சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? - சுகாதார வல்லுநர்கள் சொல்வதென்ன?
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. ''முதல் மற்றும் இரண்டாவது அலையின்போதும் இதே மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கின்றனர் பொது சுகாதார வல்லுநர்கள்.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இதனையொட்டி, தடுப்பூசி மெகா முகாம்கள் ஒருபுறம் நடந்தாலும் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன.
இதில், இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த 10.75 லட்சம் பேர் தகுதியானவர்களாக உள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் அதிகம், மயிலாடுதுறையில் குறைவு
இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக திங்கட்கிழமையன்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவல் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஜனவரி 10ஆம் தேதி அறிக்கையில் வெளியான தகவலில், தமிழ்நாட்டில் 1,34,417 பேரிடம் நடத்திய மருத்துவப் பரிசோதனையில், 13,958 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 6,190 பேருக்கும் செங்கல்பட்டில் 1,696 பேருக்கும் திருவள்ளூரில் 1,054 பேருக்கும் கோவையில் 602 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி தேவையா? வல்லுநர்கள் சொல்வதென்ன?
- கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை: யார் செய்ய வேண்டும், யார் செய்யத் தேவையில்லை?
அதேநேரம், அரியலூரில் 15 பேர், மயிலாடுதுறையில் 13 பேர், நாகப்பட்டினம் 16, புதுக்கோட்டை 18 என மிகக் குறைவான எண்ணிக்கையில் தொற்று பதிவாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் உயிரிழப்பைப் பொறுத்தவரையில் சென்னையில் நான்கு பேரும் கோவையில் 2 பேர், நாகப்பட்டினம், மதுரை, தஞ்சை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் இறந்துள்ளதாகவும் அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இதன்படி, பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது தெரியவருகிறது.
3 மாவட்டங்களில் உயர்வு ஏன்?
என்ன காரணம் என மருத்துவர் சாந்தியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம். தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்கு மக்கள் சென்னையில்தான் உள்ளனர். அதாவது, 7 கோடி பேரில் ஒரு கோடி பேர் இங்கு வாழ்கின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை கூட்டான பகுதிகளாகத்தான் பார்க்க முடியும். சென்னையில் வாடகை கொடுக்க முடியாதவர்கள், செங்கல்பட்டில் இருந்து வேலைக்கு வருகிறார்கள். பல்வேறு தொழில்களுக்காக வேறு மாவட்டங்களில் இருந்து வேலைக்கு வந்து செல்கின்றனர். அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து சிகிச்சைக்காகவும் மக்கள் வருகின்றனர். நோய் பரப்பும் ஹாட்ஸ்பாட்டாகவும் மருத்துவமனைகள் உள்ளன'' என்கிறார்.
சட்டசபை, அமைச்சரவை கூட்டம், தலைமைச் செயலகம் என அனைத்துமே இயங்கி வருகிறது. மருத்துவம், மின்சாரம், சுகாதாரம் என முன்களப் பணியாளர்களும் அதிகளவில் உள்ளனர். எனவே, வீட்டுக்குள் இருக்க வேண்டும் என நினைத்தாலும் அது இங்கு சாத்தியமில்லை. தவிர, மிகப் பெரிய ஜவுளி அங்காடிகளும் ஏ.சி வசதியுடன் இயங்குகின்றன. கல்வி நிறுவனங்களும் அதிகப்படியாக உள்ளன. இங்குள்ளது போல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் வேறு எங்கும் இல்லை. அதனால்தான் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. அதனை எதிர்கொள்ளும் வகையில் நம்மிடம் போதிய மருத்துவ வசதிகள் உள்ளன. முதல் அலை, இரண்டாம் அலையின்போதும் இந்த மூன்று மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத்தான் செய்தது'' என்கிறார் மருத்துவர் சாந்தி.
மக்கள் தொகை அடர்த்தி, தொழில் நிறுவனங்கள் ஆகியவை மிக முக்கியமான காரணங்களாக உள்ளன. மருத்துவமனைகள் அதிகமாக உள்ளதால் மக்கள் நடமாட்டமும் அதிகம் உள்ளன. இதனால் தொற்று பரவக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
- கொரோனா வைரஸின் பல்வேறு அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை ஒமிக்ரான் மீண்டும் தாக்குமா?
ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் மக்கள் கூடுவதும் பிரதான காரணமாக உள்ளன. அதுதான் தொற்று அதிகரிப்பதற்கான காரணங்களாக உள்ளன.
காற்றோட்டமுள்ள இடங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும். வீடுகளிலும் ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்திருப்பது பலன் கொடுக்கும்'' என்கிறார், பொது சுகாதாரத்துறை வல்லுநர் டாக்டர் குழந்தைசாமி.
பொது சுகாதாரத்துறை சொல்வது என்ன?
மூன்று மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பதற்கான காரணங்களை சுகாதாரத்துறை ஆய்வு செய்துள்ளதா?' என தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகத்திடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
இது வழக்கமான கணக்கீடுதான். கடந்த இரு ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் அதே கணக்கீட்டு முறையைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். மாநிலம் முழுவதும் ஒரேநேரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்காது. உதாரணமாக, அமெரிக்காவில் தொற்று அதிகமாகும்போது இங்கிலாந்தில் குறையும். பிரான்ஸில் அதிகமாகும்போது ஸ்வீடனில் குறையும். எனவே, இது இயல்பானதுதான்'' என்கிறார்.
மேலும், இந்த மூன்று மாவட்டங்களில் தொற்றைத் தடுப்பதற்கு எந்தவித கூடுதல் அறிவுறுத்தல்களும் இல்லை. அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள அதே கட்டுப்பாடுகள்தான் தொடர்கின்றன. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானது'' என்கிறார் செல்வவிநாயகம்.
பிற செய்திகள்:
- சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சித்தார்த்
- பசுப் பாதுகாவலர்களை நோக்கி சுவாமி விவேகானந்தர் கேட்கும் கடினமான கேள்விகள்
- 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா ஒமிக்ரானால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்
- சமந்தா, பாவனா மன அழுத்தம் குறித்து பொதுவெளியில் பேசியது ஏன்?
- இலங்கை போலீஸாருக்கு இந்தி மொழி கற்பிக்கப்படுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்