அப்போ வெங்கையா நாயுடு இல்லையா.. மூணு லட்டு தின்ன ஆசை.. குடியரசு தலைவர் தேர்தலை வைத்து பாஜக ஸ்கெட்ச்
டெல்லி : குடியரசுத் தலைவர் வரும் ஜூலை மாதம் நடைபெற இருக்கும் சூழலில், பா.ஜ.கவின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தலை பயன்படுத்தி தங்கள் இமேஜை பலப்படுத்தி டேமேஜை கவர் செய்துகொள்ள பாஜக மேலிடம் திட்டமிட்டு வருகிறது. இதனால் அனைத்து வகைகளிலும் தங்கள் அரசியல் எதிர்காலத்திற்கு பயனளிக்கும் வகையிலேயே இந்த வேட்பாளர் தேர்வு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
அதில், உச்சகட்டமாக காங்கிரஸை ஆஃப் செய்ய அதிரடி திட்டம் ஒன்றைச் செயல்படுத்தவும் பாஜக தயங்காது எனத் தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை மாதம் முடிவடைகிறது. அடுத்த குடியரசுத் தலைவராக யாரை முன்நிறுத்துவது என்பது பற்றிய விவாதங்கள் கடந்த சில வாரங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குடியரசுத் தலைவரை தனித்து தேர்ந்தெடுக்கும் அளவுக்கு பா.ஜ.க கூட்டணிக்கு பலம் இல்லாததால், மாநிலக் கட்சிகளின் ஆதரவு அக்கட்சிக்கு தேவைப்படுகிறது. இதனால், அதற்கேற்றார்போல, வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது பா.ஜ.க மேலிடம்.

ரேஸில் இருப்பது யார்
மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத்தான் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே தேசிய அளவில் பிற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவது அவசியம். குடியரசுத் தலைவருக்கான ரேஸில் இருப்பவர்கள் குறித்த பேச்சுகள் தற்போது அடிபட்டு வருகின்றன.

வெங்கய்யா நாயுடு
தற்போது துணைக் குடியரசுத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசு தலைவராக வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபட்டது. அவர் குடியரசுத் தலைவர் தேர்தலில் நின்றால் திமுக ஆதரவு அளிக்கும் நிலை உள்ளது. ஆனால், பிரதமர் மோடி - அமித்ஷா உள்ளிட்ட 'குஜராத்' மேலிட தலைவர்கள் வெங்கையா நாயுடுவுக்கு வாய்ப்பு அளிக்க விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

தமிழிசை சௌந்தரராஜன்
பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த ராம் நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல, இந்த முறையும் பழங்குடியினர் அல்லது பெண் ஒருவரை குடியரசு தலைவர் ஆக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பெண் ஒருவரை குடியரசுத் தலைவராக்க பாஜக தலைமை முடிவெடுக்கும் பட்சத்தில் அந்த வாய்ப்பு தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு கிடைக்கக்கூடும் என்கிறார்கள்.

முஸ்லீம் வேட்பாளர்
இஸ்லாமிய மக்கள் மத்தியில் பா.ஜ.க மீது உள்ள அச்சத்தைப் போக்கி, வாக்கு வங்கியை உயர்த்தும் வகையில் முஸ்லீம் ஒருவருக்கு மீண்டும் வாய்ப்பை வழங்கலாம் என்றும் மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். அப்படி முடிவெடுக்கும் பட்சத்தில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரில் ஒருவர் குடியரசுத் தலைவராகக் கூடும் எனக் கணிக்கப்படுகிறது. முஸ்லீம் வேட்பாளரை நிறுத்தினால், மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகள் ஆதரவு அளிக்கக்கூடும் என்ற விஷயத்தையும் இந்த இடத்தில் பாஜக கவனத்தில் வைத்திருக்கிறது.

முக்தார் அப்பாஸ் நக்வி
மத்திய அமைச்சராக இருக்கும், முக்தார் அப்பாஸ் நக்விக்கு, மீண்டும் ராஜ்யசபா எம்.பியாக வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால், குடியரசுத் தலைவர் அல்லது துணை குடியரசுத் தலைவர் ஆகிய பதவிகளில் ஒன்று அவருக்கு நிச்சயம் என்கிறார்கள். இவர் இல்லாவிட்டாலும் கூட எப்படி இருப்பினும், குடியரசுத் தலைவர் அல்லது துணை குடியரசுத் தலைவர் ஆகிய ஒரு பதவியில் இஸ்லாமியர் ஒருவர் நிச்சயம் அமர்வார் என்கிறார்கள்.

குலாம் நபி ஆசாத்
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார். அவருக்கு காங். சார்பில் ராஜ்யசபா சீட் கொடுக்கப்படாத நிலையில், அவர் அதிருப்தியில் இருந்து வருவதால் சோனியா காந்தி அழைத்துப் பேசி, காங்கிரஸில் நம்பர் 2 இடத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், அதையும் இளம் தலைமுறைக்கே கொடுத்துவிடுங்கள் என கோபமாகத் தெரிவித்து விட்டதாக தகவல் வெளியானது. இதன் காரணமாக அவர் கட்சியிலிருந்து விலகலாம் என்றும் கூறப்படுகிறது.

பாஜகவில் சான்ஸ்
அப்படி குலாம் நபி ஆசாத், காங்கிரஸில் இருந்து விலகும் பட்சத்தில், அவருக்கு குடியரசுத் தலைவர் சான்ஸ் வழங்கி, காங்கிரஸ் தரப்புக்கு செக் வைப்பதோடு, முஸ்லீம்கள் ஆதரவையும் பெற முடியும் என 'டபுள் போனஸ்' கணக்கு போடுகிறதாம் பாஜக தரப்பு. தற்போது முஸ்லீம்கள் தொடர்பாக பா.ஜ.கவில் சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் அதனை ஆஃப் செய்யவும் இந்த விஷயம் பயனளிக்கும் என மேலிடம் கணக்குப் போட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications