For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொலீஜீயம் தீர்ப்பும், நீதிபதி மதன் பி லோகூரின் முரண்பட்ட பார்வையும்!

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர். மணி

இந்தியாவின் உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதி மன்றத்திலும் நீதிபதிகளை நியமிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் (என்ஜிஏசி) செல்லாதென்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்து விட்டது. நீதிபதிகள் நியமனத்தில் தற்போதிருக்கும் கொலீஜீயம் முறையே தொடரும் என்று உச்ச நீதிமன்றம் அக்டோபர் 16ம் தேதி தீர்ப்பளித்து விட்டது.

கொலீஜீயம் முறை என்பது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் உள்ள ஒரு குழு, இதில் தலைமை நீதிபதிக்கு அடுத்த முதல் நான்கு மூத்த நீதிபதிகள் இடம் பெற்றிருப்பர். இதேபோல ஒவ்வோர் உயர் நீதிமன்றத்திலும் அந்தந்த தலைமை நீதிபதி தலைமையில் ஒரு குழுவும், அதில் அவருக்கு அடுத்த முதலிரண்டு மூத்த நீதிபதிகளும் இடம்பெற்றிருப்பர். இவர்கள்தான் ஒவ்வோர் உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பர்.

1993ம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ். வர்மா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த போது நடைமுறைக்கு வந்த கொலீஜீயம் முறைப்படியே கடந்த 22 ஆண்டுகளாக நீதிபதிகள் தேர்வாகின்றனர்.

Collegium System again!

இதற்கு மாற்றாகத்தான் நரேந்திர மோடி அரசு வந்தவுடன் என்ஜிஏசியைக் கொண்டு வந்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இது தவிர இந்தியாவின் இருபதுக்கும் மேற்பட்ட மாநில சட்ட மன்றங்கள் என்ஜிஏசிக்கு அங்கீகாரம் கொடுத்து விட்டன. என்ஜிஏசி தான் உயர் நீதிமன்றத்துக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளைத் தேர்வு செய்யும் அமைப்பாக இனி மேல் இருக்கப் போகிறதென்று முடிவு செய்த மத்திய அரசு இந்த மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கும் அனுப்பியது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் இந்த மசோதாவுக்கு தனது ஒப்புதலை அளித்து விட்டார். என்ஜிஏசியில் மொத்தம் ஆறு உறுப்பினர்கள். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு மூத்த நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் சமூகத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள். இவர்கள் சமூகத்தில் ஏதாவதோர் துறையில் வித்தகர்களாக இருப்பர். இந்த இரண்டு முக்கியஸ்தர்களை பிரதமரும், நாடாளுமன்றத்தில் பெரிய எதிர்க் கட்சியின் தலைவரும், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியைக் கலந்தாலோசித்து நியமனம் செய்வர்.

இந்த இரண்டு முக்கியஸ்தர்களுக்கு வீட்டோ அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது ஒருவரை நீதிபதியாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் மற்ற இரண்டு நீதிபதிகளும் தேர்வு செய்த பிறகும் அவர் மீது திருப்தியில்லையென்று இந்த இரண்டு முக்கியஸ்தர்கள் நினைத்தால் அவரது நியமனத்தைத் தடுத்து விடலாம். இது தான் என்ஜிஏசி முறையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதற்கு முக்கியமானதோர் காரணமாக இருந்திருக்கிறது. உச்சமன்ற தலைமை நீதிபதியே ஒருவரைத் தெரிவு செய்த பிறகும் நீதித்துறைக்கு சம்மந்தமில்லாத இரு முக்கியஸ்தர்கள் வீடோ அதிகாரத்தின் மூலம் அந்த நியமனத்தை தடுப்பதென்பது சகிக்க முடியாதது என்றே ஐந்து நீதிபதிகளில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இவற்றையெல்லாம் விட சுவராஸ்யமானது ஐந்து நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி மதன் பி லோகூரின் ஒரு வாதம். தன்னுடைய 250 பக்கத் தீர்ப்பில் மதன் பி லோகூர்தான் என்ஜிஏசியை ரத்து செய்வதற்கான காரணங்களில் ஒன்றாக ஓரினச் சேர்க்கை விவகாரத்தை முன் வைக்கிறார். நீதிபதி மதன் பி லோகூர் இவ்வாறு கூறுகிறார்; ‘ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் நீதிபதிகளாக இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள் ஓரினச் சேர்க்கையாளர்களை நீதிபதிகளாக நியமனம் செய்ய ஒரு வேளை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஒருவரின் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் அவரது நீதிபரிபாலன தகுதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்ற சூழலிலும், அவரை நீதிபதியாக நியமிக்க முடியாதென்ற சூழல் உருவாகிறது. உதாரணத்திற்கு, சமீப காலமாக ஒருவரின் பாலியியல் பழக்கங்கள் மற்றும் விருப்பங்களைப் பற்றிய (ஆண் மற்றும் பெண் ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிப்பிடுகிறார்) விவாதம் சமூகத்தில் நடந்தது. நீதித் துறையில் உள்ளவர்களைப் பற்றி இது இல்லையென்றாலும் இந்த விவாதம் சமூகத்தில் எழுந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஒருவரின் பாலின பழக்க வழக்கங்கள் மற்றும் விருப்பங்கள் (ஓரினச் சேர்க்கையாளர்கள்) அரசாங்கத்துக்குப் பிடிக்காமல் போகலாம். இதனால் அந்தக் குறிப்பிட்ட நபர் நீதிபதி பதவிக்கு வர முடியாமல் போய் விடுகிறது. தலைமை நீதிபதியே அந்தக் குறிப்பிட்ட நபரின் நீதிபரிபாலன திறமை மற்றும் சட்ட அறிவில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் என்ஜிஏசி முறையில் அவரால் அந்த நபரை நீதிபதியாக நியமிக்க முடியாது' என்று தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறார்.

இது மிகவும் சுவாரஸ்யமான அதே சமயத்தில் முரண்பாடான கருத்து இது. இதே உச்ச நீதிமன்றம் தான் 2013 ம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டம் (இதச) 377 ஐ ரத்து செய்து டில்லி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை தள்ளுபடி செய்து, ஓரினச் சேர்க்கை கிரிமினல் நடவடிக்கைதான் என்று மீண்டும் நிறுவியது.

2009 ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷா தலைமையிலான டிவிஷன் பெஞ்ச், ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வந்த இந்த சட்டத்தை, அதாவது, விருப்பத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது கூட குற்றம் என்ற சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசாங்கம் மேல் முறையீட்டுக்குப் போகவில்லை. மாறாக சில தனிநபர்களும், சில மத அமைப்புகளும் போன மேல் முறையீட்டில் தான் 2013ம் ஆண்டில் டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து 160 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த இந்தச் சட்டம் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் இன்றளவும் ஓரினச் சேர்க்கை சம்மந்தப்பட்ட இருவர் மனம் ஒப்பி உறவில் ஈடுபட்டாலும் அது சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய கிரிமினல் குற்றம்தான் என்ற நிலை உள்ளது.

ஆகவே கள யதார்த்தம் இவ்வாறிருக்க, அதாவது இந்திய தண்டனை சட்டம் 377 என்பது செல்லுபடியாகத் தக்கதுதான் என்று உச்ச நீதிமன்றமே இரண்டாண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்துள்ள நிலையில் நீதிபதி மதன் பி லோகூரின் கருத்து எந்த தர்க்கத்தைச் சார்ந்தது என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

ஓரினச் சேர்க்கை என்பது தண்டிக்கப்பட வேண்டிய கிரிமினல் குற்றம்தான் என்ற 160 ஆண்டுக்கும் முந்தய, அரதப் பழசலான, பழைய பஞ்சாங்கத்திற்கு இணையான சட்டம் செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. அப்படியிருக்கையில், கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட வேண்டிய ஒருவரை, நீதிபதியாக நியமிக்க அரசு முன் வராதென்ற காரணத்தால்தான் என்ஜிஏசியை ரத்து செய்வதாக நீதிபதி மதன் பி லோகூர் தீர்ப்பில் கூறியிருப்பது கூர்மையான முரண்பாடானதாகவே உள்ளது.

ஆனால் இந்த முரண்பாட்டை, என்ஜிஏசி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கடுமையாக விமர்சிக்கும் மத்திய நிதியமைச்சரும், நாட்டின் முன்னணி சட்ட நிபுணர்களில் ஒருவருமான அருண் ஜெட்லியோ அல்லது இந்த தீர்ப்பை விமர்சிப்பவர்களோ கோடிட்டும் காட்டவில்லை என்பதுதான் ஆச்சரியமானது.

கடுமையான முரண்பாட்டின் அடிப்படையில், மிக முக்கியமான விஷயத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு தீர்ப்பை அளித்திருக்கிறார். ஆனால் சுய முரண்பாடுகள் இவ்வளவு இருந்தும் இதனை குறிப்பாகச் சுட்டிக் காட்டி. விவாதத்தை கூர்மையாக்க பாஜகவினர் உள்ளிட்ட எவரும் முனையவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இதற்கு ஒரு காரணம் ஓரினச் சேர்க்கையாளர்கள் சம்மந்தமாக எந்தவோர் விவாதத்துக்கும் ஆட்சியாளர்களும், அரசும் தயாராக இல்லை என்பதுதான். இதில் மற்றோர் உபரி சுவாராஸ்யமான தகவல், 2013ல் உச்ச நீதிமன்றம் இந்திய தண்டனை சட்டம் 377 செல்லுபடியாகும் என்றே தீர்ப்பளித்த போது பாஜகவில் பெரும்பாலானோர் அதனை வரவேற்றனர், சிலர் அமைதி காத்தனர். ஆனால் அருண் ஜெட்லி இந்தச் சட்டம் தேவையற்றது, ஒருவரின் பாலியியல் பழக்கங்கள் என்பது தனி மனித உரிமை சார்ந்த விஷயம் என்று முற்போக்காகப் பேசினார். ஆனால் நீதிபதி மதன் பி லோகூரின் இந்தக் குறிப்பிட்ட கருத்தை இப்போது அருண் ஜெட்லியும் தொடவில்லை.

இதனிடையே என்ஜிஏசி விவகாரத்தில் மூக்குடைப்பட்டுப் போயிருக்கும் மோடி அரசு அடுத்தக் கட்ட நடவடிக்கைப் பற்றி திசையறியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் இந்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தால் தாங்கள் இம் மசோதாவை ஆதரிக்கப் போவதில்லை என்று காங்கிரஸ் தெளிவுபடுத்தி விட்டது. ஆகவே மீண்டும் நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற வாய்ப்புகள் இல்லை. இந்த தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம், காரணம் இந்த தீர்ப்பு பரிபூரணமானதாக இருக்கிறது என்று மத்திய அரசு வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகியும் தெளிவுபடுத்தி விட்டார். ஆகவே எவ்வளவு குறைகள் இருந்தாலும் இன்னும் சில ஆண்டுகளுக்காவது நீதிபதிகள் தங்களைத் தாங்களே நியமித்துக் கொள்ளும் கொலிஜீயம் முறைதான் தொடரப் போகிறது என்பதே கள யதார்த்தம்.

English summary
Due to the conflict in Justice Madan Lokur's judgement against NAGC, the collegium system is came back in justice appointment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X