இரும்பு தாது சுரங்க முறைகேடு வழக்கு: குமாரசாமி முன்ஜாமீன் மனு நிராகரிப்பு - கைதாக வாய்ப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: இரும்பு தாது சுரங்க முறைகேடு வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் குமாரசாமி கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் இரும்பு தாது சுரங்கம் அமைப்பது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. இதில் முன்னாள் முதல்வர்கள் தரம்சிங், எஸ்.எம் கிருஷ்ணா, குமாரசாமி மற்றும் முக்கிய அதிகாரிகள் மீது புகார் எழுந்தது.

HD Kumaraswamy denied bail in mining scandal

கடந்த 2001 முதல் 2007 வரையிலான காலகட்டத்தில் கர்நாடக முதல்வராக இருந்த தரம் சிங் (காங்கிரஸ்), குமாரசாமி (மஜத) உள்ளிட்டோர் சட்ட விரோதமாக தனியார் நிறுவனங்களுக்கு சுரங்கம் அமைக்க அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது. இதில் முதல்வர் அலுவலகத்துக்கும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், குமாரசாமி ரூ.1.7 கோடி லஞ்சம் பெற்றதாகவும் கர்நாடக லோக் ஆயுக்தா போலீஸார் 2007ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தனர்.

இதுதொடர்பாக ஆபிரகாம் என்பவர் அளித்த புகாரின் பேரில் லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே விசாரித்து முன்னாள் முதல்வர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு இந்த முறைகேட்டில் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் பி.சி.கோஷ் மற்றும் நாரிமன் அடங்கிய அமர்வு கடந்த மார்ச் மாதம் விசாரித்தது. அப்போது, முன்னாள் முதல்வர்கள் தரம்சிங் மற்றும் குமாரசாமி ஆகியோர் மீதான புகார் தொடர்பாக கர்நாடக போலீசின் சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரித்து மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இவ்வழக்கில் முன்னாள் முதல்வர் தரம் சிங், ஐஏஎஸ் அதிகாரி கங்காராம் பதேரியா உள்ளிட்டோர் லோக் ஆயுக்தா போலீஸார் முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளன‌ர். ஆனால் குமாரசாமி விசாரணைக்கு ஆஜராகாமல் விலக்கு கோரி வந்தார். இது தொடர்பாக லோக் ஆயுக்தா காவல்துறையினர் பெங்களூரு மாவட்ட‌ முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இவ்வழக்கு கடந்த மே மாதம் விசாரணைக்கு வந்தபோது குமாரசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அஸ்மத் பாஷா, நாங்கள் சுரங்க முறைகேடு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். குமாரசாமி மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் இவ்வழக்கில் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை என்பதால், மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மேலும் இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராவது தொடர்பாக எவ்வித அழைப் பாணையும் குமாரசாமிக்கு வழங்கப்படவில்லை. எனவே குமாரசாமிக்கு நிபந்தனையற்ற‌ முன் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சுரங்க முறைகேடு வழக்கில் குமாரசாமிக்கு முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதே நேரத்தில் 7 நாட்களுக்குள் குமாரசாமி லோக் ஆயுக்தா போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

ஆனால் நீதிமன்றம் அளித்த சலுகையை குமாரசாமி தவறாக பயன்படுத்திக்கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் குமாரசாமி லோக் ஆயுக்தா போலீஸ் முன்பு விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது குமாரசாமி சார்பில் மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அவருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. முன்ஜாமீன் நிராகரிக்கப்பட்டதால் குமாரசாமி கைதாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Karnataka chief minister and Janata Dal (Secular) party’s state president HD Kumaraswamy was denied anticipatory bail by a special court on Tuesday in the Janthakal mining case
Please Wait while comments are loading...