குஜராத் தேர்தல்: வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டி.. இடைநீக்கம் செய்து பாஜக அதிரடி
அகமதாபாத்: குஜராத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கியவர்களை இடைநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளது பாஜக கட்சி தலைமை.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் 5 ஆம் தேதி 93 தொகுதிகளுக்கும் என மொத்தம் உள்ள 182- தொகுதிகளுக்கும் இரு கட்டமாக நடைபெற உள்ளது. குஜராத்தில் 27 ஆண்டு காலமாக பாஜக ஆட்சியில் உள்ளது.

பாஜக-காங்கிரஸ்-ஆம் ஆத்மி
7-வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக புதுப்புது வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல், காங்கிரஸ் கட்சியும் இந்த முறை பாஜகவை வீழ்த்தி விட வேண்டும் என்று திட்டம் வகுத்து வருகிறது. இன்னொரு பக்கம் ஆம் ஆத்மியும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு இலவச நலத்திட்டங்கள் குஜராத்திலும் நாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் கொண்டு வரப்படும் என்ற கோஷத்துடன் ஆம் ஆத்மி பிரசாரம் செய்து வருகிறது.

ராகுல் காந்தி இன்று பிரசாரம்
மறுபுறம் காங்கிரஸ் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்று இருக்கும் ராகுல் காந்தி தனது யாத்திரைக்கு ஓய்வு கொடுத்து விட்டு குஜராத் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் இன்று ஈடுபட இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரும் பிரசாரம் செய்ய இருக்கின்றனர்.

பிரதமர் மோடி பிரசாரம்
பாஜகவை பொறுத்தவரை அக்கட்சியின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் பலரும் குஜராத்தில் முகாமிட்டுள்ளனர். பிரதமர் மோடியும் நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜகவின் நல்லாட்சி தொடர மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வாக்குகளை வீணடித்து விட வேண்டாம் என்றும் அனைத்து பூத்களிலும் பாஜகவுக்கு அதிக வாக்குகளை பெற்றுத்தர வேண்டும் என்றும் பிரதமர் மோடி தனது பிரசாரத்தின் போது பேசினார்.

40 க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கலும் நிறைவு பெற்றது. வேட்பாளர்களும் வீடு வீடாக சென்று தங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகின்றனர். இதனால், குஜராத்தில் தேர்தல் களம் அனல் பறந்து வருகிறது. இதனிடையே பாஜக இம்முறை பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தது. கிட்டத்தட்ட 40 க்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு வாய்பு வழங்கப்படவில்லை. புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளித்து நகர்புறங்களில் உள்ள வாக்காளர்களை கவரும் வகையில் பாஜக திட்டம் வகுத்துள்ளது.

7 பேர் இடைநீக்கம்
ஆனால் வாய்ப்பு கிடைக்காத எம்.எல்.ஏக்கள் பலரும் பாஜக மேலிடம் மீது அதிருப்தி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த 7 பேர் மீது பாரதிய ஜனதா கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. ஹர்ஷத்பாய் வஸ்வா, அரவிந்த்பாய் லட்மி, சத்ரசிங் கன்ஜரியா, கேதன்பாய் படேல், பரதிபாய் சவ்டா, உதய்பாய் ஷா மற்றும் ஸ்ரீ கரம்பாய் பாரியா ஆகிய 7 பேரையும் இடைநீக்கம் செய்வதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.

பாஜகவுக்கு பின்னடைவு?
தேர்தலுக்கு இன்னும் இருவாரங்கள் கூட இல்லாத நிலையில், பாஜக சீட் வழங்காததால் அதிருப்தி நிலவுவது அக்கட்சிக்கு சற்று பின்னடைவாக அமையலாம் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். இதனால், பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. எனினும், இதெல்லாம் பாஜகவின் வெற்றி வாய்ப்பை எந்த வகையிலும் பாதிக்காது என்று பாஜகவினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications