வளர்க்க வேண்டியது தாடியல்ல, வேலைவாய்ப்பு.. மோடிக்கு ரூ 100ஐ அனுப்பி.. ஷேவ் செய்ய சொன்ன டீ கடைக்காரர்
டெல்லி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த டீக்கடைகாரர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாயை மணியார்டர் மூலம் அனுப்பி, அதில் தாடியை ஷேவ் செய்துகொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே உலகின் அனைத்து நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக 2ஆம் அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகமாகவே இருந்தது.
கொரோனா பரவலை மத்திய அரசு சரியாகக் கையாள தவறிவிட்டதாக விமர்சனமும் பரவலாக அதிகரித்துள்ளது.

100 ரூபாய் அனுப்பிய மோடி
இந்நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த டீக்கடைகாரர் ஒருவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு 100 ரூபாயை மணியார்டர் மூலம் அனுப்பி, அதில் தாடியை ஷேவ் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மணியார்டரை அனுப்பியவர் இந்தாபூரை சேர்ந்த அனில் மோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அருகில் தேநீர்க் கடை வைத்துள்ளார்.

வளர்க்க வேண்டியது தாடியல்ல
பிரதமருக்கு மணியார்டர் அனுப்பியது குறித்து அனில் மோர் கூறுகையில், பிரதமர் மோடி தனது நன்கு தாடியை வளர்த்துக் கொண்டார். அவர் ஏதாவது வளர்க்க வேண்டும் என்று நினைத்தால், முதலில் நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கட்டும். பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகளை வேகப்படுத்த முயற்சிகளை அதிகப்படுத்தட்டும். நாட்டிலுள்ள சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தத் தேவையான முயற்சிகளை அதிகப்படுத்தட்டும்.

பிரதமர் மோடி
கொரோனா காரணமாக 2 முறை அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் மிகத் துயரமான நிலையில் தள்ளப்பட்டுள்ளனர். இதிலிருந்து அவர்களை மீட்கப்படுவதைப் பிரதமர் மோடி உறுதிப்படுத்த வேண்டும். இந்த நாட்டிலேயே மிகவும் உயர்ந்த பதவி என்றால் அது பிரதமரின் பதவி தான். நமது பிரதமர் மீது எனக்கு மிகப் பெரிய மதிப்பும் மரியாதையும் உள்ளது. பிரதமர் தனது தாடியை ஷேவ் செய்து கொள்ள எனது சேமிப்பிலிருந்து 100 ரூபாயை அவருக்கு அனுப்புகிறேன்.

கவனத்தை ஈர்க்க
நாட்டிலேயே மிகவும் உச்சபட்ச பதவியில் அவர் உள்ளார். அவரை காயப்படுத்துவது கண்டிப்பாக என நோக்கம் அல்ல. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏழைகள் தினசரி புதுப் புது பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். எனவே, பிரதமரின் கவனத்தை ஈர்க்க இது மட்டுமே ஒரே வழி என நான் கருதினேன்" என்று டீக்கடைக்காரர் அனில் மோர் தெரிவித்தார். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சமும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்கலுககு 30 ஆயிரமும் வழங்க வேண்டும் என்ற அனில் மோர் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications