புலனாய்வு அமைப்புகளை பழிவாங்க பயன்படுத்தும் பாஜக அரசு.. எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை
டெல்லி: நேஷ்னல் ஹெரால்டு வழக்கில் ஆஜராக வேண்டும் என அமலாக்கத்துறை ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்த நிலையில் இன்று ஆஜராகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு புலனாய்வு அமைப்புகளை வேண்டுமென்றே பழிவாங்கும் நோக்குடன் பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் ஒன்றாக கையெழுத்திட்டு அறிக்கை விடுத்துள்ளனர்.

அறிக்கை
அறிக்கையில், "மோடி தலைமையிலான மத்திய அரசு தங்களது அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வுத்துறை அப்பட்டமாக பயன்படுத்துகிறது. அரசியல் நோக்கத்திற்காக இந்த துறையை மத்திய அரசு துஷ்பிரயோகம் செய்துவிட்டது. பல அரசியல் தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறிவைக்கப்படுகின்றனர்." என விமர்சித்துள்ளனர். மேலும், "இப்படியான மக்கள் விரோத, விவசாயிகள் விரோத, அரசியலமைப்பு சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எங்களுடைய கூட்டு போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவோம்" என்றும் தெரிவித்து எதிர்க்கட்சியினர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

காட்சிகள் கூட்டு
இதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆர்ஜேடி, விசிக, சிபிஐ உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். முன்னதாக மக்களவையில் காங். எம்.பி மானிக்கம் தாகூர் அமலாக்கத்துறை துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்து விவாதிக்க வேண்டும் என ஒத்தி வைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினார். அதேபோல கௌரவ் கோகோவும், மத்திய அரசால் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினர்.

நோட்டீஸ்
இவரைத் தொடர்ந்து கேசி வேணுகோபாலும் இவ்வாறு நோட்டீஸை வழங்கியுள்ளார். காங்கிரஸ் மட்டுமல்லாது ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கும் இது குறித்து நோட்டீஸ் அளித்துள்ளார். அதேபோல இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பிக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பிக்களை பார்த்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "சட்டத்தின் முன் எல்லோரும் சமமா இல்லையா?" என கேள்வி எழுப்பினார்.

சோனியா அமலாக்கத்துறை
மேலும், "சோனியா காந்தி என சூப்பர் மனிதரா? அவர் சட்டத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என நினைக்கின்றீர்களா?" என்றும் கேள்வியெழுப்பினார். இதனால் நாடாளுமன்ற அவையில் கூச்சல் குழப்பம் மேலும் அதிகமானது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்குகளை யங் இந்தியா நிறுவனத்துக்கு மாற்றியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது என அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் ஏற்கனவே அமலாக்கத்துறை அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
