குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்?
காந்திநகர்: குஜராத் என்றவுடன் பலருக்கும் நியாபகம் வருவது அது பாஜகவின் கோட்டை என்பது தான். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அங்குள்ள 7 சட்டசபை தொகுதிகளில் இன்னும் ஒருமுறை கூட பாஜக வெற்றி பெறவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை தான். அது ஏன் என்பது பற்றியும், அங்கு காங்கிரஸின் செல்வாக்கு பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பூபேந்திர படேல் உள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி தேர்தல் நடக்கிறது. 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு டிசம்பர் மாதம் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெற உள்ளது.

24 ஆண்டுகளாக பாஜக ஆட்சி
பொதுவாக குஜராத் பாஜகவின் கோட்டையாக கருதப்படுகிறது. ஏறக்குறைய கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் பாஜக ஆட்சி செய்வது தான் இதற்கு காரணமாகும். இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றனர். வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து பிரசாரத்தை துவங்கி உள்ளனர். குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பாஜக வியூகம் வகுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் அவர்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் -ஆம்ஆத்மி வியூகம்
இதேபோல் குஜராத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. குஜராத்தில் காலம் காலமாக பாஜக, காங்கிரஸ் இடையே இருமுனை போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் தான் புதிதாக ஆம்ஆத்மி மும்முரம் காட்டி வருகிறது. டெல்லி, பஞ்சாப் சட்டசபை தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு குஜராத்திலும் ஆம்ஆத்மி முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக இசுதான் காட்வி அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.

அதிக ஆண்டு முதல்வராக மோடி
குஜராத்தை பொறுத்தமட்டில் 1998 மார்ச் 4ம் தேதி முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதில் 2001 அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 2014 மே மாதம் 22ம் தேதி வரை 12 ஆண்டுகள் 227 நாட்கள் நரேந்திர மோடி முதல் அமைச்சராக உள்ளார். அதன்பிறகு ஆனந்த பென் படேல், விஜய் ரூபானியை தொடர்ந்து தற்போது புபேந்திர படேல் முதல்வராக உள்ளார்.

பாஜகவால் வெற்றி பெறாத தொகுதிகள்
இந்நிலையில் ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் அசைக்க முடியாத சக்தியாக பாஜக இருந்தாலும் கூட இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பாஜகவால் சில தொகுதிகளில் இன்னும் கூட வெற்றி பெற முடியாத நிலை உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த தொகுதிகளின் பெயர்கள் என்ன?, பாஜகவால் வெற்றி பெற முடியாதததற்கான காரணம் என்ன? என்ற விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

எந்தெந்த தொகுதிகள்?
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது குஜராத் மாநிலம் மகாராஷ்டிராவுடன் சேர்ந்து இருந்தது. அதன்பிறகு 1960ல் தான் மகாராஷ்டிராவில் இருந்து புதிய மாநிலமாக குஜராத் உதயமானது. 1962ல் இருந்து சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அன்று முதல் குஜராத்தில் போர்சாத், ஜாக்டியா, அங்கலவ், டானிலிம்டா, மஹூதா, கர்படா, வியாரா ஆகிய 7 தொகுதிகளில் இன்னும் பாஜக ஒருமுறை கூட வெற்றியை பதிவு செய்யவில்லை. குஜராத் மாநிலத்தை கோட்டையாக வைத்திருந்தாலும் கூட இந்த தொகுதிகளில் பாஜகவின் வெற்றி என்பது இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் இந்த 7 தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்ய பாஜக அதிக தீவிரம் காட்டி வருகிறது.

காங்கிரஸின் 50 ஆண்டு கோட்டை
போர்சாத் சட்டசபை தொகுதிகளில் இரண்டு இடைத்தேர்தல்கள் உள்பட மொத்தம் 15 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் முதல் தேர்தலான 1962ல் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இன்று வரை நீடித்து வருகிறது.

ஜாக்டியா தொகுதி
ஜாக்டியா சட்டசபை தொகுதியில் 1962 முதல் 2017 வரை மொத்தம் 13 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி 1985 வரையிலான தேர்தலில் வெற்றி பெற்றது. அதன்பிறக 1990ல் இரந்து 2012 வரை ஜனதாதளம் கட்சியின் வசம் இந்த தொகுதி உள்ளது. கடந்த 2017 தேர்தலில் பிடிபி(Bharatiya Tribal Party) கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றார். இன்று வரை பாஜகவால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை. தற்போது

வியாரா தனி தொகுதி
குஜராத் மாநிலம் தாபி மாவட்டத்தில் வியாரா சட்டசபை தொகுதி உள்ளது. இது பழங்குடி மக்களுக்கான தனி தொகுதியாக உள்ளது. இங்கு ஒரு இடைத்தேர்தல் உள்பட மொத்தம் 14 சட்டசபை தேர்தல்கள் நடைபெற்றுள்னள. 1990, 1995 சட்டசபை தேர்தல்களை தவிர அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று வருகிறது 2017 ல் புனா காமித் என்பவர் என்பவர் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்தார்.

டானிலிம்டா தொகுதி
குஜராத்தின் ஆமதாபாத் மாவட்டத்தில் டானிலிம்டா சட்டசபை தொகுதி உள்ளது. முக்கிய நகர பகுதியில் அமைந்துள்ள இந்த தொகுதியும் தலித் மக்களுக்கான தனி தொகுதியாகும். இங்கு தலித் மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு காங்கிரஸ் கட்சி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சைலேஷ் பரமர் ஆதிக்கமிக்க தலைவராக உள்ளார். இவர் 2012, 2017 சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறார்.

அங்க்லாவ் தொகுதி
அங்க்லாவ் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு 2 முறை சட்டசபை தேர்தல் நடந்தது. 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமித் சாவ்டா வெற்றி பெற்றார். இந்த 2 தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. இந்த 2 தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி 50 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மஹூதா-கார்படா தொகுதி
குஜராத் ஹீடா மாவட்டத்தில் மஹுதா சட்டசபை தொகுதி உள்ளது. 2007 முதல் 2017 வரை மொத்தம் 3 சட்டசபை தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளனர். இங்கு பாஜகவால் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை வெற்றி பெற முடியவில்லை. கார்படா தொகதி தாஹூத் மாவட்டத்தில் உள்ளது. இது பழங்குடியின மக்களுக்கான தனிதொகுதியாகும். இந்த இங்கு 2 தேர்தல்கள் நடந்துள்ளன. 2012, 2017 தேர்தலில் காங்கிரஸ் வேடாபளர் சந்திரிகாபென் பாரியா வெற்றி பெற்று எம்எல்ஏவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி கவனம்
இதனால் இந்த 7 தொகுதிகளிலும் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பெரும்பாலான தொகுதிகளில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இடமாக உள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி பழங்குடியின மக்களின் தொகுதிகளில் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார். இருப்பினும் இந்த 7 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுமா? என்பதை அறிய நாம் தேர்தல் முடிவு வெளியாகும் டிசம்பர் 8 ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications