ஒருவழியாக.. 49-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எம்.எல்.ஏ.. குவியும் பாராட்டு!
புவனேஷ்வர்: ஒடிசா எம்.எல்.ஏ பூர்ணா சந்திர ஸ்வைன் தனது 49வது வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவரை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
ஒடிசா மாநிலம் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) கடந்த மாதம் பள்ளிகளுக்கு தேர்வு நடத்தியது. மொத்தமுள்ள 15,155 மாணவர்களில், 6,596 பேர் 10-ம் வகுப்பு தேர்வுக்கும், 8,493 பேர் மாநில திறந்தநிலை பள்ளி சான்றிதழ் தேர்வுக்கும், மற்றும் 66 பேர் மதிமா தேர்வுக்கும் விண்ணப்பித்து இருந்தனர்.
தற்போது இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன . 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 80.83 சதவீத பேர் அல்லது 5,233 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 141 பேர் தோல்வியடைந்துள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் 3,100 பேர் ஆண்கள். 2,133 பேர் பெண்கள்.

எம்.எல்.ஏ தேர்ச்சி
இந்த நிலையில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய எம்.எல்.ஏ. ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளார். ஆளும் பிஜு ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ பூர்ணா சந்திர ஸ்வைன் தனது 49 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவர் பி 2 தரத்துடன் தேர்வில் தேர்ச்சி பெற்று, 500 க்கு 340 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் வீட்டு அறிவியலில் 83 மதிப்பெண்கள், சமூக அறிவியலில் 61 மதிப்பெண்கள் மற்றும் ஒடியாவில் 67 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மதிபெண்கள்
ஆங்கிலத்தில் 44 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பூர்ணா சந்திர ஸ்வைன் சூரதா தொகுதியில் மூன்றாவது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். முன்னதாக இவர் கஞ்சம் மாவட்டம் ரதாவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியது குறிப்பிடத்தக்கது. தனது விடாமுயற்சியால் 49-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ பூர்ணா சந்திர ஸ்வைனை பலரும் பாராட்டி வருகினறனர்.

பலரும் பாராட்டு
மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்தபோதிலும் படிப்பின் அருமையை உணர்ந்து 49-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள பூர்ணா சந்திர ஸ்வைன், பள்ளி படிப்பில் இருந்து பாதியில் வெளியேறுபவர்களை படிக்கும்படி ஊக்கப்படுத்துவதாக அமைந்துள்ளது என்று ஒரு சிலர் கருத்து கூறியுள்ளனர். அதே வேளையில் இதில் எதிர் கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

சில கருத்துக்கள்
பத்தாம் வகுப்பு கூட இப்போதுதான் தேர்ச்சி பெற்றுள்ள இவர் எப்படி மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருக்க முடியும். மக்கள் பிரச்சினையை எப்படி தீர்க்க முடியும். ஆகையால் தேர்தலில் போட்டியிட அரசியல்வாதிகளுக்கு குறிப்பிட்ட கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல்வேறு நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications