கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம்
உத்தர்காசி: கோயிலுக்குள் நுழைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அங்கிருந்த சிலர் தீப்பந்தத்தை கொண்டு தாக்கிய சம்பவம் உத்தரகாண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர், அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் புகார் அளித்தும், உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அதிகரிக்கும் ஜாதிய கொடுமைகள்
நாட்டில் கடந்த சில மாதங்களாகவே ஜாதியின் பெயரால் அரங்கேற்றப்படும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, தலித் மக்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்துள்ளன. கர்நாடகாவில் இரு தினங்களுக்கு முன்பு கோயிலுக்கு சென்ற தலித் பெண், கோயில் நிர்வாகிகளால் சரமாரியாக தாக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவும் இந்த அலவம் நடந்தது ஏதோ கிராமத்தில் கிடையாது. மெட்ரோ நகரமான பெங்களூரில் நடந்ததுதான் கொடுமையிலும் கொடுமை. இதேபோல, சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சாமி சிலையை தொட்டதற்காக தலித் சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட நிகழ்வு, நாம் 21-ம் நூற்றாண்டில்தான் வாழ்ந்து கொணடிருக்கிறோமா என சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உத்தரகாண்டில் நடந்த கொடூரம்
அந்த வகையில், உத்தரகாண்டில் ஜாதியின் பெயரால் இளைஞருக்கு நேர்ந்திருக்கும் கொடுமை, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள பைனோல் கிராமத்தைச் சேரந்தவர் ஆயுஷ் (22). இவர் தனது உடல்நிலை சரியில்லாத தாயாருக்காக பல கோயில்களில் வேண்டி இருந்ததாக கூறப்படுகிது. இதனிடையே, அவரது தாயார் குணம் அடைந்ததை அடுத்து, தான் வேண்டிக்கொண்ட கோயில்களில் நேர்த்திக்கடன் செலுத்தி வந்துள்ளார் ஆயுஷ்.

கோயிலுக்குள் எப்படி நுழைந்தாய்?
இந்நிலையில், அண்டை கிராமமான சால்ராவில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலுக்கு ஆயுஷ் கடந்த 9-ம் தேதி சென்றுள்ளார். அப்போது கோயிலில் வழிபட்டு கொண்டிருந்த சிலர், ஆயுஷை பார்க்க வெளியூர் போல இருந்ததால் அவரிடம் யார் -என்ன என்று விசாரித்துள்ளனர். இதில் ஆயுஷ், தலித் வகுப்பை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த வேறு ஜாதியை சேர்ந்தவர்கள், "எங்கள் கோயிலுக்குள் நுழையும் அளவுக்கு உனக்கு துணிச்சல் வந்துவிட்டதா.." எனக் கேட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தீப்பந்தத்தால் இரவு முழுவதும்..
அடி தாங்க முடியாத அந்த இளைஞர், "என்னை விட்டுவிடுங்கள் நான் சென்றுவிடுகிறேன்" என கெஞ்சிய போதும் அந்த இரக்கமற்ற கும்பல் அவரை விடவில்லை. பின்னர், கோயில் வளாகத்தில் அவரை கட்டி வைத்து தீப்பந்தத்தால் இரவு முழுவதும் அடித்துள்ளனர். இதில் உடல் முழுவதும் அந்த இளைஞருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அடுத்த நாள் அங்குள்ள காவல் நிலையத்தில் ஆயுஷ் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி புகார் அளித்தார். ஆனால், அங்கிருந்த போலீஸாரோ உடனடியாக வழக்கு பதியாமல் அலட்சியம் செய்துள்ளனர். பின்னர், இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பூதாகரமானதை அடுத்து, 4 நாட்களுக்கு பிறகு நேற்றுதான் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மீது எஸ்சி/எஸ்டி பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால், இதுவரை ஒருவரை கூட போலீஸார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
