இன்று அபுதாபி செல்கிறார் முதல்வர்.. நாளை பிரம்மாண்ட பாராட்டு விழா.. தமிழ் சமூகம் கொடுக்கும் மரியாதை
துபாய் : முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று அபுதாபி செல்லும் நிலையில் நாளை அபுதாபி வாழ் தமிழ் சமூகம் நடத்தும் பிரம்மாண்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஐந்து நாள் அரசு முறைப் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 24ஆம் தேதி தனி விமானம் மூலம் துபாய் சென்றார். அவருடன் உள்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
துபாயில் பன்னாட்டு நிதி மையத்தில் ஐக்கிய அரபு அமீர பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின்டூக் அல்மாரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல்கியோதி ஆகியோரை சந்தித்து தமிழகத்தில் முதலீடுகள் செய்ய பேச்சுவார்த்தை நடத்தினார்.

துபாய் பயணம்
பின்னர் துபாயில் நடைபெற்ற சர்வதேச எக்ஸ்போ கண்காட்சியில் தமிழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு துபாயில் உள்ள ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

முதலீடுகள் ஈர்ப்பு
இதனால் இந்தியாவில் தொழில்தொடங்க லுலு குழுமம் உள்ளிட்ட நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாய் நாட்டைச் சேர்ந்த நோபல் ஸ்டில்ஸ், ஆஸ்டர் டிஎம் ஹெல்த் கேர், ஷராப் குழுமம் உள்ளிட்டவை தமிழகத்தில் தொழில் தொடங்க முன் வந்திருப்பதாகவும், சுமார் 7000 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து இருப்பதாக தகவல் வெளியானது இந்த திட்டங்களின் மூலம் சுமார் பத்தாயிரம் பேருக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பு கிடைக்க முதல்வரின் பயணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வரின் இந்த பயணம் முழுக்க முழுக்க வெற்றிப் பயணமாக அமைந்துள்ளதாகவும், கூறப்படுகிறது. இது மட்டுமல்லாது பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ளவுள்ளார். இன்று மாலை துபாயில் தங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின் அபுதாபி செல்லவுள்ள நிலையில், அங்கு அவருக்கு அபுதாபி வாழ் தமிழர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

பிரம்மாண்ட பாராட்டு விழா
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க 'புலம்பெயர்ந்த தமிழர் நல வாரியம்' அமைத்து அதற்கு தேவையான நிதி வழங்கி உள்ள முதல்வருக்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவருக்கு அபுதாபியில் மிக பிரமாண்ட பாராட்டு விழாவுக்கு இந்திய சமூக மற்றும் கலாச்சார மையமும் அபுதாபி வாழ் தமிழ் சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் தமிழகம் திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications