For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொட்டித் தீர்த்த கனமழை... போக்குவரத்து நெரிசலால் திணறிய மும்பை

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

மும்பையில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே மும்பையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

Heavy rain hits normal life in Mumbai

நேற்று அதிகாலை நேரத்தில் பலத்த மழை சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மாகிம் ரயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர் பகுதியில் முழங்கால் அளவுக்கு மழை நீர் தேங்கியது. இதனால் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியாமல் சிரமத்திற்குள்ளாயினர்.

இதனால், அங்கு சில பகுதிகளில் தேங்கியிருந்த மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் மோட்டார்களைக் கொண்டு வெளியேற்றினர்.

போக்குவரத்து பாதிப்பு

இதேபோல மும்பையின் பரேல் இந்துமாதா பகுதி, தாராவி 90 அடி சாலை, கிராஸ்ரோடு, சயான் உள்ளிட்ட பல பகுதிகளிலும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் ஓடிய வெள்ள நீரால் கிழக்கு, மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் நேற்று காலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். மேலும், காலை நேரத்தில் மின்சார ரயில்களும் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களும், அலுவலகம் செல்பவர்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். பிற்பகலுக்குப் பின்னரே இயல்பு வாழ்க்கை திரும்பியது.

விமானப் போக்குவரத்து பாதிப்பு

கனமழை காரணமாக மும்பை சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் சுமார் 20 நிமிடம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், விமானங்கள் தரையிறங்குவதும், புறப்படுவதும் தாமதமாயின.

கார்களின் மீது விழுந்த மரம்

மும்பையின் புறநகர் பகுதியான மலாடுவில் மரம் ஒன்று கார்களின் மீது சாய்ந்து விழுந்தது. இதில் காரினுள் இருந்த ஒருவர் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தில் 2 பேர் லேசாக பாதிக்கப்பட்டனர்.

ஏரிகள் நீர் மட்டம் உயர்வு

இந்த மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்தது. தொடர்ந்து மழை பெய்தால் ஏரிகள் விரைவில் நிரம்ப வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மழைக்கு வாய்ப்பு

மும்பையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என மும்பை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த 36 மணி நேரத்தில் 80 மிமீ அளவுக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Due to heavy rain in Mumbai, Traffic jams were reported from arterial roads like Western Express Highway, Eastern Express Highway and Jogeshwari-Vikhroli Link Road as people struggled to get to work.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X