ஆட்கொல்லி புலியை பிடிப்பதில் சிக்கல்.. ஒரே இடத்தில் சுற்றி வரும் 4 புலிகள்.. குழப்பத்தில் வனத்துறை
மசினக்குடி: நீலகிரி மாவட்டம் மசினக்குடியில் ஆட்கொல்லி புலியை தேடும் பணியில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரே இடத்தில் 4 புலிகள் சுற்றுவதால் எது ஆட்கொல்லி புலி என்று அறிந்து கொள்வதில் குழப்பம் நிலவுகிறது.
Recommended Video
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சுற்றித் திரியும் ஆட்கொல்லி புலியை உயிருடனோ அல்லது முடியாமல் போனால் சுட்டோ பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கவுரி என்ற பெண்ணை இந்த புலி கொன்றது.
பின்னர் மசினக்குடியிலிருந்து கூடலூர் நகர்ந்த புலி, தேவன் டீ எஸ்டேட் பகுதியில் குஞ்சு கிருஷ்ணன், சந்திரன் ஆகிய இருவரை கொன்றது. இந்த ஆட்கொல்லி புலிக்கு மனிதர்களும் கால்நடைகளும் பலியாவது தொடர்கதையாகி வந்தது.

மயக்க ஊசி
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறைக்கு அழுத்தம் தரும் விதமாக போராட்டங்களை மக்கள் முன்னெடுத்து வந்தனர். இதையடுத்து மயக்க ஊசி செலுத்தி புலியை பிடிக்க வனத்துறை முடிவுக்கு வந்தது. இதையடுத்து அடர்ந்த வனப்பகுதி என்பதால் புலி மயக்க ஊசி போடுவதற்கும் சிக்காமல் இருந்து வந்தது.

மசினக்குடிக்கு வந்த புலி
இந்த நிலையில் டீ எஸ்டேட்டில் இருந்து மசினக்குடி வந்ததாக கூறப்படும் இந்த புலி சிங்காரா வனப்பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த மங்கள பசுவன் என்பவரை அடித்துக் கொன்றது. மசினக்குடி பகுதியில் புலி ஒவ்வொருவரையாக அடித்து கொன்று வருவதால் புலியை பிடிக்க மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

20 பேர் கொண்ட குழு
இதையடுத்து புலியை பிடிப்பதற்கான உத்தரவை அடுத்து அதிரடிப் படையினர் தயார் நிலையில் தேடி வருகிறார்கள். 20 பேர் 5 குழுக்களாக பிரிந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் 6 பேர் கொண்ட 3 வனக் குழுவினரும் வனப் பகுதிக்குள் சென்றுள்ளனர். புலியை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை மோப்ப நாய் ஒன்று வந்துள்ளது.

ஆட்கொல்லி புலி
ஆட்கொல்லி புலியின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படும் அதே இடத்தில் வேறு 4 புலிகளின் நடமாட்டமும் உள்ளதால் வனத்துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். மாற்று புலியை பிடித்துவிடக் கூடாது என்பதால் புலியின் அடையாளங்களை வைத்து அதை சிங்காரா பகுதியில் தேடி வருகிறார்கள். புலியை கண்டவுடன் முதலில் மயக்க ஊசி செலுத்திவிட்டு பின்னர் பிடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில் தமிழக, கேரள வனத் துறையினர் ஈடுபட்டுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications