For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமிங்கல வாந்தி: ரூ. 2 கோடி மதிப்புள்ள அம்பர்கிரிஸை பதுக்கியதாக நாகை மீனவர்கள் இருவர் கைது

By BBC News தமிழ்
|
Ambergris of Whales found in Nagappattinam
BBC
Ambergris of Whales found in Nagappattinam

நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் கண்டெடுத்த அரிய வகை அம்பர் திமிங்கலத்தின் அம்பர்கிரிஸை வனத்துறையிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே பதுக்கி வைத்த இரண்டு மீனவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வேதாரண்யத்தை அடுத்துள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த பாலகுரு, ஆனந்த் ஆகிய இருவரும் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸ் கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.

அதை விதிகளின்படி வனத்துறையினரிடம் ஒப்படைக்காமல் வீட்டிலேயே அவர்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு வெள்ளப்பள்ளம் அருகே ஒரு வியாபாரியிடம் அம்பர்கிரிஸை சிலர் விற்பனை செய்யப் போவதாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் சிவசங்கர் தலைமையில் சென்ற கியூ பிரிவு போலீசார் திமிங்கிலத்தின் அம்பர்கிரிஸை விற்க முயன்ற இருவரையும் சுற்றிவளைத்தனர். அவர்களின் பையிலிருந்து சுமார் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் அரியவகை அம்பர்கிரிஸ் இருப்பது தெரியவந்தது.

நாகை
BBC
நாகை

அதை பறிமுதல் செய்த போலீசார் சட்டவிரோதமாக அம்பர்கிரிசை விற்க முயன்றதாக வெள்ளப்பள்ளம் கிராம மீனவர்கள் பாலகுரு, ஆனந்த் ஆகியோரை கைது செய்தனர். ஆனால், அதை வாங்க வந்த வியாபாரி தப்பி விட்டார்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள நாகை க்யூ பிரிவு காவல்துறையினர், தப்பி ஓடிய வியாபாரியை தேடி வருகின்றனர்.

அம்பர்கிரிஸ் என்றால் என்ன?

அம்பர்கிரிஸ்
BBC
அம்பர்கிரிஸ்

திமிங்கில வாந்தி அல்லது அம்பர்கிரிஸ் (Ambergris), திமிங்கிலம் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றும் ஒரு வகை திடக்கழிவுப் பொருள் ஆகும். இது வெள்ளை, சாம்பல் மற்றும் கருப்பு நிறங்கள் கலந்து இருக்கும்.

திமிங்கிலமானது பீலிக் கணவாய் போன்ற உயிரினங்களை வேட்டையாடி உண்பது வழக்கம். அந்த பீலிக் கணவாயின் ஓட்டை திமிங்கலங்களின் செரிமான அமைப்பால் செரிக்க வைக்க முடியாது. அதனால் இந்த ஓடுகள் திமிங்கிலத்தின் குடலில் சிக்கிக்கொள்ளும்.

இந்த ஓட்டினால் திமிங்கிலத்தின் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இந்த ஒட்டை சுற்றிய செரிமான அமைப்பிலிருந்து ஒரு சிறப்பு வகை திரவம் உற்பத்தியாகிறது. இதனை அம்பர்கிரிஸ் என்பர். இது நறுமணப் பொருட்கள் மற்றும் பாலியியல் மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த அம்பர் கிரிசை சிலசமயம் திமிங்கிலங்கள், வாந்தியெடுப்பதன் மூலம், வெளியேற்றுகிறது. சில திமிங்கலங்கள், மலப்புழை வழியாகவும் இதை வெளியேற்றுகிறது.

எண்ணெய்த் திமிங்கிலம் தன் உடலிலின் செரிமாண உறுப்பிலிருந்து வாய் வழியாக வெளியேற்றிய வாந்தி, கடலின் மேற்பரப்பில் மிதக்கிறது. சூரிய ஒளி மற்றும் உப்பு நீரும் சேர்ந்து இந்த வாந்தியை அம்பெர்கிரிஸ் எனும் பொருளாக உருவாக்குகின்றன. அம்பர்கிரிஸ் எனும் வாந்தி நறுமணப் பொருள்களை தயாரிக்க பயனுள்ளதாக இருக்கிறது.

