாக திறக்கப்பட்ட உபரிநீர் தான். 15 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் நீர் திறக்குமாறு காவிரி ஒழுங்குமுறை குழு உத்தரவிட்டுள்ள நீரின் மொத்த அளவு 6.25 டி.எம்.சிதான். ஆனால், கர்நாடகா அணைகளில் 63.80 டி.எம்.சி தண்ணீர் உள்ளது.

தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவும், துணை முதலமைச்சர் டிகே சிவகுமாரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கூட்டினார். மறுபக்கம் பாஜகவை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையும் காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவிலான போராட்டங்களை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உடனடியாக தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், குறுவைப் பயிர்கள் முழுமையாக கருகி பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து கட்சி எம்பிகளுடன், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், டெல்லி சென்று மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்தார்.

அப்போது கர்நாடகாவில் மழை பெய்தால் தமிழ்நாட்டிற்கு நீர் திறக்க ஆவண செய்வதாக அவர் உறுதியளித்ததாக துரைமுருகன் விளக்கமளித்தார். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இன்று டெல்லிக்கு சென்று கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டு, அவர்களுடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை சந்தித்து காவிரி விவகாரம் குறித்து பேச உள்ளார்.












Click it and Unblock the Notifications