மழையால் உருண்ட பாறைகள்..தருமபுரி அருகே ரயில் தடம் புரண்டு விபத்து - உயிர் தப்பிய பயணிகள்
கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே தண்டவாளத்தில் பாறைகள் சரிந்து விழுந்தன. கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது
தருமபுரி: கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டது. கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. ரயிலில் வந்த 1,850 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தருமபுரி சேலம் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. மழை காரணமாகவும் வெள்ளநீர் தேங்கியுள்ளதன் காரணமாகவும் தருமபுரி மாவட்டத்தில் 1முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 54 சதவிகிதம் அதிகம் பெய்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, வழக்கத்தைவிட 77 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில்
கனமழையால் தருமபுரி முத்தம்பட்டி அருகே மண்சரிவு ஏற்பட்டு தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் கண்ணூர் - யஷ்வந்த்பூர் பயணிகள் ரயில் தடம் புரண்டது. கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கோயம்புத்தூர் சேலம் தருமபுரி வழியாக கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் வரை தினசரி கண்ணூர் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த கண்ணூர் விரைவு வண்டி மாலை 6 மணிக்கு கண்ணூரிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 3.30 மணிக்கு தருமபுரி ரயில் நிலையத்திற்கு வரும்.

தண்டாவளத்தில் பாறைகள்
சேலத்தில் இருந்து தருமபுரி நோக்கி வரும் வழியில் 45 கிலோ மீட்டரில் வே.முத்தம்பட்டி வனப்பகுதியில் ரயில் தண்டவாளத்தின் அருகில் பாதுகாப்பு சுவரில் கற்கள் சரிந்து கிடந்துள்ளது. இந்தக் கற்களில் ரயில் இன்ஜின் உரசியதில் எஞ்சின் மற்றும் அடுத்த இரண்டு பெட்டிகள் தடம்புரண்டது. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பயணிகள் பயங்கர சத்தம் கேட்டதில் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர்.

தடம் புரண்ட ரயில் பெட்டிகள்
7 பெட்டிகள் தடம்புரண்டதால் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த ரயில் தடம் புரண்டதால் பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. வனப் பகுதி என்பதால், இந்த பகுதிகளில் வரும் ரயில்கள் மெதுவாகவே வருவதால், இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது சுமார் 4 மணி நேரமாக பயணிகளுடன் ரயில் வனப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சேலம் மார்க்கத்தில் வேறு இன்ஜின் வரவழைக்கப்பட்டு, பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளது.

பயணிகள் தப்பினர்
தடம் புரண்ட பெட்டிகளில் பயணம் செய்த 2348 பயணிகள் பேருந்து மூலம் தருமபுரி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தற்போது சேலம் பெங்களூர் மார்க்கத்தில் சுமார் 4 மணி நேரமாக ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினர் விசாரணை
பெங்களூருவில் இருந்து மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். தொடர் மழையால் இந்த கற்கள் சரிந்து விழுந்துள்ளதா அல்லது வேறு ஏதேனும் சதி வேலையா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழை வெள்ளத்தால் எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications