கோவாவில் ஆடுகளை போல எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கிய பாஜக... காங். பொளேர் அட்டாக்
பனாஜி: கோவா மாநிலத்தில் ஆடுகளை போல காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை பேரம் பேசி வாங்கியது பாஜக என கர்நாடகா காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் கோவா மாநில தேர்தல் பொறுப்பாளருமான டி.கே.சிவகுமார் சாடியுள்ளார்.
கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கோவா மாநில தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
3 பேரில் ஒருவர் பலியாக வாய்ப்பு.. நியோ கோவ் உருமாறிய வைரஸ் பற்றி வூஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
கோவாவில் ஆளும் பாஜக அமோக வெற்றியைப் பெறும் என்கின்றன கருத்து கணிப்புகள். காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்குமாம். அதுவும் காங்கிரஸுக்கு 3-வது இடம்தான் என்கின்றன இக்கருத்து கணிப்புகள்.

காங். நிலவரம்
கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. மாநில கட்சிகள், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை இழுத்து ஆட்சியை அமைத்தது பாஜக. காங்கிரஸ் கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு கூண்டோடு தாவினர். இது காங்கிரஸுக்கு பெரும் பின்னடைவானது. அத்துடன் எஞ்சிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் அண்மையில் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்தனர்.

அனுமதிக்க முடியாது
இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உஷாராகவே, வேட்பாளர்களிடம் வெற்றி பெற்ற பின்னர் கட்சி மாற மாட்டோம் என வாக்குறுதியை பெற்றுள்ளது. இந்த நிலையில் பனாஜியில் இன்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரும் கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த 13 எம்.எல்.ஏக்களில் 10 பேர் என்னை சந்தித்தனர். மீண்டும் காங்கிரஸுக்கு திரும்பி வர விருப்பம் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் யாரையும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேர்க்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துவிட்டோம்.

ஆடுகளைப் போல பேரம்
செம்மறி ஆடுகளை பேரம் பேசி விலைக்கு வாங்குவது போல காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பாஜக கோவாவில் பெருந்தொகையான பணம் கொடுத்து வாங்கியது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ30முதல் ரூ40 கோடி வரை பேரம் பேசியது பாஜக. இதனை கோவா சட்டசபையிலேயே சிலர் பகிரங்கமாக தெரிவித்தனர். சிலருக்கு அட்வான்ஸ் மட்டும் கொடுத்து கட்சியில் இணைத்தது பாஜக. பாஜக பணபலத்தை நம்பியே தேர்தலை எதிர்கொள்கிறது.

புதுமுகங்கள், இளைஞர்கள்
கோவாவில் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் எம்.எல்.ஏக்களை பாஜக விலைபேசி வாங்கியது. இனி ஒருமுறை அந்த தவறு நிகழ அனுமதிக்கமாட்டோம். இந்த தேர்தலில் இளைஞர்கள், புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். இவ்வாறு டி.கே.சிவகுமார் கூறினார்.