அம்பர்கிரிஸ்
BBC
அம்பர்கிரிஸ்

திமிங்கில வாந்தி எனும் அம்பெர்கிரிஸ் கறுப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் எண்ணெய் நிறைந்த பொருள் ஆகும். இது நீள் வட்ட அல்லது வட்ட வடிவத்தில் காணப்படும். இது கடல்நீரில் தொடர்ந்து மிதந்து பயணம் செய்வதால் அத்தகைய வடிவம் ஏற்படுகிறது.

ஒரு வகை திமிங்கலத்தின் தலையில் ஸ்பெர்மாசிட்டி எனப்படும் ஒரு உறுப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அது எண்ணெயால் நிரம்பியுள்ளது. இது திமிங்கிலத்தின் விந்து என்றும் நம்பப்பட்டது. எனவே இதற்கு விந்து திமிங்கிலம் எனப்பெயர் சூட்டப்பட்டது. ஆனால் இந்த உறுப்பு உண்மையில் ஒலி சமிக்ஞைகள் மற்றும் மிதப்பைக் கட்டுப்படுத்துவதில் உதவுகிறது.

திமிங்கில வாந்தியின் மணம் முதலில் கெட்ட நாற்றம் கொண்டதாக இருக்கும். ஆனால் நேரம் செல்லச் செல்ல, உலர்ந்த பிறகு அது நறுமணமாக மாறும் என அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். வாசனை திரவியத்தின் வாசனை காற்றில் விரைவாக கரைவதைத் தடுக்க அம்பெர்கிரிஸ் ஒரு நிலைப்படுத்தியாக பயன்படுத்தப்படுகிறது. திமிங்கிலம் தனது உடலிலிருந்து வெளியேற்றிய அம்பர்கிரிஸ் எனப்படும் வாந்தி கரையை அடைய பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்.

அம்பர் கிரிஸ்
Getty Images
அம்பர் கிரிஸ்

இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள சில மருந்து தயாரிப்பாளர்கள், பாலியல் திரவ மருந்து தயாரிக்க அம்பெர்கிரிஸை பயன்படுத்துகின்றனர். அரபு நாடுகளில் இது உயர் தரமான வாசனை திரவியங்களை தயாரிக்க பயன்படுகிறது. அந்த வகையில் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக அம்பெர்கிரிஸ் ஒரு வாசனை திரவியமாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச பயணிகளான மார்கோ போலோ போன்றோரின் பயணக் குறிப்புகளிலும் அம்பெர்கிரிஸ் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயுர்வேதத்தைத் தவிர, யுனானி மருத்துவத்திலும் அது பயன்படுத்தப்படுகிறது. இது மூளை, உடல், நரம்பு மற்றும் பாலுறவு பிரச்னைகளுக்கு பல்வேறு மூலிகைகளுடன் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இதற்கு மவுசு அதிகமாகி வருகிறது.

அம்பெர்கிரிஸ் அரிதாகவே கிடைக்கிறது. எனவே, அதன் விலை மிக அதிகம். தங்கத்தின் விலையை விட அதன் விலை அதிகமாக இருப்பதால் இது 'கடல் தங்கம்' அல்லது 'மிதக்கும் தங்கம்' என்றும் அழைக்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இதன் விலை கிலோ ஒன்றுக்கு 1.5 கோடி ரூபாய் முதல் இரண்டு கோடி ரூபாய் வரை இருக்கலாம்.

"வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் ஸ்பெர்ம் திமிங்கலங்கள் பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. ஆகவே, ஸ்பெர்ம் திமிங்கலங்களை வேட்டையாடுவது அல்லது வர்த்தகம் செய்வது குற்றமாகும். அதன் முறையான வணிகத்திற்கான உரிமத்தைப் பெறுவது கட்டாயம்," என ஜாம்நகர் கடல் உயிரின தேசிய பூங்காவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி , டி.டி.வசவாடா குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

BBC Tamil
English summary
Ambergris of Whales found in Nagappattinam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X