புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டுறவு அமைச்சகம்.. அதுவும் அமித் ஷா கையில்.. எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
டெல்லி: மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள கூட்டுறவுத் துறை அமைச்சகத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.
கூட்டுறவு என்பது இதுவரை மாநில விவகாரமாக இருந்து வரும் நிலையில் அந்தத் துறைக்கு மத்திய அரசு தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கி இருப்பதன் பின்னணியில் மாநில அரசின் சுதந்திரத்தை நசுக்கும் திட்டம் இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பின்போதுபோது புதிதாக இந்த அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அதற்கு தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் அமித் ஷா கூடுதல் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

சந்தேகங்கள்
மாநில உரிமையின் கீழ் இருக்கக்கூடிய கூட்டுறவு சங்கங்கள் தொடர்பான அமைச்சகம் தற்போது மத்திய அரசால் உருவாக்கப்பட்டு இருப்பதும், அது அமித்ஷா கையில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதும் எதிர்கட்சிகளுக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏற்கனவே பல மாநில கூட்டுறவு சொசைட்டி சங்கம் 2002 என்ற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இது மத்திய அரசின் சட்டம் . தேவைப்பட்டால் கூட்டுறவு விவகாரங்களில் மத்திய அரசு தலையிட்ட இந்த சட்டம் வகை செய்கிறது. அப்படி இருக்கும்போது புதிதாக ஒரு அமைச்சகத்தை உருவாக்க வேண்டிய தேவை எங்கே இருந்து வந்தது என்பது காங்கிரஸ் கட்சியின் கேள்வியாக இருக்கிறது.

என்ன நோக்கம்
மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு இவ்வாறு ஒரு தனி அமைச்சகத்தை உருவாக்கியிருக்கலாம் என்பது காங்கிரஸ் கட்சியின் சந்தேகமாக இருக்கிறது மகாராஷ்ட்ராவில் சர்க்கரை ஆலை உட்பட பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை மனதில் வைத்து உன் மத்திய பாஜக அரசு இப்படி ஒரு முடிவு எடுத்திருக்க கூடும் என்கிறார்கள் காங்கிரஸ் வட்டாரத்தில்.

ஏற்கனவே அமைச்சகம் உள்ளது
மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரிதிவிராஜ் சவான் இதுபற்றி கூறுகையில், கூட்டுறவுத் துறை அமைச்சகம் இருக்கும் நிலையில் புதிதாக ஒரு அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டிய தேவை என்ன வந்தது. நிர்வாக ரீதியாக இது பெரிய வித்தியாசங்கள் ஏற்படுத்த போவது கிடையாது. ஆனால் அமித் ஷா இந்த பொறுப்பை கூடுதலாக பெற்று இருப்பதன் மூலமாக பாஜக அரசியல் திட்டத்தோடு காய் நகர்த்துகிறது என்ற சந்தேகம் எழுகிறது.

மகாராஷ்டிரா தேர்தல் கணக்கு
குஜராத் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகள் என்பது முதுகெலும்பு போன்றவை. அந்த இரு மாநிலங்களும் பாஜக முக்கியமானவை. 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குஜராத் சட்டசபை தேர்தலை மனதில் வைத்து பாஜக இதுபோல ஒரு அமைச்சகத்தை உருவாக்கி இருக்கிறது. மகாராஷ்டிராவில், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து அமைத்துள்ள அரசு பாஜகவுக்கு உறுத்தலாக இருந்துவருகிறது . மகாராஷ்டிராவில் 48 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த கூட்டணி இதே மாதிரி தொடர்ந்து சரியான வகையில் தொகுதி பங்கீடுகள் செய்யப்பட்டால் லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரிய பின்னடைவு ஏற்படும். எனவே கூட்டுறவு அமைப்புகளை கட்டுப்படுத்த பாஜக நினைக்கிறது.

இரு மாநிலங்கள்
நாட்டிலேயே அதிகமான லோக்சபா தொகுதிகளில் கொண்டது உத்தரபிரதேசம். இந்த வகையில் இரண்டாவது இடம் மகாராஷ்டிராவுக்கு உள்ளது. ஆனால், இந்த இரு மாநிலங்களும் பாஜக எதிர்ப்பு மன நிலையில் மக்கள் உள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்துதான் புதிதாக ஒரு அமைச்சரவை உருவாக்கப்பட்டு அது அமித் ஷா கையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. கூட்டுறவு அமைப்புகள் பெரும்பாலும் உள்ளூர் நிலவரம் தொடர்பு கொண்டவை. மத்திய அரசு அதை எப்படி நிர்வாகம் செய்யும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்புகிறார்.

பணத்தை எடுக்கப் போகிறார்கள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி முன்னதாக வெளியிட்ட டுவிட்டர் பதிவில், கூட்டுறவு சொசைட்டி மாநில விவகாரங்கள் தொடர்பு கொண்டது. அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் இதற்கான அதிகாரம் உள்ளது. அந்தவகையில் கூட்டாட்சி மீது மத்திய அரசு நடத்தியுள்ள மற்றொரு தாக்குதல் தான் புது அமைச்சகம் உருவாக்கப்பட்டிருப்பதும். பொதுத்துறை வங்கிகள் பெரிய அளவுக்கான கடன்களை தொழிலதிபர்களுக்கு வழங்கி நஷ்டப்பட்டுள்ள நிலையில் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பணத்தையும் எடுத்துக் கொள்வதற்காக மத்திய அரசு இப்படி ஒரு அமைச்சகம் கொண்டு வந்திருக்கிறது. கூடுதல் கொள்ளைக்கு தான் இது வழிவகுக்கும் என்றார்.

உள்துறை அமைச்சர் ஏன்?
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா கூறுகையில். எதற்காக கூட்டுறவு துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. அது எதற்காக உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் கொடுக்கப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. கூட்டுறவு என்பது பொருளாதாரம் தொடர்புள்ள விவகாரம். உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் அது எப்படி வரும். மேலும் கூட்டுறவுத்துறை என்பது மாநில அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது , எனவே மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து உள்ளது. நாடாளுமன்றம் கூட்டத்தொடரில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்தி அளிக்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் அளிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

தேவேந்திர பட்னாவிஸ் ஆதரவு
ஆனால் மகாராஷ்டிர முன்னாள் முதல்வரான பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் இதுபற்றி கூறுகையில் , நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகள் மத்திய அரசின் நிதி உதவியால்தான் இப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. எத்தனால் தொடர்பாக புதிய கொள்கை மத்திய அரசால் கொண்டு வரப்பட்டதால் சர்க்கரை ஆலைகளுக்கு பலன் கிடைத்துள்ளது . நஷ்டத்தில் இயங்கும் சர்க்கரை ஆலைகளுக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கி உள்ளது என்று தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சுமார் இரண்டு லட்சம் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் ஐந்து கோடிக்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இது மிகப்பெரிய ஓட்டு வங்கி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications