For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தட்ஸ்தமிழ் எக்ஸ்குளூசிவ்: தேஜாஸ் போர் விமானத்துக்கான உள்நாட்டு இன்ஜின் தயாரிப்பு கைவிடப்பட்டது

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: போர் விமானங்களுக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வந்த காவேரி இன்ஜின் (GTX-35VS ) திட்டத்தை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) கைவிட முடிவு செய்துள்ளது.

இந்தியாவின் இலகு ரக போர் விமானமான தேஜாஸ் ரக விமானங்களுக்கு பொருத்தும் இன்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்திருந்தது டிஆர்டிஓ. அதன் ஒரு பகுதியாக காவேரி என்ற பெயரில் இன்ஜின் தயாரிக்கும் பணி பெங்களூருவை சேர்ந்த Gas Turbine Research Establishment (GTRE) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

1980களின் மத்தியில் இருந்து இன்ஜின் தயாரிக்கும் முயற்சிகள் தொடங்கி நடந்து வருகின்றன. இதுவரை அந்த அமைப்பு ரூ.2,106 கோடியை இத்திட்டத்திற்காக செலவிட்டுள்ளது. இந்த அமைப்பு தயாரித்த இன்ஜினை கொண்டு ரஷ்யாவில் சோதனை முயற்சி நடத்தப்பட்டது. அப்போது சுமார் 73 மணி நேரங்கள் இன்ஜின் இயக்கப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இன்ஜின் இயக்கத்தில் இது மிகவும் குறைந்த காலகட்டமாகும்.

இன்ஜின் தரம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத நிலையில், காலதாமதம் மிக அதிகமாக உள்ளதால், காவேரி இன்ஜின் தயாரிப்பு திட்டத்தை கைவிட டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது. தனது முடிவை மத்திய நிதி அமைச்சகத்துக்கு டிஆர்டிஓ அனுப்பியுள்ளது. நிதி அமைச்சகம் ஒப்புதல் அளித்த பிறகு, பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை கமிட்டியின் ஒப்புதலையும் பெற வேண்டியது அவசியம். இந்த நடைமுறைகளுக்கு ஓராண்டாவது தேவைப்படும்.

காவேரி திட்டம் கைவிடப்படுவதால், தேஜாஸ் எம்கே-1 வகை விமானங்களுக்கு GE 404 வகை இன்ஜின்களையும், தேஜாஸ் எம்கே-2 வகை விமானங்களுக்கு GE 414 வகை இன்ஜின்களையும் பயன்படுத்திக்கொள்ள டிஆர்டிஓ முடிவு செய்துள்ளது.

டிஆர்டிஓ டைரக்டர் ஜெனரல் டாக்டர் கே.தமிழ்மணி, இந்த தகவல்களை உறுதி செய்தார். 'ஒன்இந்தியாவிடம்' மேலும் அவர் கூறுகையில், காவேரி திட்டத்தை கைவிடும் தைரியமான முடிவை டிஆர்டிஓ எடுத்துள்ளது உண்மைதான். எங்கெல்லாம் தாமதம் நிலவுகிறதோ, எங்கெல்லாம் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்று தெரிகிறதோ, அங்கெல்லாம் தேங்கி நிற்பதை விட்டுவிட்டு அடுத்த முயற்சிக்கு செல்வதுதான் நல்லது. இது ஒரு நேர்மையான முடிவு" என்று தமிழ்மணி தெரிவித்தார்.

டிஆர்டிஓ, தனது பணியில் வேகம் காண்பிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி சமீபத்தில் தெரிவித்த கருத்துதான், உங்களின் இந்த முடிவுக்கு காரணமா என்று கேட்டதற்கு நேரடியாக பதிலளிப்பதை தவிர்த்த தமிழ்மணி, "நாம் 50 கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டுமே ஓடிச்செல்ல முடியும் என்று தெரியும்போது எதற்காக 100 கிலோமீட்டர் ஓட முயல வேண்டும்? கடந்த காலங்களில் நடந்த தவறுகளை டிஆர்டிஓ உணர்ந்துள்ளது. எனவே தயக்கமின்றி தவறுகளை திருத்தும் தைரியமான முடிவுகளை எடுத்து வருகிறோம்" என்றும் தெரிவித்தார்.

OneIndia Exclusive: DRDO to abandon Kaveri project; GTRE gets revival package

காவேரி இன்ஜின் தயாரிப்பு நிறுவனமான Gas Turbine Research Establishment-ன் இயக்குநர் டாக்டர், சி.பி.ராமநாராயணன், 'ஒன்இந்தியா'விடம் கூறுகையில், எங்களுக்கான பாதை முடிந்து விட்டதாக கருதவில்லை. காவேரி போல, மேலும் 12 திட்டங்களை கைவசம் வைத்துள்ளோம். உலகின் பல நாடுகள் முயற்சி செய்யாததை நாம் செய்துள்ளோம். அதில் காலதாமதம் ஏற்பட்டாலும், குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளோம். இந்த அனுபவம் வீண் போகாது. விமான இன்ஜின் தயாரிப்பில் இந்தியா தன்னிறைவை அடைய வேண்டும் என்றார்.

காவேரி இன்ஜினை தயாரித்து வந்த நிறுவனம் வேறு வகை இன்ஜினை தயாரிக்க உதவும் வகையில் டிஆர்டிஓ ரூ.300 கோடியை ஒதுக்கியுள்ளது. கூடுதலாக ரூ.700 கோடி விரைவில் ஒதுக்கப்பட உள்ளது.

English summary
The Defence Research and Development Organisation (DRDO) has decided to wind up the Kaveri engine (GTX-35VS ) programme, signaling an end to a desi dream of equipping its own fighter jet with a home-grown power plant. Sources in the Ministry of Defence (MoD) confirmed to OneIndia on Tuesday that the DRDO has already moved a file recently seeking the closure of the ambitious engine development project undertaken by Bengaluru-based Gas Turbine Research Establishment (GTRE).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X